ஞாயிறு, 12 மார்ச், 2017

கடவுளின் குரல்!!! [இதுவொரு ‘தன்னம்பிக்கை’ப் பதிவு]

நம்பர் 1 வார இதழின்[‘லைஃப்’] ‘கடவுளின் குரல்’ தொடருக்கும் இப்பதிவின் தலைப்புக்கும் எள்ளத்தனை ஒட்டுறவும் இல்லை என்பதை யாவரும் அறிவீராக!

“உங்க மகனுக்குக் கணையத்தில் புற்று நோய். எங்களால குணப்படுத்த முடியல. உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் ரொம்பக் குறைவு............” 

-மிகுந்த மன வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்த டாக்டர், “மனம் தளர வேண்டாம். உங்க மகனைத் தினமும் லேசான உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்க. மூச்சுப் பயிற்சி ரொம்ப ரொம்ப முக்கியம். ரத்தக் குழாய்களில் அதிக அளவு பிராண வாயு சேரும்போது ஒட்டு மொத்த உடல் உறுப்பும் பலப்படும்.....

மனசுக்குப் பிடிச்ச பாடல்களைக் கேட்கணும்; படங்கள் பார்க்கணும்; இயற்கை அழகை ரசிக்கணும்.....

பயத்துக்கு இடம் தரவே கூடாது. இருக்கிற கொஞ்சம் வாழ்நாளையும் அது விழுங்கிடும். அளவு கடந்த தன்னம்பிக்கை வேணும்.  ‘நான் வாழ்வேன். நீண்ட நாள் வாழ்வேன்’னு மனசுக்குள்ள சொல்லிட்டே இருக்கணும். அப்படிச் சொல்லிட்டு ஆக்ரோஷத்தோட சத்தம் போட்டுக் கத்தினாலும் தப்பில்ல. மன இயல் ரீதியா இந்த முயற்சியில் ஜெயிச்சு ரெண்டொருத்தர் பிழைச்சிருக்காங்க. உங்க மகனும்கூட உயிர் பிழைக்கலாம்” என்று உறுதிபடச் சொன்னார் செல்வராசுவிடம்.

டாக்டர், தன்னைத் தேற்றுவதற்காகவே இப்படிச் சொல்கிறார் என்று நினைத்தார் செல்வராசு. அவரின் அறிவுரையைப் புறக்கணித்தார்.

மகனின் உடல்நிலையை விசாரிக்க வந்த சொந்தபந்தங்களிடம், மனம் உடைந்து போய், “எல்லாம் நான் செய்த பாவம்...என் தலைவிதி...” என்று புலம்புவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

நண்பர் ஒருவர், “அந்த மகானின் அருட்பார்வை பட்டால் தீராத நோய்கூடத் தீர்ந்து போகும். அவர் கரம் பட்டால் போன உயிரும் திரும்பி வரும். உன் மகனை அவரிடம் அழைச்சிட்டுப் போ” என்றார்.

“அவருடைய ஆன்மிகத் திருமடம் ரொம்பத் தொலைவில் இருக்கு. வாடகைக் கார் பிடிச்சித்தான் போகணும். ரொம்பச் செலவாகும். இருந்த பணமெல்லாம் எற்கனவே செலவு பண்ணிட்டேன்.” -குரலில் கனத்த சோகம் பொங்கச் சொன்னார் செல்வராசு.

“கடன் வாங்கு” என்றார் நண்பர்.

கடனுக்கு அலைந்து, கணிசமான தொகை சேர்ந்ததும் மகனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் செல்வராசு.

மடத்தை அடைந்தவுடன் மகாஆஆஆஆஆனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியதில் பெரிதும் மகிழ்ந்துபோனார்.

எட்ட இருந்தே தன் அருட்பார்வையால் அவருக்கும் அவர் மகனுக்கும் அந்த மகான் ஆசி வழங்கினார். மகான், மகனின் முன்னந்தலையைத் தொட்டு, “பகவான் கருணை காட்டுவார். கவலைப் படாதே” என்று திருவாய் மலர்ந்தருளியபோது செல்வராசு மெய்சிலிர்த்துப் போனார். அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஆறாகப் பெருகியது!

ஆயினும் என்ன, அடுத்த சில நாட்களிலேயே அவர் மகன் மரணத்தைத் தழுவினான்; மகனைத் தான் தங்கியிருந்த வாடகைக் குடியிருப்பிலேயே கிடத்திவிட்டு மீண்டும் மகானைச் சந்தித்தார்; கதறி அழுதவாறு சொன்னார்: “என் மகன் என்னைத் தவிக்க விட்டுப் போய்ட்டான் சாமி.”

