ஞாயிறு, 17 ஜூன், 2018

'இது'க்கு மட்டும்தான் பட்டியலா? 'அது'க்கு.....?!

*உடலுறவில் முழு மன நிறைவு பெறுபவர்களுக்குப் பிறரைக் காட்டிலும், 'இம்யூனோக்ளோபுளின்[IgA]' என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் உடம்பில் அதிகரிக்கிறது.

*உற்ற துணையுடன் அடிக்கடி கட்டில் சுகம் அனுபவிப்பவர்கள்,  'எனக்கு உடம்பு சரியில்லை' என்று  அலுவலகத்தில் அடிக்கடி விடுப்புக் கேட்பதில்லை.

*உடலுறவு இன்பத்தின் உச்சியில் வெற்றிக்கொடி நாட்டுபவர்களுக்கு, உச்சசுகம் பெருகுவதற்குக் காரணமான 'டோபமைன்', 'என்டார்ஃபின்','ஆக்ஸிடோசின்' ஆகியவை இயல்பைவிடவும் ஐந்து மடங்கு அதிகம் சுரக்கிறது.

*மனம் கவர்ந்த மனையாளின் தேன் ஊறும் இதழ்களில் ஆழப்பதித்திடும் ஒரே ஒரு முத்தம்கூட ஆக்ஸிடோசின் சுரப்பை அதிகரிக்கிறது.

*இம்மாதிரியான சுகபோகிகளுக்குத் தலைவலியே வருவதில்லையாம்; வந்த தலைவலியும் சுகபோகத்திற்குப் பிறகு பஞ்சாய்ப் பறந்துவிடுமாம்.[உங்களின் மனம் கவர்ந்தவள், ''தலை வலிக்குதுங்க'' என்று சொன்னால் 'தேமே' என்று இருந்துவிடாதீர்கள்].

*தினசரி நடைப்பயிற்சியை மறந்தாலும், வாரம் ஒருமுறையோ இருமுறையோ இந்தப் பயிற்சியைத் தவறவிடாமல் செய்தால், மருத்துவச் செலவை முற்றிலுமாய்த் தவிர்த்துவிடலாம்.

*உடல் தகுதிக்கேற்ப முறையான உடலுறவு வைத்துக்கொண்டால், 'சிக்ஸ்பேக்' உடம்பு வாய்க்கவில்லை என்றாலும் அதைச் 'சிக்'கென்று வைத்துக்கொள்ளலாம்.

*மாதத்தில் ஒருமுறை புணர்வதை விடவும் இருமுறை புணர்வோரை இதய நோய் நெருங்காது.

*அடிக்கடி விந்தை வெளியேற்றுவோரின் 'பிராஸ்டேட்' சுரப்பி வீங்காது; அதில் புற்று நோய் தொற்றாது.

*பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்சினை தலைகாட்டாது; வலியும் தென்படாது.

*சிறப்பான உடலுறவு, சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

*நீண்ட நேர உடலுறவில் சுரக்கும் வேதிப்பொருட்கள் மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்; நினைவுத்திறன் கூடும்.

*குறைந்த இடைவெளியில் தொடரும் உடலுறவு, செரட்டோனின் என்னும் 'ஹேப்பி ஹார்மோனை'ச் சுரக்கச் செய்து எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும்.

*உற்சாகமான உடலுறவு, தனிமை, பாதுகாப்பின்மை, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றை ஓட ஓட விரட்டியடிக்கும்.....['பெண் இன்று', தி இந்து, 17.06.2018]

இவையும் இவைபோன்ற இன்னும் ஏராள நன்மைகளும் இணக்கமான இணையுடன் அடிக்கடி புணர்ச்சி கொள்வதால் விளைகின்றன என்னும் உண்மையை மனிதவள மேம்பாட்டு  நிறுவனம் ஒன்று, பன்னாட்டு நிறுவனப் பணியாளர்களிடையே நடத்திய ஆய்வை அடிப்படையாகக் கொண்டு உறுதிப்படுத்தியிருக்கிறதாம்.

''ஆகா, என்ன அருமையான ஆராய்ச்சி!'' என்று பாராட்டத் தோன்றுகிறதா, கொஞ்சம் பொறுங்கள்.

ஜோதிடம், வரதட்சணை, சாதிமத வேறுபாடுகள் என்று பல்வேறு தடைகளைத் தாண்டித் துணை தேடிக்கொள்ள வக்கில்லாமல், நாளும் ஏங்கித் தவிக்கும் முதிர்கன்னிகள், முதிர்காளையர் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது.

கல்யாணம் ஆகியும், உடல் பொருத்தமும் மனப் பொருத்தமும் இல்லாமையால் உடலுறவுக் குழறுபடிகளுக்கு ஆளாகி மனம் சோர்ந்து நடைப்பிணங்களாய்க் காலம் தள்ளும் கணவன் - மனைவியர் எண்ணிக்கை கணக்கு வழக்கில்லாமல் பெருகிக் கிடக்கிறது.

