ஞாயிறு, 6 அக்டோபர், 2013

தமிழை அழிக்கலாம் வாங்க!!!

‘கல்வி மாவட்டம்’ என்று போற்றிப் புகழப்படும் நாமக்கல்லில், நீங்கள் தடுக்கி விழுந்தால் ஏதேனுமொரு ஆங்கிலவழிப் [English Medium]பள்ளி வாசலில்தான் விழுவீர்கள்!

அத்தனை பள்ளிகள்!

தமிழ்நாடு அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை அமலாக்கிய போது, “ஏழை எளிய மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியைக் கொடுக்க முடியலையே”ன்னு பல ஆங்கிலப் பள்ளித் தாளாளர்களும் கண்ணீர் விட்டு அழுததாகச் சொல்வார்கள்!!!

அப்புறம் மனம் தேறி, CBSE [Central Board of Secondary Education] க்கு மாறினார்கள்.

அதிலும் திருப்தி அடையாமல், International School எல்லாம் ஆரம்பித்திருக்கிறார்கள். அதென்ன, International Schoolனா ஐ. நா.சபையில் அங்கீகாரம் வாங்கணுமான்னு கூமுட்டத்தனமா கேட்டு வைக்காதீர்கள். CBSE க்குத்தான் இப்படியொரு 'உலகத்தரம்’கிற போர்வை போர்த்து எல்லாரையும் முட்டாள் ஆக்கிட்டிருக்காங்க.

இந்த மாதிரி பள்ளியில் பிள்ளையைச் சேர்த்துட்டு, “என் புள்ள நாமக்கல் International School ல படிக்கிறானாக்கும்”னு சொல்லிக்கொண்டு திரிபவர்களை நீங்கள் இன்னும் சந்தித்ததில்லையா?!

இந்த மாவட்டத்தில், ஆங்கிலம் வளர்க்கிற...ஆங்கிலக் கல்வி வளர்க்கிற, ‘கல்வித் தந்தைகள்’...மன்னிக்கணும், ‘கல்விக் கடவுள்கள்’ நிறையவே இருக்கிறார்கள்.

இவர்கள், ஆங்கிலத்தை மட்டுமல்ல, இந்த நாட்டின் தேசிய மொழியாக ஆக்கப்பட்ட இந்தியையும் வளர்க்கிறார்கள்.

இந்தி மொழியைக் கற்றுத் தருவதோடு, ‘இந்தி தினம்’ எல்லாம் கொண்டாடி, மாணவர்கள் மனதில் இந்திப் பற்றை ஆழமாகத் திணிக்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.

ராசிபுரம், ’எஸ்.ஆர்.வி.எக்ஸெல்’ என்னும் பள்ளி, முந்தைய தினத்தில் ‘இந்தி தின விழா’ கொண்டாடியிருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நாமக்கல் சப்-கலெக்டர் அஜய் யாதவ், “நம் தேசிய மொழியான இந்தியைத் திறம்படக் கற்க வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். இச்செய்தியைத் தினத்தந்தியில்[06.10.2013] படிக்க நேர்ந்தது.

இந்தப் பள்ளிகள், ’ஆங்கில தினம்’, கொண்டாடுவதோடு ‘இந்தி தினமும்’ தவறாமல் கொண்டாடுகின்றன. [என்ன காரணமோ, முன்பெல்லாம்  இவர்கள் தினசரிகளுக்குச் செய்தி தருவதில்லை. இப்போது, துணிவு பிறந்துவிட்டது!]

‘ஆங்கில தினம்’, ‘இந்தி தினம்’ கொண்டாடுவது போல், ‘தமிழ் தினம்’ கொண்டாடும் ஆங்கிலவழிப் பள்ளியை [தமிழ்ப் பள்ளிகளே கொண்டாடுவதில்லை என்பது வேறு விசயம்] நான் இன்றுவரை கண்டதில்லை; கேள்விப்பட்டதுமில்லை. நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

இல்லை என்றால், அதற்காக வருத்தப்பட்டதுண்டா?

“ஆம்” என்றால் பொது அறிவில்லாத அப்பாவி நீங்கள்!

“இல்லை” என்றால் புத்திசாலி.

தமிழர்களில், மிகப் பெரும்பாலோருக்கு [999/1000] மொழிப் பற்றோ இனப் பற்றோ இல்லை; மேடைகளில் தமிழ் முழக்கம் செய்தால் மட்டுமே கை தட்டுபவர்கள் இவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தமிழர்களில் பலரும், ஆங்கிலம் தெரிந்தால் [ஒரு மொழியைக் கற்பதற்கும் மொழியில் கல்வி கற்பதற்கும் வேறுபாடு அறியாதவர்கள் இவர்கள்] உலகெங்கும் வேலை கிடைக்கும். இந்தி தெரிந்தால் தமிழகம் தவிர்த்த மாநிலங்களில் வேலை தேடலாம் என்று நம்புகிறவர்கள்.

