வியாழன், 10 ஆகஸ்ட், 2017

கவிஞர் வைரமுத்துவின் கடவுள்!!!

ஈரோடு புத்தகத் திருவிழாவில், ‘அறிவே கடவுள்’ என்னும் தலைப்பில் உரையாற்றியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து[’தி இந்து’ 09.08.2017]. உரையின் தலைப்பிலேயே நம்மைக் குழப்புகிறார் கவிஞர்!

‘கடவுள் என்பவர் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அதாவது எப்போதும் இருந்துகொண்டே இருந்தவர்; இருக்கிறவர்; இனியும் இருப்பவர். அவர் ஒப்புமைக்கு அடங்காத பேராற்றலும் பேரறிவும் வாய்ந்தவர். அன்புருவானவர்; அருள் வடிவானவர்.....’ என்றிப்படி, இன்னும் எப்படியெல்லாமோ அவருக்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள் ஆன்மிக நெறியில் ஊறித் திளைத்தவர்கள்.

கடவுளுக்கான விளக்கம் இவ்வாறு மிகப் பரந்து விரிந்த ஒன்றாக இருக்கையில், கவிஞர் வைரமுத்து அவர்கள், “அறிவே கடவுள்” என்று வெகு சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். 

அறிவு மட்டுமே கடவுளாக முடியுமா என்று அவர் கிஞ்சித்தும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

[‘மொழியைக் கண்டறிந்தவனே உலகின் முதல் கடவுள்” என்றும் சொல்லியிருக்கிறார். மனிதன் கடவுள் ஆனது எப்படி என்று புரியவில்லை].

அறிவு என்பது சிந்திக்கப் பயன்படுவது. அது பிற உயிர்களுக்கும் வாய்த்திருக்கிறது. மனிதன் அதைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறான். 

இந்த அறிவை, ‘அறிவு’ என்றே குறிப்பிடலாமே? அதை ஏன் அவர் ‘கடவுள்’ ஆக்கினார்? கடவுள் என்று உருவகம் செய்யாமல் ‘அறிவு’ என்று மட்டும் குறிப்பிட்டால் அதன் தகுதி அல்லது தரம் குறைந்துவிடுமா? மக்கள், அறிவு என்று ஒன்று இருப்பதை ஏற்க மாட்டார்களா?

தொடரும் தம் உரையில், “மனிதர்களின் கேள்விக்கு விடை கிடைக்காத இடத்தில் கடவுள் இருக்கிறார்” என்றும் சொல்லியிருக்கிறார். 

மனிதர்களின் கேள்வி என்ன? ‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா?’ என்பதுதானே? ‘விடை கிடைக்காத இடத்தில் கடவுள் இருக்கிறார்’ என்று சொல்வதன்[சொல்பவர் அவர்தான்] மூலம் அந்தக் கேள்விக்கான விடையை மனிதனால் கண்டறிய இயலாது என்பதுதான். ஆக, கடவுளின் ‘இருப்பை’ மனிதனால் புரிந்துகொள்ள இயலாது என்கிறார்.

இப்படிச் சொன்ன அவர், தொடர்ந்து, “மனிதன் தன் அறிவுப் பூட்டைத் திறக்கும்போது கடவுள் புன்சிரிப்புடன் நகர்ந்துகொள்கிறார்” என்றும் குறிப்பிடுகிறார். 

மனிதன் மிக ஆழமாகச் சிந்திக்கும்போது, கடவுள் புன்சிரிப்புடன் காணாமல் போகிறாராம். இதற்கு என்ன பொருள்?

‘கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். மனிதனின் அறிவால் அவரை அறிய முடியாது’ என்பதா? அல்லது, கடவுளே இல்லை என்பதா?

‘கடவுள் இல்லை’ என்பது அவருடைய கொள்கை என்றால், ‘கடவுள் இல்லை’ என்று அப்பட்டமாகச் சொல்ல வேண்டியதுதானே? ‘மறைகிறார்[அதுவும் புன்சிரிப்புடன்] என்று மூடுமந்திரமாகப் பேசியது ஏன்?

இவரின் இந்த நிலையை, ‘இரட்டை வேடம்’ என்று சொல்லலாமா? “ஆம்” என்றால்.....

யாரைத் திருப்திபடுத்த இந்த இரட்டை வேடம்? ஆத்திகர், நாத்திகர் என்னும் இரண்டு தரப்பினரையுமா?

வைரமுத்து நல்ல கவிஞர்; எழுத்தாளர்; சிறந்த மேடைப் பேச்சாளர்; தங்குதடை இல்லாமல் பேசுவதில் வல்லவர். 

‘பேசட்டும். எவ்வளவும் பேசட்டும்; எதைப் பற்றியும் பேசட்டும். அந்தப் பேச்சு மக்களுக்குப் பயன்படுதல் வேண்டும்; அவர்களின் நேரத்தை வீணடிப்பதாக இருத்தல் கூடாது’ -இது நம் விருப்பம்.
=====================================================================================================

புதன், 9 ஆகஸ்ட், 2017

என் கதை முன்னே! ‘நோட்டா’ பின்னே!!

