வெள்ளி, 25 மே, 2018

யானையிடம் ஆசி! யோசிப்பாய் பக்தனே!!

'சமயபுரம் மாரியம்மன் கோயில்  யானைக்கு மதம் பிடித்தது. அது பக்தர்களுக்கு ஆசி வழங்கிகொண்டிருந்தபோது அவர்களைத் தாக்கியது. 8 பேருக்குக் காயம். பாகன் கஜேந்திரன் கொல்லப்பட்டார். கோயில் நடை சாத்தப்பட்டது. யனைக்கு மயக்க ஊசி செலுத்த வனத்துறையினர் முயற்சி.....' -இது இப்போது [நண்பகல் 12.00 மணி] 'தந்தி' தொலைக்காட்சி அறிவித்துக்கொண்டிருக்கும் செய்தி.

'ஜெயா என்ற யானை வரவழைக்கப்பட்டு, பாகனைக் கொன்ற மசினி என்னும் யானை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது' என்பது புத்தம் புதிய செய்தி[12.45 மணி].

பக்தகோடிகளின் சிந்தனைக்கு.....

கடவுள் ஒருவரே என்று உங்களின் ஆன்மிக வழிகாட்டிகள் அறிவுறுத்தியும், ஈஸ்வரன், விக்னேஸ்வரன், பெருமாளு, அலமேலு, கந்தசாமி, கருப்புசாமி, காளியம்மா, மாரியம்மான்னு மானாவாரியா சாமிகளை உற்பத்தி பண்ணியிருக்கீங்க; கோயில் கட்டிக் கும்பிடுறீங்க.

''உண்டு தின்று உடம்பை வளர்த்து, உடலுறவில் இனவிருத்தி செய்து ஒரு நாளில் இல்லாமல் போகிறவன் மனுசன். இவன் ஒருபோதும் கடவுள் ஆக முடியாது. கடவுளின் பிரதிநிதின்னு வேஷம் போட்டு ஆசீர்வாதம் பண்ணுகிறவர்கள் அயோக்கியர்கள்''னு, உங்களுக்குள்ளேயும் கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்திக்கிறவங்க சொன்னால் கேட்க மறுக்கிறீங்க; குடும்பம் குடும்பமா, கூட்டம் கூட்டமாப் போயி விழுந்து கும்பிடுறீங்க; ஆசீர்வாதம் வாங்குறீங்க.

மனுஷ சாமிகள்கிட்ட ஆசி பெறுவதோடு நிக்கிறீங்களான்னா, ஊஹூம்.

ஒரு சாமிக்குப் பசுமாடு வாகனம். இன்னொரு சாமிக்குப் பெருச்சாளி வாகனம். இன்னும் ஒரு சாமிக்குப் பருந்து வாகனம்னு உங்க மூதாதையர்களில் சிலர் கட்டிவிட்ட கதைகளையெல்லாம் உண்மைன்னு நம்பி.....

பசுமாட்டுக்குப் பூஜை பண்ணி வழிபடுறீங்க. பெருச்சாளிக்குக் கோயில் கட்டிக் கும்பிடுறீங்க. இரை தேடி ஆகாயத்தில் அலையுற கழுகைக் கண்டா கன்னத்தில் போட்டுக்கிறீங்க. 

யானை ஒரு மிருகம். காடுகளில் வாழ்ந்து இனவிருத்தி செஞ்சி வாழ்றது அதன் இயல்பு. அதையும் நீங்க விட்டுவைக்கல.  கோயிலில் கட்டிவெச்சி, தும்பிக்கையைத் தூக்கி உங்க தலையைத் தொட்டுத் தடவுறதுக்குப் பாகனைக் கொண்டு பழக்குனீங்க.

பழக்க தோசத்துல அது தலையைத் தடவினா, நீங்க கும்பிடுற சாமியே உங்க தலையைத் தடவி ஆசீர்வாதம் பண்ணுறதா நம்புனீங்க. மத்தவங்களையும் நம்ப வைச்சீங்க.  நீண்ட நெடுங்காலமா இந்த மூடநம்பிக்கையிலிருந்து உங்களால் விடுபட முடியல. விளைவு.....

இன்று ஒரு பாகன் பலி. ஆசீர்வாதம் வாங்கப்போன பலருக்குக் காயம். இதற்கு முன்பும் இது மாதிரி உயிர்ப்பலிகளும் காயம்படுதலும் நிகழ்ந்திருக்கு.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனியேனும் கொஞ்சம் சிந்தியுங்கள். மனிதர்களை வழிபடுவதையும் விலங்குகளிடம் ஆசீர்வாதம் பெறுவதையும் நிறுத்துங்கள்.

செய்வீர்களா?

வியாழன், 24 மே, 2018

''குமுதமே, 'அப்படி' வேண்டாம்; 'இப்படி' எழுது!''

புலனடக்கத்துடன் வாழ்ந்த, பலராலும் நன்கு அறியப்பட்டுப் போற்றப்பட்ட, மிக நல்ல ஒரு மனிதரைக் கடவுள் ஆக்குவது நகைப்பிற்குரியது. இதற்கான குமுதம் அதிபரின் உள்நோக்கம் நல்நோக்கமாக இருக்க வாய்ப்பில்லை.

