வெள்ளி, 30 ஜூன், 2017

‘பாசப் பைத்தியங்கள்!’... கதை உலகில் ஒரு புரட்சி!!

படித்தவுடன் உங்களுக்கும்  என்னைக் கடிந்துகொள்ளத் தோன்றும். சிறிதே சிந்தித்தால் பாராட்டவும் தோன்றக்கூடும்! அன்று[13.08.2012] இதை வாசித்தவர் எண்ணிக்கை வெறும் 90 மட்டுமே!!

இனி அது ‘தொள்ளாயிரம்’ ஆக அதிகரிக்குமா? இல்லை, 9 ஆயிரமா? இல்லையில்லை, 9 லட்சமா?! இல்லையில்லையில்லை, 9.....!!!

கடவுளும் ஒரு கருணைக் கொலையும்

வீடு திரும்பிய தந்தையும் தாயும் தன்னருகே வந்து அமர்ந்ததும் சந்திரன் கேட்டான்: “வக்கீலைப் பார்த்தீங்களா?”

அவன் அப்பா மட்டும் “இல்லை” என்பதாகத் தலையாட்டினார்.

“அப்படீன்னா இவ்வளவு நேரமும் எங்கே போயிருந்தீங்க?”

அப்பா தலை குனிந்தார். அம்மா சொன்னார்:  "கோயிலுக்கு.”

“எதுக்கு?”

“ஏம்ப்பா இப்படிக் கேள்வி கேட்டு எங்களை நோகடிக்கிறே? உனக்கு நோய் குணமாகணும்னு வேண்டிக்கத்தான் போனோம்.”

“நான் நோய்வாய்ப்பட்ட நாளிலிருந்து கோயில் கோயிலாப் போய் வர்றீங்க. பலன் கிடைச்சுதா?”

“.......... ஏதோ கொஞ்சம் நிம்மதி கிடைக்குது.”

“நிம்மதி கடவுளை வேண்டிக்கிற உங்களுக்குத்தான். தீராத நோயால் பாதிக்கப்பட்ட எனக்கல்ல. என் உடம்புல எதிர்ப்புச் சக்தி ரொம்பவே குறைஞ்சுட்டுது. நோவு அதிகரிச்சிட்டே போகுது. டாக்டர்கள் கை விட்ட என்னை எந்தக் கடவுளும் காப்பாத்தாதுன்னு திரும்பத் திரும்பச் சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்காம, கடவுள் கைவிட மாட்டார் மாட்டார்னு கண்ட கண்ட கோயிலுக்கெல்லாம் போறீங்க; தலைமுடி வளர்த்துத் தாடி மீசை வெச்சவன் காலில் எல்லாம் விழறீங்க. இந்த நிலைமை நீடிச்சா நான் சாகறதுக்குள்ளே உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் பிடிச்சுடும்.”

“அப்படியெல்லாம் சொல்லாதேப்பா.” -குரல் தழுதழுக்கச் சொன்னார் அப்பா.

“சொன்னா என்ன? நடக்கக் கூடாததையா நான் சொன்னேன்? புருஷனை இழந்த எதுத்த வீட்டு அமுதா மாமியோட பத்து வயசுப் பொண்ணு ஆறு மாசம் முந்தி காணாம போச்சு. போலீசில் சொன்னாங்க; எல்லாப் பேப்பரிலும் விளம்பரம் குடுத்தாங்க. பொண்ணு திரும்பக் கிடைக்கல. கண்ட சாமியார் காலில் எல்லாம் விழுந்தாங்க. கோயில் கோயிலா அலைஞ்சாங்க. பலன் இல்ல. மனசைத் தேத்திக்கணும். செய்யல. அது அவங்களால் முடியலேன்னும் சொல்லலாம்.  “கடவுளே என் மகளை மீட்டுக் கொடு..... மீட்டுக் கொடுன்னு சோறு தண்ணி இல்லாம தியானத்தில் மூழ்கிக் கிடந்தாங்க. என்னாச்சு?..............

..............என் மகளைப் பார்த்தீங்களா, பார்த்தீங்களா சாமி’ன்னு எதிர்ப்பட்டவங்களை எல்லாம் விசாரிச்சுட்டுப் பைத்தியமா அலைஞ்சிட்டிருக்காங்க...........”