அனைத்துப் பொருத்தங்களும் இருந்தும், தீராத நோய் ஆறாத மனத் துயரம் என்று அல்லல்பட்டு ஆற்றாத கவலையுடன் காட்சிதரும் காளையர், கன்னியர் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

விட்டுக்கொடுத்து வாழும் மனப் பக்குவமோ, பாசத்தைக் கொட்டி உறவாடும் நேச உணர்வோ இல்லாத காரணத்தால், மணமான குறுகிய காலத்திலேயே மணவிலக்குப் பெற்று மாளாத துன்பங்களுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் பல்கிப் பெருகுகிறது.

கட்டுப்பாடில்லாத சம்போகத்தால் நாடி தளர்ந்து நடைப்பிணங்களாய்க் காலம் தள்ளுவோரையும் கணிசமாய்க் காண முடிகிறது.

மனத்தளவில் ஏராள ஆசையிருந்தும் உடல் ஒத்துழைக்காத காரணத்தால் ஓயாது புலம்பித் திரியும் கிழடுகளுக்கும்[கிழவிகள்?] பஞ்சமில்லை.

இங்கே குறிப்பிடப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பெருக்கிக் கழித்துவிட்டு, மனம் ஒத்த தம்பதியராய் உடலுறவு சுகம் துய்ப்போரின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால்.....

லட்சத்தில் ஒன்று தேறுமா?

லட்சத்தில் ஓர் இணைதான் மேலே பட்டியலிடப்பட்ட பயன்களைப் பெற முடிகிறது என்னும்போது, மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியைப் பாராட்ட முடியுமா?

முடியாது. மாறாக.....

'ஆராய்ச்சியாளர்களே,

நீங்கள் மனித நலனை மேம்படுத்தப் பாடுபடும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். உங்களால் முடிந்தால் மக்களிடையே பெருகிக் கிடக்கும் பல்வேறு மனநோய்களையும் உடல் குறைபாடுகளையும் குணப்படுத்த உதவுங்கள். 

இவர்களின் நிலை மேம்படட்டும். நீடித்த உறவுக்குத் தகுதி படைத்தவர்களாக  இவர்கள் மாறட்டும். அதன்பிறகு.....

நீடித்த உறவால் விளையும் பயன்கள் குறித்த உங்களின் ஆராய்ச்சி முடிவை இவர்களுக்குப் பரிந்துரை செய்யலாம்.'

சனி, 16 ஜூன், 2018

அறிவை முடக்கும் ஆன்மிக நாளிதழ்க் கதைகள்!!

தமிழ் நாளிதழ்களின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. வாரம்தோறும் போட்டிபோட்டுக்கொண்டு ஆன்மிகச் செய்திகளை[இணைப்பின் மூலம்] வெளியிடுகின்றன. அவற்றில் மிகப் பல, சிந்திக்கும் அறிவைச் சிதைக்கின்ற பழைய மூடநம்பிக்கைக் கதைகள். அண்மையில் வாசித்த ஒரு கதை கீழே[வார இதழ்கள் வெளியிடும் இம்மாதிரிக் கதைகளுக்கான விமர்சனம் இனி அவ்வப்போது தவறாமல் வெளிவரும். வாசிக்கத் தவறாதீர்].

கதை:

#ஒரு ஜென் துறவி. பெயர் 'நான்சன்'.

அவருக்கு ஒரு மாணவன். பெயர் 'ரிகோ'.

ஒரு நாள்.....

நான்சனிடம்  ரிகோ ஒரு  புதிரை முன்வைத்தான்.. 

'ஒருவன் ஒரு வாத்துக் குஞ்சைக் கண்ணாடிப் புட்டியில் இடுகிறான். அதற்கு நாள்தோறும் உணவு கொடுக்கிறான். வாத்து வளர்ந்துகொண்டிருக்கிறது. இப்போது ஒரு கேள்வி.....

வாத்து வளர்ந்து பெரிதாகிவிட்ட நிலையில், அதைக் கொல்லாமல் புட்டியையும் உடைக்காமல்.  முழுமையாக உயிருடன் வெளியே கொண்டுவர வேண்டும். எப்படி?' என்பதே அந்தப் புதிர்.

குரு நான்சன் புதிரை விடுவிக்க முயன்றார். இயலவில்லை. எத்தனை சிந்தித்தும் விடை கிடைக்கவில்லை.

வெறுமனே சிந்தித்தால் விடை கிடைக்காது என்று நினைத்தவர் தியானத்தில் ஆழ்ந்தார்.

விடை கிடைத்தது!

'ரிகோ'வை விளித்து,  ''புட்டிக்கு எந்தவிதச் சேதாரமும் இல்லாமலே. வளர்ந்து பெரிதாகிவிட்ட வாத்து உயிருடன் இப்போது வெளியே வந்துவிட்டது'' என்றார், மிகுந்த உற்சாகத்துடன்.

ரிகோ வாய் பிளந்தான். தன் கேள்விக்குத் தத்துவார்த்தமான ஒரு விடையை எதிர்பார்த்த அவன் நான்சனை உற்று நோக்கினான்.

நான்சன் தொடர்ந்தார்.

