சனி, 8 ஏப்ரல், 2017

சிலை வழிபாடும் விவேகானந்தரும் நானும்!

“சிலைகளை[விக்கிரகங்களை] வணங்கும் பக்தர்கள் தங்கள் மனதில் இறைவனுக்கு என்ன வடிவம் கொடுக்கிறார்களோ, அதையேதான் வழிபடுகிறார்கள்” என்கிறார் விவேகானந்தர். இவ்வாறு அவர் சொன்னதன் பின்புலமாக ஒரு நிகழ்வும் சொல்லப்படுகிறது[’விவேகானந்தர் கதைகள்’, ஹர்ஷவர்த்தினி பப்ளிகேஷன்ஸ், மேற்கு மாம்பலம், சென்னை; பதிப்பு: 2010].
‘ஆல்வார்’ என்பது ஒரு சமஸ்தானமாக இருந்தது. அதன் மன்னர் ஒருமுறை விவேகானந்தரைச் சந்தித்தார்; அவரை ‘மகா புருஷர்’ என்றும் கேள்விப்பட்டிருந்தார்.

“விக்கிரக ஆராதனை பற்றி என்ன நினக்கிறீர்கள்” என்று விவேகானந்தரிடம் கேட்டார் அவர்.

“முற்றிலும் சரியே” என்றார் விவேகானந்தர்.

“விக்கிரக ஆராதனை சரியானது என்று நான் நினைக்கவில்லை. காரணம் ஆராதனையின்போது எனக்குப் பக்தி உண்டாவதில்லை” என்றார் மன்னர்.

விவேகானந்தர் யோசித்தார்; சுவரில், மன்னரின் ஓவியம் மாட்டப்பட்டிருப்பது கண்ணில் பட்டது. மன்னருடன் இருந்த திவானை அழைத்து, “நான் ஒன்று சொல்வேன். செய்வீர்களா?” என்றார்.

“கண்டிப்பாக” என்றார் திவான்.

“உங்கள் மன்னருடைய சித்திரத்தின்மீது எச்சில் துப்புங்கள்.” -இது விவேகானந்தர்.

“என்ன காரியம் செய்யச் சொன்னீர்கள்?” என்று பதறினார் திவான்.

“அது வெறும் ஓவியம்தானே? சும்மா துப்புங்கள்” என்றார் ஞானி.

“சுவாமிஜி, அது வெறும் ஓவியம்தான். ஆனால், அது எங்கள் மன்னரின் பிரதிபிம்பம். அவர் மீது எப்படி எச்சில் துப்ப முடியும்?” என்றார் திவான்.

“விக்கிரக ஆராதனையும் இது போல்தான். கடவுளை நம்பும் பக்தர்கள், கடவுளின் பிரதிபிம்பமான சிலையை வணங்குகிறார்கள். இதில் தவறேதும் இல்லை” என்கிறார் சுவாமி.

அவரின் விளக்கத்தைக் கேட்டுப் பரவசப்பட்டு, மன்னரும் பிறரும் மெய் சிலிர்த்தார்களாம். 

இந்தக் கதையை வாசித்தபோது[கதைதான்!] எனக்கு மெய் சிலிர்க்கவில்லை.

காரணம்.....

விவேகானந்தர் செய்த ஒப்பீடு முழுமையானதல்ல; தவறானதும்கூட.

சுவரில் இருந்த சித்திரம், மன்னரைத் தன்  கண்களாலும் பார்த்த ஒருவரால் வரையப்பட்டது. அதை மன்னரின் பிரதிபிம்பம் என உணர்தல் சாத்தியம். ஆனால், கோயில்களில் வடிக்கப்பட்டுப் பக்தர்களால் வணங்கப்படும் சிலைகள் கடவுளை அல்லது கடவுள்களைப் பார்த்துச் செதுக்கப்பட்டவை அல்ல. அவை அத்தனையும் புராண இதிகாசங்களில் இடம்பெற்ற கற்பனைப் பாத்திரங்கள்.

கற்பனையில் வடிவமைக்கப்பட்ட சிலைகளைக் கடவுளின் பிரதிபிம்பம் என்று சுவாமியவர்கள் சொன்னது ஏற்கத்தத்தக்கதன்று.

ஒப்பீடுகள் மூலமோ அனுமானங்கள் வாயிலாகவோ பலராலும் நம்பப்படும் கடவுளின் ‘இருப்பை’ உறுதிப்படுத்துதல் அத்தனை எளிதல்ல; ஏன்? எப்படி? எப்போது? என்பன போன்ற கேள்விகளை முன்வைத்து ஆழ்ந்து  சிந்திப்பதன்  மூலமே அது சாத்தியப்படக்கூடும்.