தேர்தலில் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத போது, ‘யாருக்கும் வாக்கு இல்லை’ (None Of The Above NOTA) என்ற பொத்தானை வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ‘நோட்டா (NOTA)’ வசதி அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2013 டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தலில் ‘நோட்டா’ அறிமுகப்படுத்தப்பட்டது.
1993ஆம் ஆண்டில் ‘செல்லாத வாக்கு’ என்னும் தலைப்பில், ‘ராணி’ வார இதழில்[17.10.1993] ஒரு கதை எழுதினேன். இந்த ‘நோட்டா’ அறிமுகத்துக்கு மூல காரணமே நான் எழுதிய இந்தக் கதைதான்[ஹி...ஹி...ஹி!] என்று நான் சொன்னால் நகைப்பீர்களா, ஆமோதிப்பீர்களா?!
கதை:  
முதல் ஓட்டுப் போடலாமென்று ஆறு முப்பதுக்கே வாக்குச் சாவடிக்குப் போனான் கணேசன். 
நீண்ட வாக்காளர் வரிசை அவனுக்குப் ‘பெப்பே’ காட்டியது. ஏமாற்றத்தை விழுங்கிக்கொண்டு வரிசையில் நின்றான்.
சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ‘வரிசை’ உயிர் பெற்று நகரலாயிற்று.
எதேச்சையாக வாக்குச் சாவடியிலிருந்து வெளியேறிய அந்த உருவத்தைப் பார்த்ததும் கணேசன் அதிர்ச்சியடைந்தான்; ஆத்திரப்பட்டான்.
அந்த உருவம்.....
மூர்த்தி!
“நம் தொகுதியில் போட்டியிடும் அத்தனை பேருமே ஊழல் பேர்வழிகள்; அயோக்கியர்கள். நம் தொகுதி வாக்காளர்கள் இவர்களில் எவருக்கும் வாக்களிக்கக்கூடாது. ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணிப்போம்” என்று நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு முந்தா நாள்வரை தெருத்தெருவாய் முழக்கம் செய்தானே அந்த மூர்த்திதானே இவன்?
இன்று முதல் ஆளாய்த் தன் ஓட்டைப் போட்டுவிட்டு வருகிறானே. ஓட்டுக்கு எவ்வளவு வாங்கியிருப்பான்? எத்தனை பேரிடம் வாங்கினான்? இவனைச் சும்மா விடக்கூடாது.’ -கணேசன் மனதுக்குள் கருவினான்.
‘அரசியல்வாதிகளே, கள்ளச் சாராயப் பேர்வழிகளையும் கோயில் கொள்ளையர்களையும் விபச்சார்த் தரகர்களையும் எங்கள் தொகுதியின் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறீர்கள். இவர்களைத் திரும்பப் பெறுங்கள். நல்லவர்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள். மறுத்தால் நாங்கள் தேர்தலைப் புறக்கணிப்போம்’ என்று சுவர் சுவராய் அறிக்கை ஒட்டிய அந்த மூர்த்திதான் இவன். இவனை உண்டு இல்லயென்று ஆக்கிவிட முடிவெடுத்தான் கணேசன்
வரிசையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மூர்த்தியை எதிர்கொண்டான்.
“மூர்த்தி எங்கே இந்தப் பக்கம்?” -குரலில் கிண்டல்.
”ஓட்டுப் போடத்தான் வந்தேன். வந்த வேலை முடிந்தது” என்றான் மூர்த்தி.
“ஓட்டுப் போடவா? நீயா?”
“ஆமா. நானேதான். என் கோரிக்கை எதுவும் நிறைவேறல. வாக்குச் சாவடிப்பக்கம் வரக் கூடாதுன்னுதான் இருந்தேன். அரசியல்வாதிகள் கள்ள ஓட்டுப் போட ஆட்களை ஏற்பாடு செய்திருப்பதாக் கேள்விப்பட்டேன். என்னுடைய ஓட்டையும் எவனாவது போட்டுட வாய்ப்பிருக்குன்னு நினைச்சேன். விலை மதிப்பற்ற என் வாக்கு காசுக்கு விலை போவதை நான் விரும்பல. தகுதியில்லாத ஒரு வேட்பாளருக்கு அது போடப்படுவதையும் தடுக்க நினைச்சேன். முதல் ஆளா வரிசையில் நின்னு என் வாக்கைச் செல்லாததா ஆக்கிப் போட்டுட்டேன். சொல் ஒன்னு செயல் ஒன்னுன்னு ஊரை ஏமாத்துற ஆள் நான் இல்லை.”
இடத்தைக் காலி செய்தான் மூர்த்தி.
திகைப்பிலிருந்து விடுபடச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன கணேசனுக்கு!