கொஞ்சம் இடைவெளியில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட சந்திரன் தொடர்ந்தான். “நீங்களும் அந்த நிலைக்கு ஆளாயிடக் கூடாதுன்னுதான் ரெண்டு பேரையும் வக்கீல்கிட்டே அனுப்பினேன்” என்றான்.

அம்மா சொன்னார்:  “வக்கீல் மூலமா, உன்னைக் கருணைக் கொலை செய்யக் கோர்ட்டில் அனுமதி வாங்கணும்னு சுலபமா சொல்லிட்டே. இதுக்கு உன்னப் பெத்த எங்க மனசு இடங்கொடுக்குமா ராசா?”

“இடம் கொடுக்காதுதான். வேற வழி இல்லியேம்மா. இப்போ ஓரளவுக்கு நோவைத் தாங்கக் கூடிய சக்தி எனக்கு இருக்கு. நாளாக ஆக, தாங்குற சக்தி குறையக் குறைய வேதனை அதிகமாகும். அப்புறம் அணு அணுவா துடிச்சிச் சாக வேண்டிய பரிதாப நிலைக்கு நான் ஆளாயிடுவேன். அப்படியொரு நிலைக்கு ஆளாகாம இப்பவே நிம்மதியாச் செத்துடணும்னு ஆசைப்படுறேன். என் விருப்பத்தை இனியாவது நிறைவேத்தப் பாருங்க...........

...........அப்பா, அம்மா வேண்டாம். ஒரு தாய் மனசு எந்த வகையிலும் இதுக்கெல்லாம் சம்மதிக்காது. நீங்க மட்டுமே போங்க. நான் சொன்ன லாயரைப் பாருங்க. செய்ய வேண்டியதைச் சீக்கிரம் செஞ்சி முடிங்க. நான் சீக்கிரமா சாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்” என்றான் சந்திரன்.

பொங்கி வரும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, இயந்திர கதியில் நகர முற்பட்ட தந்தையிடம்,  “அப்பா, மனசு மாறி மறுபடியும் கோயிலுக்குப் போயிடாதீங்க. என்னை நிம்மதியா சாகடிக்க டாக்டர்களால்தான் முடியும்; கடவுளால் முடியாது” என்றான் மெல்லிய வேதனை கலந்த புன்முறுவலுடன்.

அதிகம் பேசிவிட்ட களைப்பில் கண்மூடி மயக்கத்தில் ஆழ்ந்தான் சந்திரன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வியாழன், 29 ஜூன், 2017

“அவன் அயோக்கியன்! அவர்கள் அயோக்கியர்கள்!!”

திடீர் விபத்துகள், அவ்வப்போது நிகழும் இயற்கைச் சீற்றங்கள், தீராத நோய்களின் தாக்குதல்கள், எதிர்பாராத மரணங்கள், எதிரிகளால் விளையும் ஆபத்துகள் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு ‘விதி’யே காரணம் என்று நம் மூதாதையர் பலரும் நம்பினார்கள்; இன்று நம்புவோர் எண்ணிக்கையும் பெருமளவில் உள்ளது.

இந்த நம்பிக்கை சரியானதா? 

மரணம் பல்வேறு வடிவங்களில் நம்மை அரவணைக்கிறது.

ஒன்று:
சக மனிதர்களாலோ [கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல் என்றிப்படி] ஏனைய பிற உயிரினங்களாலோ[யானை மிதித்து, நாய்கள் கடித்து .....] இறப்பு நிகழலாம். இதற்கு எவரும் விதிவிலக்கானவர் அல்லர். சூழல் காரணமாக எவருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

இரண்டு:
கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமிகள் காரணமாகலாம். இன்ன நேரத்தில் இன்னாரைத் தாக்குவது என்று பட்டியல் தயாரித்து அவை செயல்படுவதில்லை.

மூன்று:
புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் மரணம் நிகழ்வதும் தவிர்க்க முடியாதது. இவற்றிற்கு மனிதரில் ‘நல்லவன் கெட்டவன்’, ‘பக்தன் நாத்திகன்’, ‘ஏழை பணக்காரன்’ போன்ற வேறுபாடுகள் பற்றியோ, அவரவர் தலைவிதி பற்றியோ எதுவும் தெரியாது.

நான்கு:
இயற்கையின் முரண்பட்ட நிகழ்வுகளால் உருவாகும் பஞ்சம், பட்டினி போன்றவையும் காரணமாகின்றன.