“வருத்தப் படாதே. நல்லதே நடந்திருக்கு. உன் மகனின் பொய்யுடம்புக்குத்தான் அழிவு. அவனுடைய மெய்யுடம்பு ஆன்மாவைச் சுமந்து ஆண்டவனின் பாதாரவிந்தத்தைச் சென்றடையும். இது எம் தரிசனத்தால் நேர்வது. அவன் கொடுத்துவைத்தவன்” என்றார் அந்த ஆன்மிகச் செம்மல்.

மகனின் சடலத்துடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் செல்வராசு.

மகனை இழந்த வருத்தத்தோடு, புதிதாகப் பட்ட கடன் சுமையும் சேர்ந்து பெரும் பாரமாய் அவர் நெஞ்சை அழுத்தலாயிற்று. 

“டாக்டர் சொன்னபடி நடந்திருந்தா என் மகன் பிழைச்சிருப்பானோ?" என்ற சந்தேகம் அவரின் உள் மனதில் விட்டு விட்டு ஒலித்துக்கொண்டே இருந்தது.

வெள்ளி, 10 மார்ச், 2017

மருட்டும் மாலனும் குறட்டை விட்ட குமுதம் ஆசிரியரும்!!!

‘பிரபல’ எழுத்தாளர் மாலனின் சிறுகதையை[குமுதம் ‘லைஃப்’, 15.03.2017] இன்று படிக்க நேர்ந்தது. மீண்டும் மீண்டும் வாசித்ததில் ஒரு மணி நேரம் வீணாகக் கழிந்தது! மண்டை காய்ந்தது!!

‘புலி வேட்டை’ என்பது மாலன் எழுதிய சிறுகதையின் பெயர். ஒரு சர்க்கஸ் புலியின் அறிமுகத்தில் கதை ஆரம்பமாகிறது.

சர்க்கஸ் புலியின் அவல வாழ்வு குறித்து இரண்டு பத்திகளில் விவரித்த எழுத்தாளர் மாலன், ‘கூடாரத்தை இழுத்து நிறுத்தியிருந்த வெளிக் கயிற்றை உரசிக்கொண்டு நடந்தது புலி’ என்று கதையை ஆரம்பிக்கிறார்.

‘வாலைச் சுழற்றிக் கயிற்றை இழுத்துவிட்டால், அல்லது காலைக்கொண்டு கயிற்றைக் கட்டியிருக்கும் முளையைப் பறித்தெடுத்தால் கூடாரம் சரிந்து விழும். ஆனால், அதில் என்ன பயன்? மீண்டும் சிறைப்பட நேரலாம். பசித்த வயிற்றுக்கு இரை கிடைக்கும். ஆனால், மறுபடியும் அந்தப் பூனை வாழ்க்கைக்கா?’ என்று புலியின் சிந்தனை ஓட்டம் அமைந்திருந்ததாக ஒரு பத்தியில் விவரிக்கிறார் அவர்.

கதையின் இந்த ஆரம்ப நிகழ்ச்சியில் மாலன் சொல்ல நினைப்பது என்ன என்பது பலமுறை சிந்தித்தும் புரியவில்ஆ
வாலைச் சுழற்றிக் கயிற்றை இழுத்தோ, காலால் முளையைப் பறித்தெடுத்தோ பிரமாண்டமானதொரு கூடாரத்தைச் சாய்ப்பது புலிக்குச் சாத்தியமான செயலா என்னும் கேள்வி ஒருபுறம் இருக்க, புலி தனித்து விடப்பட்டது எப்படி என்றும் ஒரு கேள்வி எழுவது தவிர்க்க இயலாதது. 

முதல் நிகழ்வின் இறுதியில், ‘சுதந்திரத்தின் விலை பசி’ என்னும்  வாழ்க்கைத் தத்துவம் வேறு!

அடுத்து வரும் நிகழ்ச்சியில், செல்வந்தர் அரசநாயகமும் அவரின் வீட்டுச் சமையல்காரர் ஆறுமுகமும் அறிமுகம் ஆகிறார்கள்.

அரசநாயகம், தம் நண்பர்களுடன் தண்ணியடிக்கிறார். “நான் இப்போது ஒரு புலி வேட்டைக்குப் போய் வந்தேன்” என்று சொல்லி நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த முயல்கிறார். ஆனால் நண்பர்களோ அவரின் வீட்டுச் சுவரில் தொங்கும் வேட்டைத் துப்பாக்கியைப் பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவர், சந்தேகத்துடன், “புலியைக் கொன்னுட்டியா?” என்கிறார்.