வெறும் நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாக் கொண்டு, கடவுளின் பிரதிபிம்பங்களை அனுமானிப்பதும், விதம்விதமாய் வகைவகையாச் சிலைகளை வடிவமைத்து வழிபடுவதும் வரையறையற்ற மூடநம்பிக்கைகளின் பெருக்கத்திற்கு வழி வகுக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++





வியாழன், 6 ஏப்ரல், 2017

பணி ஓய்வா? ஐய்யய்யோ.....!!! [சிரிப்பூட்டும் உண்மைக் கதை]

ஐம்பது வயதிற்குப் பிறகு, மனிதனின் முதுமைப் பருவம் ஆரம்பமாகிவிடுகிறது. எனினும், பதவியிலிருந்து ஓய்வு பெறும்போதுதான், தனக்கு வயதாகிவிட்டதையும், அந்திம காலத்தை நோக்கிய பயணம் தொடங்கிவிட்டதையும் ஒருவன் முழுமையாக உணர்கிறான்.

ஓய்வுக்குப் பிறகு, எதேச்சையாக எதிர்ப்படும் ஓர் அழகுப் பெண்ணை ‘வெறுமனே’ ரசிக்கும்போதுகூட, உள்மனம் உறுத்தும்! “உன் வயசென்ன?” என்று  கேட்டு மனசாட்சி நகைக்கும்!!

வாலிபப் பருவத்துக் கனவுகள், குறும்புகள், அடித்த கொட்டங்கள் எல்லாம் இனி ‘நினைவு கூர்தலில்’ மட்டுமே சாத்தியம் என்பதை உணரும்போது மனதில் இனம் புரியாத வலி பரவும்.

வயது ஏற ஏற  வாடிக்கையாய் எதிர்கொள்ளும் நோய்கள்;  உறக்கத்தை விரட்டும் மரண பயம்; ஒதுங்கிப் போகும் உறவுகள்; சரிவடையும் குடும்ப மரியாதை என்று எதை எதையோ எண்ணித் தன்னைத்தானே வருத்திக் கொள்ளத் தொடங்குகிறான் ஓய்வு பெற்றவன்.

இது போதாதென்று, வெந்த புண்ணில் வேல் சொருகும் சொந்தபந்தங்களின் விசாரிப்புகள்.

நான் ஓய்வு பெற்ற போது, என்னையும் இம்மாதிரி 'விசாரிப்புகள்’ பாடாய்ப்படுத்தின. அந்த அனுபவங்களைப் பல முறை அசை போட்டதன் விளைவு இந்தக் கதை. சுவைபடச் சொல்லியிருப்பதாக எண்ணுகிறேன். கதையின் முடிவு  உங்களை ஒரு முறையேனும் புன்னகை செய்யத் தூண்டும் என்று நம்புகிறேன்.

சின்னஞ்சிறு கதைதான். படியுங்கள்.

கதையின் பெயர்:                   அப்புறம்.....

அரசாங்கத்தில் ஓய்வு கொடுத்தாலும் கொடுத்தான், என்னால் வெளியே தலைகாட்ட முடியவில்லை.

எனக்குத் தெரிந்தவன், என்னைத் தெரிந்தவன் என்று எதிர்ப்பட்ட அத்தனை பேரும், “அப்புறம்.....” என்று தொடங்கி வாக்கியத்தை முடிக்காமல், என்  ரிட்டையர்மெண்ட் பற்றி என்னைப் புலம்பவிட்டு ரசிக்கக் காத்திருப்பார்கள்.

நான் உஷாராகி, “சொல்லுங்க” என்று சொல்ல, வேறு வழியில்லாமல், “ரிட்டையர் ஆயிட்டீங்க. பொழுது போகாதே. இனி என்ன செய்யப் போறீங்க?” என்று துக்கம் விசாரிப்பதுபோல் ‘கை நீட்டாத’ குறையாகக் கேட்பார்கள்.

“பொழுது அதுவா போகுமா என்ன? நெம்புகோல் போட்டு நாமதான் தள்ளணும்” என்று நான் அடிக்கும் கடி ஜோக்குக்குக் கொஞ்சமும் சிரிக்காமல் அறிவுரை வழங்குவார்கள்.

“மார்க்கெட் போயிக் காய்கறி வாங்கணும். பேரக் குழந்தைகளைக் குளிப்பாட்டி விடணும். அவங்களை ஸ்கூல் பஸ்ஸுக்கு அனுப்பறது; கூட்டிட்டு வர்றது; பாடம் சொல்லித் தர்றது; கதை சொல்றதுன்னு அவங்க தேவைகளை நீங்களே நிறைவேத்தணும். உங்களுக்குப் பொழுதும் போயிடும். வீட்டுப் பொம்மணாட்டிகளுக்கு உதவி செஞ்ச மாதிரியும் இருக்கும். உங்ககிட்டே மரியாதையும் காட்டுவாங்க. அப்புறம்....”

அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல ஏதேனும் பொய்யுரைப்பது எனக்குப் பழக்கமாகிப் போனது.

“ரிட்டையர் ஆனபோது நாலஞ்சி லகரம் கிடைச்சிருக்குமே?  ஏதாவது ஒரு சிறு தொழில் ஆரம்பிச்சுடுங்க. வங்கிகள்ல கடனும் வாங்கிடலாம்” இப்படி ஆலோசனை வழங்கியவர், அரசாங்க உத்தியோகத்தில் நோகாமல் சம்பளம் வாங்குகிறானே என்று என் மீது பொறாமை கொண்டிருந்த என் சொந்தக்காரர்.

ஆறு பெத்தா அரசனும் ஆண்டியாவான்னு சொல்லுவாங்க. நான் நாலு பெத்தேன். ஓய்வுக்காலப் பலன்னு கிடைத்த பணத்தையெல்லாம் இந்த நான்கு புத்திரிகளும் தட்டிப் பறித்தது, நெருங்கிய உறவுக்காரரான இவருக்குத் தெரியாமல் இருக்காது.

“என்ன தொழில் செய்யலாம். சொல்லுங்க” என்ற போது, அப்புறம் சந்திப்பதாகக் கழன்று கொண்டார்.

“நாலு ஆட்டோ வாங்கி விடுங்க. எனக்குத் தெரிஞ்ச டீலர் இருக்கார். அறிமுகப்படுத்தறேன்” என்று பரிந்துரைத்தவர், எங்கள் தெருமுனையில் பெட்டிக்கடை போட்டிருந்த அண்ணாசாமி. போட்டியாய்க் கடை திறந்துவிடுவேனோ என்ற பயம் அவருக்கு.

“பேசாம மணிக்கூண்டுப் பக்கம் ஒரு பெட்டிக்கடை திறந்துடுங்க.நல்லாப் போகும்.” -இது  நான் வேலை பார்த்த அலுவலகத்தில் என்னிடம் திட்டு வாங்கிய தட்டச்சர்.

இப்படியாக, பலரும் என்னை ஓட ஓட விரட்டிப் புத்திமதியும் இலவச ஆலோசனைகளும் வழங்கியதில் நான் நொந்து நூலாகிப் போனேன்.

இந்தத் தொல்லையிலிருந்து விடுதலை பெற வழியே இல்லையா?

ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் மூளையைக் கசக்கியதில் ஒரு வழி பிறந்தது.

அதற்கப்புறம் நான் யாரைக் கண்டும் ஓடி ஒளிந்ததில்லை.

நானே வலிந்து சென்று, “ஹலோ” சொல்லிக் குசலம் விசாரித்தேன்.

“அப்புறம்.....” என்று அவர்கள் ஆரம்பிப்பதற்கு முன்னால் நானே பேசலானேன்.

“”நான் ரிட்டையர் ஆயிட்டேங்க. மத்தவங்களைப் போல வீட்டோட முடங்கிக் கிடக்க என்னால் முடியல. நிராதரவான ஏழைக் குழந்தைகளுக்காக ஒரு அனாதை விடுதி ஆரம்பிக்கிறேன். உங்க மாதிரி நல்ல மனசுக்காரங்களை நம்பிக் காரியத்தில் இறங்கிட்டேன்.....” என்று நான் சொல்லி முடிப்பதற்குள்ளாக, “அவசர வேலையாய்ப் போய்ட்டிருக்கேன். அப்புறம் சாவகாசமாய்ப் பேசுவோம்” என்று கழன்று கொள்கிறார்கள்.

நான் கிளப்பிவிட்ட இந்தப் பொய் வெகு வேகமாகச் சொந்தபந்தங்களிடையே பரவ, அவர்கள் என்னை எதிர்ப்பட நேரும்போது, கண்டும் காணாதது போல், திசை மாறிப் போய்விடுகிறார்கள்!

அப்புறமென்ன, அதிகாலை நடைப் பயிற்சி;  காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு நண்பர்களோடு சீட்டுக் கச்சேரி; பகலில் குட்டித் தூக்கம்; மாலையில் சம வயதுக் கிழடுகிண்டுகளுடன் பூங்காவில் அரட்டை தர்பார்; முன்னிரவில் தொ.கா.; அப்புறம் உறக்கம் வரும்வரை படிப்பு. அப்புறம்.....

ஓய்வுக்கால வாழ்க்கை ரொம்ப ஜாலிதான் போங்க!