ஐந்து:
மனிதன் தன் ஆறறிவால் கண்டுபிடித்த போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், வாழ்க்கை வசதிகளைப் பெருக்குவதற்குப் பயன்படும் கருவிகள் போன்றவையும் சற்றும் எதிர்பாராத வகையில் மனிதன் செத்தொழியக் காரணமாக இருக்கின்றன. 

ஆறு:
உடம்பின் ஒட்டுமொத்த அணுக்களின் அழிவால்  ஏற்படும் மரணம் எல்லோருக்கும் எக்காலத்தும் பொதுவான ஒன்று.  விதிவிலக்கானவன் எவனுமில்லை.

அனைத்துப் பொருள்களுக்குள்ளேயும் உயிரினங்களுக்குள்ளேயும் ஆற்றல் பொதிந்து கிடப்பதால் அவை இயங்குகின்றன. மனிதனுக்குள்ளும் இயங்குவதற்கான ஆற்றலோடு சிந்திப்பதற்கான   பகுத்தறிவும்  இருக்கிறது. 

ஆற்றல் மற்றும் அறிவுடன் மேற்குறிப்பிட்ட இயற்கைச் சீற்றங்கள், முரண்பட்ட நிகழ்வுகளின் கொடிய விளைவுகள், தான் கண்டுபிடித்த கருவிகளால் ஏற்படும் பாதிப்புகள், அணுக்களின் அழிவுகளால் ஏற்படும் மரணம் போன்றவற்றை எதிர்த்துப் போராடுகிறான் மனிதன். போராட்டங்களுக்கிடையே தன்னைத் தாக்கும் இன்பதுன்பங்களை ஏற்று வாழ்கிறான். இது...இந்த வாழ்க்கை.....

மனிதகுலத்துக்கு இயற்கையாக வாய்த்தது.


இயல்பாக அமைந்த இத்தகைய வாழ்வில், தன்னைத் தேடிவரும் இன்பங்களை மனிதன் மகிழ்வோடு ஏற்பான்; துன்பங்களை ஏற்க மனம் மறுக்கும். 

அவற்றை ஏற்று வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், அதற்குரிய மனப்பக்குவத்தை அவன் வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

‘இது ஏன் நிகழ்கிறது? எப்போதிருந்து நிகழ்கிறது? எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது?’ என்னும் கேள்விகளுக்கெல்லாம் இந்நாள்வரை எவரும் விடை சொன்னதில்லை.   இனியும் விடை தேடுவதில் தவறில்லை.

விடை கிடைக்கிறதோ இல்லையோ, தனக்கு வாய்த்திருக்கும் அற்ப வாழ்க்கையை இயன்றவரை அமைதியாக ஏற்று வாழ்ந்திட முயல்வதே மனிதப் பிறவி எடுக்கும் அத்தனை பேருடைய கடமை ஆகும்.

இயல்புநிலை இதுவாக இருக்க.....

“இல்லை இல்லை. ‘விதிப்படிதான் எல்லாம் நடக்கிறது. அந்த விதியை வகுத்தவன் கடவுள். அவனை வழிபடுவதன் மூலம் விதியை வெல்லலாம். சுவர்க்கம் புகலாம்; இறைவனின் திருவடியை அடையலாம்”[அடைந்து யுகம் யுகமாய்க் குறட்டை விட்டுத் தூங்கலாம்] என்றெல்லாம் பொய்யுரைத்து, மனப்பக்குவத்தை வளர்த்திடும் மனித முயற்சிக்குத் தடையாய் நிற்பவர்களை அயோக்கியர்கள் என்று சொன்னால் அது தவறாகுமா? 

இவர்கள் சொல்லும் விதியை[தீமை பயப்பவை] வகுத்தவன் கடவுள் என்றால், அவனை ‘அயோக்கியன்’ என்று குறிப்பிடுவது குற்றம் ஆகுமா?

சிந்தியுங்களேன்.
=================================================================
விதி தொடர்பான பழைய இடுகைகள்:

1.விதியாம் விதி!.....‘மசுரு’ விதி!!

 http://kadavulinkadavul.blogspot.com/2015/10/blog-post_25.html
2.பொல்லாத விதியும் ஒரு ‘கவர்ச்சி நடிகை’யின் உள்ளாடையும்!!! [எச்சரிக்கை! நீ..ண்..ட பதிவு]
http://kadavulinkadavul.blogspot.com/2015/06/blog-post_20.html