‘நம் பாரம்பரியத்தைக் காப்பதற்காகத் தாய் மொழி கற்போம். தேவைக்கேற்பப் பிற மொழிகளும் கற்போம்’ என்ற உயரிய கொள்கை இல்லாதவர்கள். [இது பற்றியெல்லாம் தமிழுணர்வாளர்கள் நிறையவே பேசிவிட்டார்கள்; எழுதிவிட்டார்கள்]

இவர்கள் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதைக்கூட வெறுக்கிறார்கள்.

 தமிழன் என்று சொல்லிக்கொண்டே, “மொழி வெறி கூடாது” என்று மேடையேறிச் சிலர் அஞ்சாமல் பேசுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இம்மாதிரித் தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பதுதான்.

இவர்களை இப்படிப் பேச இனியும் அனுமதிக்கலாமா?

அனுமதிக்காமல் நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

“இப்படிப் பேசிப் பேசித்தான் தமிழை அழியும் நிலைக்கு ஆளாக்கிவிட்டீர்கள். தமிழ் அழியும் நிலையில் இருக்கிறது. அதைக் காப்பாற்ற மொழி வெறியர்கள் தேவை... தேவை...தேவை” என்று முழக்கமிட வேண்டும். இன்னொரு முறை இப்படிப் பேசினால் நடப்பது வேறு” என்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.


தேவை நேர்ந்தால், என்ன நடக்கும் என்பதைச் செயல்படுத்திக் காட்ட வேண்டும்


செயல்படும் துணிச்சல் இல்லையென்றால், நாமும் அவர்களோடு இணைந்து ‘தமிழ் அழிப்பு’ வேலையைச் செய்யலாம்.

“ஆங்கிலம் படித்தால் அயல்நாடுகளில் வேலை கிடைக்கும். இந்தி படித்தால் மத்திய அரசில் வேலை கிடைக்கும். தமிழ் படித்தால் என்ன கிடைக்கும்?" என்று அவர்கள் வழியில் மேடை ஏறி முழங்கலாம்.

பிள்ளைகளுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழ்ப் பெயர் வைப்பதை அறவே தவிர்க்கலாம். ஏன், வீட்டில் தமிழ் பேசுவதையே தடை செய்துவிடலாம்.

இந்தி படித்து முழு இந்தியனாக மாறிவிடலாம். வாய்ப்புக் கிடைத்தால் அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ குடியேறி அந்நாட்டு நிரந்தரக் குடிமகனாக [ஆங்கிலேயனாக] மாறலாம்.

இவற்றில் நாம் ஏற்றுச் செய்ய வேண்டியது எது என்று முடிவு செய்ய வேண்டிய இக்கட்டான தருணம் இதுவாகும்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



























வெள்ளி, 4 அக்டோபர், 2013

"தமிழ்நாடு பிரியும்” ---சுஜாதா அன்று ஏன் இப்படிச் சொன்னார்?!?!

இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, 'நீட்' திணிப்பு, மூடநம்பிக்கைத் திணிப்பு, கடைசியாகக் கன்னடன் சூரப்பாவின் துணைவேந்தர் நியமனம்  என்று எதை எதையோ திணி திணி என்று திணித்துக்கொண்டிருக்கிறது மோடி அரசு. 

அடுத்து வருவது, சற்று முன்னர்[08.09.2020 காலை 07.35 மணி] தினத்தந்தி நாளிதழில் வாசித்த ‘திடு’ செய்தி.

//                                   இந்திப் பிரிவில் தமிழர்களுக்குப் பணி

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தித் திணிப்பு

                 ஜி.எஸ்.டி. உதவி கமிஷணர் பரபரப்புக் குற்றச்சாட்டு                //

தமிழனுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்துகிற இன்றைய சூழலில் எழுத்தாளர் சுஜாதாவின் இக்கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகிறது.

“இன்னும் முப்பத்தேழு ஆண்டுகளில் தமிழ்நாடு ஒரு சுதந்திரப் பிரதேசம் ஆகும்” என்று 1993 இல் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் சுஜாதா. அவர் தீர்க்கதரிசியல்ல; ஆனாலும் சிறந்த சிந்தனையாளர்; மகா புத்திசாலியும்கூட!

கட்டுரையை ஐந்தில் ஒரு பங்காகச் சுருக்கியிருக்கிறேன்.

இன்றைய தினம் லட்சக்கணக்கானவர்கள் டைப் அடித்தும், கயிறு சுற்றியும், மூடி போட்டும், லேபிள் ஒட்டியும் அற்பத்தனமான வேலைகளில் சிறைப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையிலிருந்து அவர்கள் விடுதலை பெற்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள், டெக்னாலஜி மூலம்.

