புதன், 6 ஏப்ரல், 2016

‘தலைவெட்டி’ பாபா ராம்தேவுக்கு ஒரு தமிழனின் அறிவுசார் மடல்!

இந்தப் பதிவை எழுதியதற்காக நீர் என் தலையை வெட்ட விரும்பினால்.....

‘நள்ளிரவு பன்னிரண்டிலிருந்து காலை ஆறு மணி’வரை நான் உறங்குவது வழக்கம். வெட்டரிவாள்களுடன் உமது தொண்டர்கள் வரும் நாளை அறிவித்தால், அன்றைய தினம் வீட்டுக் கதவைத் திறந்து வைத்து உறங்குவேன். ‘சதக்’...ஒரே வெட்டு. வலியில்லாமல் நான் செத்துப்போவேன்!

யோகா குரு அவர்களே, //‘பாரத மாதாகீ ஜே’ சொல்ல மறுக்கும் தொப்பி போட்ட லட்சக்கணக்கானவர்களை வெட்டியிருந்திருப்பேன், அரசியல் சட்டத்தை மதிப்பதால் அதைச் செய்யவில்லை// என்கிறீர்கள். தங்களின் இந்த ஆவேசப் பேச்சு நேற்றைய தமிழ் நாளிதழ்களில்[தமிழ் இந்து, 05.04.2016] வெளியானது.

தொப்பி வைக்காத,  உம்மைப் போல் அடர்ந்த கருகரு தாடி வளர்க்காத, “பாரத மாதாகி ஜே” சொல்லாத...சொல்ல விரும்பாத இந்தியக் குடிமக்கள், நீங்கள் நினைப்பது போல் லட்சக்கணக்கானவர்கள் அல்ல, கோடிக்கணக்கானவர்கள் இருக்கக்கூடும். அத்தனைபேர்களின் தலைகளையும் வெட்டித் தள்ளுவீர்களா ராம்தேவ்?

நாடு என்பது ஒரு நிலப்பகுதி. நாட்டை இழந்தால், அங்கு வாழும் மக்கள் நாடோடிகள் ஆவார்கள் என்பது உண்மை.

இதை உணர்ந்து, மிக்க நாட்டுப் பற்றுடன் மக்கள் வாழ்தல் வேண்டும் என்பதற்காகத்தான், வாழும் நாட்டைத் தாய்நாடு என்றும் தந்தை நாடு என்றும் வாழ்ந்து முடித்தவர்கள் சொல்லிப்போனார்கள்.

பாரத தேசம், ‘பாரத மாதா’[உருவகம்] என்று சொல்லப்பட்டதும் இந்த நோக்கில்தான். 

காலங்காலமாக, இப்படிச் சொல்லப்படுகிற காரணத்தினாலேயே நாம் வாழும் நாடும்  ஈன்ற தாயும் ஒன்றாகிவிடா. எனினும்.....

நாட்டை இழந்தால் அங்கு வாழும் மக்கள் அனாதைகள் ஆவார்கள் என்பதால், பிறந்த ‘மண்’ணின் மீது பற்றுக்கொள்வதும், தேவைப்பட்டால் அதைப் பாதுகாக்க அரிய உயிர்களைத் தியாகம் செய்வதும்கூட வரவேற்கத்தக்கவையே. இதன் பொருட்டு மக்களின் மனங்களை உரிய முறையில் பக்குவப்படுத்துதல் இன்றியமையாப் பணியாகும்.

இப்பணி செய்வதை விடுத்து, பிறந்த நாட்டைப் ‘புண்ணிய பூமி’ என்று புனிதப்படுத்துவதும், "பெற்ற தாயெனப் போற்றி ‘ஜே’ போடு" என்று வலியுறுத்துவதும் அச்சுறுத்துவதும் அறிவுடையார் செயல்களல்ல. எனவே.....

பாபாஜி,

இனியேனும், தொப்பி போட்டவரோ போடாதவரோ, உம்மைப் போல் தாடி வளர்த்தவரோ வளர்க்காதவரோ, “பாரத மாதாக்கி ஜே சொல்லு. சொல்லாவிட்டால் உன் தலையை வெட்டுவேன்” என்று மிரட்டுவதை நிறுத்துங்கள். தவறினால்..........

முடிவு, உங்கள் சிந்தனைக்கு!
=============================================================================================
இன்று[06.04.2016] பிற்பகல், 02.14 மணிக்குப் ‘பிழை திருத்தம்’ செய்யப்பட்டது.

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

நடிகர்களின் ‘கட் அவுட்’களுக்குப் பாலாபிஷேகம் செய்வது குற்றமா?

நடிகர்களின் ‘கட் அவுட்டு’களுக்குப் பாலாபிஷேகம் செய்வது குற்றம் என்றால் கடவுள்களின் [கற்]சிலைகளுக்கு அதைச் செய்வதும் குற்றம்தான்.

//நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படம் வெளியாகும்போதெல்லாம். ரசிகர்கள், அபிஷேகம் என்னும் பெயரில் அவருடைய ‘கட் அவுட்’களுக்கு லட்சக்கணக்கான லிட்டர்  பாலைக் கொட்டி வீணடிக்கிறார்கள். அதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று மணிவண்ணன் என்பவர் பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்// என்பது நேற்றைய[31.03.2015] தினசரிகளில் வெளியாகியுள்ள குறிப்பிடத்தக்க செய்திகளில் ஒன்று.

நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
லட்சக்கணக்கான லிட்டர் பாலைக் ‘கட் அவுட்’களின் மீது கொட்டுவது குற்றம்தான் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. இது குற்றம் என்றால், தினம் தினம் கோடிக்கணக்கான லிட்டர் பாலை, பக்தியின் பெயரால் கண்ட கண்ட கடவுளரின் [கற்]சிலைகளின் மீது கொட்டி வீணடிக்கிறார்களே, அது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமல்லவா? கடவுள்களைத் திருப்திபடுத்துவதாக நினைத்துக் கணக்கு வழக்கில்லாமல் அரிய மஞ்சளையும் சந்தனத்தையும் பழ வகைகளையும் பாழாக்குகிறார்களே,  இது தண்டனைக்குரிய குற்றமல்லவா?

ரசிகர்களின் செயல்பாடு  முட்டாள்தனமானது என்றால் இவர்களுடையது வடிகட்டின மூடத்தனம்.

இவர்கள் கற்சிலைகளைக் கடவுள்களென நம்புகிறார்கள். அவர்கள் கட் அவுட்களையே தத்தம் தலைவர்களெனப் போற்றி வழிபடுகிறார்கள். இவர்கள் ஒரு குட்டையில் ஊறி அழுகிய மட்டைகள்.

‘பல்லாயிரக் கணக்கான ஏழைக் குழந்தைகள் குடிக்கப் பாலின்றி வாடும் நிலையில் இம்மாதிரிப் பாலாபிஷேகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார் மனுதாரர்.

‘கட் அவுட்’ களுக்கு மட்டுமல்ல, கடவுளர் சிலைகளுக்கும் பாலபிஷேகங்களும் இன்ன பிற அபிஷேகங்களும் செய்வது தடை செய்யப்பட வேண்டும்.