''இயல்பு நிலையில், வாத்தைச் சேதாரமில்லாமல் வெளியே கொண்டுவர இயலாது. தியானத்தால் மட்டுமே முடியும். வாத்து வெளியே வந்துவிட்டதை நீ அறிய வேண்டுமானால் நீயும் தியானத்தில் மூழ்குதல் வேண்டும்.''

குருவின் அறிவுரைப்படியே ரெகோவும் தியானத்தில் ஆழ்ந்தான்.

எல்லாத் திரைகளும் அகன்றுவிட்ட நிலையில் அவன் இருந்தான். சொன்னான்:

''நான் புட்டியை உடைக்கவில்லை. அது அங்கேயேதான் இருக்கிறது. நான் வாத்தையும் கொல்லவில்லை. ஆனால், அது உயிரோடு வெளியே வந்துவிட்டது.''#

இந்தக் கதையைச் சொன்னவர், பத்திரிகைகளால் 'செக்ஸ் சாமியார்' என்று சிறப்புப் பட்டம் சூட்டப்பட்ட 'ஓஷோ'.

கதையின் கருதுகோள் புரிந்ததா? ''புரியவில்லை'' என்பவர்களுக்காகக் கதையை எடுத்தாண்ட ஆன்மிக எழுத்தாளரே விளக்கம் தருகிறார்.

'வாத்து', ஆன்மாவுக்கான குறியீடு. 'புட்டி', வாழ்க்கையின் மீதான பற்றுதல். பற்றுதல் காரணமாக இன்பதுன்பங்களுக்கு ஆளாகிறோம். அவற்றிலிருந்து ஆன்மாவை விடுவிப்பது நம் குறிக்கோள்[புட்டியிலிருந்து வாத்து விடுபடுதல்].

ஆன்மாவைச் சிதைத்துவிடாமல் ஆசாபாசங்களையும் அறுத்துவிடாமல் விடுபடுவதற்கான ஒரே வழி.....

தியானம். 

வாழ்க்கையின் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டே தியானம் செய்வதன் மூலம் ஆன்மா விடுதலை பெறுவது சாத்தியம் என்று ஓஷோ சொல்வதாகச் சொல்கிறார் ஆன்மிக எழுத்தர்.

ஓஷோ சொன்ன கதையும் ஆன்மிகர் தந்த விளக்கமும் பகுத்தறிவுக்கு உகந்தனவா?

சற்றே சிந்திப்போம்.

'ஆன்மா' என்பதே நம் முன்னோர்களால் அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். அறிவுபூர்வமாக அதை நம்புவது சாத்தியமே அல்ல[தனித்து ஆராயப்படவேண்டிய ஒன்று அது. நான் சில பதிவுகள் எழுதியிருக்கிறேன்].

தியானம் தியானம் என்று பரப்புரை செய்து மக்கள் மனங்களில் அதைப் பதியச் செய்துவிட்டார்களே தவிர, தியானம் செய்யும் முறை குறித்தோ அதன் பயன்கள் குறித்தோ நம்பத்தகுந்த விளக்க உரைகளை எவரும் தந்தாரில்லை.

இந்த வாத்து கதையையே உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்.

இதைச் சேதாரமில்லாமல் வெளியே கொணர, குருவும் சீடனும் செய்த தியானங்கள் எவை?

மூடிய கண்களுடன் குந்திக்கொண்டு[மனதையும் ஒருமுகப்படுத்துவதாக வைத்துக்கொள்ளுங்கள்],....

''கடவுளே...கடவுளே...என் ஆன்மாவை விடுவிப்பாயாக... சேதாரமில்லாமல் விடுவிப்பாயாக. கடவுளே[விரும்பிய சாமி பெயரைச் சொல்லலாம்]...கடவுளே...உன் தாழ்பணிந்து இறைஞ்சுகிறேன்... எவ்வாறேனும் என் ஆன்மாவுக்கு விடுதலை வழங்கு...கடவுளே...வழங்கு...வழங்கு...'' என்றிப்படி நெடுநேரம் முணுமுணுப்பதுதான் தியானமா?

இவ்வாறு தியானம் செய்து ஆன்மாவை விடுவித்தவர் யாரெல்லாம்?

விடுவிக்கப்பட்ட ஆன்மாக்கள் எங்கே?

விடுவித்தவர்கள் எங்கே?

செத்துத்தொலைத்து, உடல் என்னும் பிண்டம் அழிந்த பிறகும் ஏதேனும் ஓர் உருவில் வாழ்ந்துகொண்டே இருத்தல் வேண்டும் என்னும் பேராசையில் கட்டிவிடப்பட்ட இம்மாதிரிக் கதைகளை இன்னும் எத்தனை காலங்களுக்குச் சொல்லிச் சொல்லிச் சொல்லி நம் முட்டாள்தனங்களைத் தக்கவைக்கப் போகிறோம்?

நம் கேள்வி இது.  பதில்.....?!?!
========================================================================
குறிப்பு:
கருத்துப்பெட்டியை அழகுபடுத்த முயன்றதில் அது பழுதடைந்துவிட்டது. மீட்டெடுக்கும் முயற்சி தொடர்கிறது. பொறுத்தருள்க.