இப்போது பல வேலைகள் புதிதாகத் தோன்றிக்கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

ஆஸ்பத்திரிகளில் ஸிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் எடுப்பது; ஃபேக்ஸ் எந்திரம், டெலிபிரிண்டர் ரிப்பேர் செய்வது. கிராமங்களில், சூரிய ஒளி பானல்கள் அமைப்பது; டி.வி க்கு இணைப்புத் தருவது; வீடு வீடாகப் போய் டெலிஃபோனுக்கு செண்ட் அடிப்பது என்று நிறையப் புதுப் புது வேலைகள்.

எல்லாமே சுவாரஸ்யமானவை.

இனி, சுவாரஸ்யமற்ற வேலைகளைக் கணிப்பொறிகள் மட்டுமே செய்யும்.

புதிய வேலைகளுக்குப் புதிய புதிய திறமை கொண்ட மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.

இம்மாதிரி தொழில் தெரிந்தவர்களுக்கு மதிப்பு அதிகம்; வருமானமும் அதிகம். ஒரு நாள் டெக்னீஷியன் வரவில்லையென்றால், சில டாக்டர்கள் ஆயிரக் கணக்கில் வருமானம் இழப்பார்கள்.

இனி வருங்காலத்தில், தவிர்க்க இயலாத இந்த டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியால், சில அடிப்படைகள் கலைக்கப்பட்டுவிடும்.

அறுபது, எழுபது வயது முதியவர், டெலிஃபோன் மூலம் ஒரு சிக்கலான சாதனத்தைப் பழுது பார்த்துத் திருத்த முடியும்; தூரத்தில் உள்ள பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தருவார், தன் ஞானத்தை...அனுபவத்தைப் பயன்படுத்தி, ஒரு தாய் தொட்டிலை ஆட்டிக்கொண்டே அவ்வப்போது ஒரு கணிப்பொறித் திரையில் சில தனிப்பட்ட செய்திகளை விரும்பினவர்களுக்குத் தர முடியும். பன்னிரண்டு வயதுச் சிறுமி தன் பன்னிரண்டு வயதுத் திறமைகளை மட்டும் பயன்படுத்தி மாதம் ஐயாயிரம் சம்பாதிக்க முடியும்.

மற்றபடி, வீடு பெருக்குதல், சாணி தெளித்தல், அலம்புதல், கூட்டுதல், இணைத்தல் போன்ற ‘போர்’ அடிக்கும் வேலைகளை இயந்திரங்கள் செய்யும்.
வேலை என்பது விரும்பினபோது எல்லோருக்கும் கிடைக்கும்

எந்தத் திறமையாக இருந்தாலும் அதற்கேற்ப வேலை கிடைக்கும். 
வேலை எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும்

இந்தியாவில் இந்த நிலை எப்போது வரும் என்று கேட்பின் இந்த நாடு முதலில் சில சௌகரியமான அம்சங்களாகப் பிரிய வேண்டும்.


கர்னாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் யாவும் ஜப்பானையும் விட அதிகப் பரப்பளவும் ஜனத்தொகையும் கொண்டவை.
இவை அனைத்தும் தனிப்பட்ட சுதந்திரப் பிரதேசங்களாக நிச்சயம் பிரிந்துவிடும். இந்தப் பிரிவைப் பற்றி நாம் பயப்படத் தேவையில்லை. இப்போது, முன்னாள் சோவியத் யூனியன் போல, ஐரோப்பியக் கண்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் இதற்கு முகமன் கூறுகின்றன.

ஒவ்வொரு மாநிலமும் பிரிந்த பின் அவை கலாச்சாரத்திலும் இனத்திலும் ஒன்றுபட்டு செங்குந்தர், நாடார், ஐயங்கார், கானாடுகாத்தான் செட்டியார் போன்ற பிரிவினைகள் இல்லாமல், ‘ஜப்பானியன்’ என்பது போல, ‘தமிழன்’ என்ற ஒருமை கிடைப்பது இந்த மாறுதல்களுக்கு முதன் முதல் தேவை.

என் கணிப்பில் இது நிகழ இன்னும் முப்பத்தேழு வருஷங்கள் ஆகும்.

 *                                *                               *
சுஜாதாவின் [மறைவு: ஃபிப்ரவரி 27, 2008] இந்தக் கணிப்பு வெளியாகி [கட்டுரை 1993 எழுதப்பட்டது] 24 ஆண்டுகள் முடிந்துவிட்டன.


இன்னும் 13 ஆண்டுகளில் தமிழ்நாடு தனியாகப் பிரிய வேண்டும். இது சாத்தியமா?

“சாத்தியமே” என்று நான் சொல்ல மாட்டேன். சொன்னால்.....

அடுத்த என் பதிவு வெளிவருவதற்கான சாத்தியமே இல்லாமல் போய்விடும்!!!

நீங்கள் சொல்லலாம்..........

 உங்கள் மனதுக்குள்! எத்தனை முறை வேண்டுமானாலும்!!