புதன், 24 ஜனவரி, 2018

காஞ்சி சங்கர மடம் விஜயேந்திரர் கடவுளின் அவதாரம்!!!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, நிகழ்வில் கலந்துகொண்ட சங்கர மடம் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்றும், அதற்குத் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அவர்களும் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும் 'NEWS 18 தமிழ்நாடு' தொலைக்காட்சி இன்று[பிற்பகல் 02.00 மணி] பரபரப்பாகச் செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

பதிப்பாளர் சேஷாத்திரி என்பவரும், 'விஜயேந்திரரின் செயல்பாடு சரியானதல்ல; அது பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்' என்று தெரிவித்திருக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள், விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழ்நாடு அரசும் கண்டனம் தெரிவித்திருக்கிறது[சற்று முன்னர் வெளியான செய்தி].

விஜயேந்திரர் என்பவர் கடவுளின் அவதாரம் ஆவார். கடவுள் வேறு அவதாரம் வேறு அல்ல.

விஜயேந்திரரே கடவுள். கடவுளே விஜயேந்திரர். 

தமிழ் மொழியானது, தேவ பாஷையான சமஸ்கிருதம் போல் கடவுளால் படைக்கப்பட்டதல்ல; அற்ப மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு 'நீச' பாஷை.

ஒரு நீச பாஷை கடவுள் வாழ்த்தாகப்[தமிழ்த்தாய் வாழ்த்து] பாடப்படும்போது, விழாவில் கலந்துகொண்ட சாதாரண மனிதர்கள் எழுந்து நிற்கலாம். கடவுளின் அவதாரமான விஜயேந்திரர் எழுந்து நிற்பது கடவுளையே அவமானப்படுத்தும் செயலாகும்.

ஸ்டாலின், வீரமணி, முத்தரசன் போன்றவர்கள், விஜயேந்திரரின் செயலைக் கண்டித்தது முழுமுதல் கடவுளையே கண்டித்ததாக ஆகிறது.

தாங்கள் தவறு செய்துவிட்டதை உணர்ந்து உடனடியாக இவர்கள் அனைவரும் விஜயேந்திரரிடம் மன்னிப்புக் கேட்பார்களாக!
=====================================================================================
இப்பதிவு இன்று[24.01.2018] பிற்பகல் 02.30க்கு, தொலைக்காட்சிச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு பதிவேற்றப்பட்டது. நிகழ்ச்சி பற்றிய முழு விவரத்தையும் அறிய இயலவில்லை.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

அவர்கள் முதலில்! அப்புறம்தான் வைரமுத்து!!

'ஆண்டாள்' குறித்த சர்ச்சையில், வைரமுத்து தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்த பின்னரும் தொடர்ந்து கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் இந்துமதக் காப்பாளர்களாகத் தம்மை அறிவித்துக்கொண்டவர்கள்; மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்கள்; அதற்குக் கெடுவும் விதித்துக்கொண்டிருக்கிறார்கள்.....தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள இந்துமதம் சார்ந்த மக்கள் தம் பின்னால் அணிவகுப்பார்கள் என்னும் தவறான நம்பிக்கையில்.

''சமஸ்கிருதமே தேவ பாஷை. தமிழ் நீச பாஷை'' என்று சொன்னவர்கள் அவர்கள்;  இன்றும் சொல்பவர்கள் இருக்கிறார்கள். இப்போதும் கோயில்களில் அர்ச்சனைமொழி சமஸ்கிருதம்தான். போனால்போகிறதென்று எப்போதாவது தமிழையும் பயன்படுத்துவார்கள்.

'நீச பாஷை'  என்று அவர்களால் இழிவுபடுத்தப்பட்ட தமிழ் மொழியில் பாடிய ஆண்டாள் தாயாருக்குக் களங்கம் ஏற்பட்டதாகச் சொல்லிக் கண்ணீர் வடிக்கிறார்கள் இன்று; போராட்டங்களைத் தூண்டிவிடுகிறார்கள்; வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முழக்கமிடுகிறார்கள்.

ஒன்றல்ல இரண்டல்ல; சில நூறல்ல பல நூறல்ல, கடவுளின் பெயரால் ஆயிரக்கணக்கில் மூடநம்பிக்கைகளைக்  திணித்து மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்தவர்கள்..... மழுங்கடித்துக்கொண்டிருப்பவர்கள் அவர்கள்.

முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள் அவர்கள்தான்.