'மகா பெரியவர்' எனப்படும் காஞ்சி பரமாச்சாரியாருக்குத் தூப, தீப ஆராதனை செய்த பிறகுதான் சாப்பிட அமர்வார் அந்தப் பக்தர். 

சாப்பாடு பரிமாறப்பட்டவுடன், ''எல்லாம் அவருக்கே அர்ப்பணம்'' என்று சொல்லி, கொஞ்சம் நீரைக் கையில் எடுத்து, உணவைச் சுற்றித் தெளித்துவிட்டு உண்ணத் தொடங்குவது அவரின் வழக்கம்.

அன்று, பரிமாறப்பட்ட உணவில் கத்தரிக்காய் கருகியிருப்பதைப் பார்த்து மனம் நொந்தவர், உணவு சமைத்த மருமகளிடம் குறைபட்டவராய், ''பகவானே மன்னிச்சுடுங்கோ'' என்று முறையிட்டு உண்டு முடித்தார். தன் கவனக்குறைவுக்காக மருமகளும் வருந்தினாள்.

இது நடந்து ஆறு மாதம் கழிந்த நிலையில்,  பக்தர் தன் மருமகளுடன் 'மகா பெரியவா'வைச் சந்திக்க நேர்ந்தது. 

பெரியவா, ''அன்னிக்கி ஒரு நாள் எனக்குத் தீய்ஞ்ச கத்தரிக்காய் பண்ணிக் குடுத்தது நீதானே?'' என்று மருமகளைப் பார்த்துக் கேட்க, அவள் உணர்ச்சி வசப்பட்டுத் தேம்பித் தேம்பி அழுதாளாம்.

'தம் பக்தர்கள் வாழ்வில் நிகழும் வித்தியாசனமான சம்பவங்களையும் அவர்களுக்கு நேரும் குறைகளையும் அவர்கள் சொல்லாமலே ஞானதிருஷ்டியால் முன்கூட்டியே அறிவதோடல்லாமல், பக்தாளின் குறைகளையும் நிவர்த்தி செய்தவர் மகா பெரியவா' என்பதாக, ஓராண்டுக்கும் மேலாகக் கதைகள் எழுதி, மகா பெரியவாளை மகா பெரிய கடவுளாக்கியிருக்கிறார்கள் 'குமுதம்' குழுவினர்.

மகிழ்ச்சி...மிக்க மகிழ்ச்சி.

தனிப்பட்ட பக்தர்களையும் மகா பெரியவாவையும் தொடர்புபடுத்தி இவர்கள் உருவாக்கும் கதைகள் நம் பொதுமக்களை வெகுவாக ஈர்க்காது என்பது என் எண்ணம். எனவே..... 

'மகா பெரியவா, ..... ஊர்களில் நாளை ஜாதிக்கலவரம் மூள இருக்கிறது என்று ஞானதிருஷ்டியால் அறிந்து எச்சரிக்கை செய்தார். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. கலவரங்கள் தடுக்கப்பட்டன' என்பதாகக் குமுதம்காரர்கள் கதைகள் எழுதலாம். எழுதினால், பொதுமக்களும் பெரியவாவைப் போற்றித் துதிபாடுவார்கள்.

பன்றிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்குதல், கற்பழிப்பு, அவ்வப்போது நாட்டில் நிகழும்  கொலை கொள்ளைச் சம்பவங்கள் போன்றவற்றையும் பெரியவா முன்கூட்டியே அறிந்து சொல்ல, அரசும் தொண்டு நிறுவனங்களும் உரிய தடுப்பு/நிவாரண நடவடிக்கைகளை எடுத்து ஏற்படவிருந்த சேதாரங்களைத் தவிர்த்ததாகக் கதைகள் பரப்பினால், பாதிப்புக்குள்ளான மக்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடும் அவரின் தொண்டுள்ளத்தைப் பாராட்டி விழா எடுத்து மகிழும்.

திடீர் எரிமலைச் சீற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றின் தாக்குதல்களைச் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்னதாகவே பரமாச்சாரியார் அனுமானித்து எச்சரிக்கை செய்ததால் சம்பந்தப்பட்ட நாடுகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டுத் தத்தம் மக்களைக் காத்ததாகக் கதைகள் படைத்தால் உலக அளவில் மகா பெரியவாவின் பக்தர் எண்ணிக்கை மளமள என்று உயரும்.

தமிழின் நம்பர் 1 வார இதழான குமுதத்தின் அதிபர் அவர்கள் எளியேனின் ஆலோசனைகளை ஏற்று நடைமுறைப்படுத்துவார் என்பது என் நம்பிக்கை.

'சர்வேஸ்வரனைப் போலவே சர்வவியாபியாக இருப்பவர்' என்று குமுதம் இதழால் புகழ்ந்தேத்தப்படுகிற[குமுதம் 30.05.2018] மகா பெரியவா வாழ்க! அவர்தம் புகழ் தரணியெங்கும் பரவுக!!