அரசநாயகமோ, “அது காகிதப் புலி” என்கிறார். மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை நினைத்து அவர் அப்படிச் சொன்னதாகச் சொல்கிறார் மாலன்.

பின்னர், பங்களாதேஷிலிருந்து மாம்பழம், ஹவாயிலிருந்து வாழைப்பழம், ஆப்பிரிக்காவிலிருந்து வெண்டைக்காய், மெக்ஸிகோவிலிருந்து தக்காளி போன்றவற்றை வரவழைப்பது குறித்தும், உலகமயமாக்கல் குறித்தும் கதைக்குத் தொடர்பே இல்லாமல் உரையாடி  முடிக்க, அந்த இரண்டாம் நிகழ்ச்சியும் முடிவடைகிறது.

மூன்றாம் நிகழ்ச்சியில், ஒரு புலி[அது தப்பிவந்த சர்க்கஸ் புலியா அல்லவா என்பது பற்றிய விவரிப்பு ஏதும் கதையில் இல்லை] ஆற்றில் இறங்கிக் குஷியாக நீராடுகிறது; காட்டுக்குள் செல்லாமல், காட்டை ஒட்டியுள்ள அரசநாயகம் பங்களாவின் [இங்கேயும் குழப்பவே செய்கிறார்] பில்லியெட்ஸ் அறையில் நுழைந்து[அது அத்தனை சுலபமா!?] மேசைக்குக் கீழ் படுத்துக்கொண்டதாகக் கதையடிக்கிறார் மாலன்.

அது அங்கு படுத்திருப்பதைப் பார்த்துவிட்ட, அரசநாயகத்தின் சமையல்காரர் ஆறுமுகம், முதலாளிக்குத் தகவல் சொல்லாமலே முதலாளியின் துப்பாக்கியை எடுத்துச்சென்று புலியைச்  சுட்டுக் கொல்கிறார்.

வெடிச்சத்தம் கேட்டு, அரசநாயகம் நண்பர்கள் பின்தொடர ஆறுமுகத்தை அணுகுகிறார்; “என்னடா பண்றே?”  என்கிறார்.

“புலியைச் சுட்டுட்டேன் முதலாளி” என்கிறார் சமையல்காரர் ஆறுமுகம்.

“என்னுடைய புலியைச் சுட முடியாது. அது காகிதப் புலி” என்று அதிரடியாகச் சிரித்தார் அரசநாயகம் என்று கதையை முடிக்கிறார் பிரபல கதாசிரியர்.

“என்னுடைய புலியைச் சுட முடியாது. அது காகிதப் புலி” என்று அரசநாயகம் சொன்னதில் முரண்பாடு உள்ளது. நண்பர்களுடனான உரையாடலின்போது, “நான் புலி வேட்டைக்குப் போய்வந்தேன்” என்று இவர் சொல்ல, “புலியைக் கொன்னுட்டியா?” என்று நண்பர் கேட்க, “அது காகிதப் புலி” என்கிறார் இவர். அதாவது, ஒரு காகிதப் புலியை வேட்டையாடிவிட்டதாகச்  சொல்கிறார்.

நண்பரிடம் அவ்வாறு சொல்லிவிட்டு, கதையின் முடிவில், “என்னுடைய புலியைச் சுட முடியாது. அது காகிதப் புலி” என்று சொல்வது ஒரு முரண்பாடு ஆகும்.

செல்வந்தர்கள், கோடிகளில் கைப்பற்றுகிற ஒப்பந்தத்தை ரத்து செய்வது எளிதான செயலன்று என்பது எதார்த்தம். இதை விவரிக்க ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத கதை அமைப்பு; பொருத்தமே இல்லாத ‘புலி சுடும்’ நிகழ்ச்சி; விறுவிறுப்பு இல்லாத நடை..... என்பனவற்றோடு இன்னும் பல குறைபாடுகளைக் கொண்டது மாலனின் ‘புலி வேட்டை’!

ஓர் ஆரம்ப எழுத்தாளனுக்கு உள்ள எழுத்தாற்றல்கூட இந்தப் பிரபலத்துக்கு இல்லை என்பதற்கு இந்தக் குழறுபடிக் கதை ஒரு சாட்சி. 

தமிழின் நம்பர் 1 வார இதழான குமுதம், இம்மாதிரியான கால் வேக்காட்டுக் கதைகளை வெளியிடலாமா? குமுதம் ஆசிரியர் அரைத்தூக்கத்தில் இதை வாசித்துப் பிரசுரத்துக்கு அனுமதித்தாரா?

பிரியா கல்யாணராமனுக்கே வெளிச்சம்!