சனி, 30 ஜூன், 2018

காவேரிக் கதைகள்!!!

காவிரியைப் 'புண்ணிய நதி' என்கிறது பழம் புராணம். 'தேவலோகக் கன்னியர்கள் கொஞ்சிக் குலாவி நீராடிய நதி' என்கிறார் வால்மீகி. 'கங்கையினும் புனிதமானது' என்றும், 'தமிழ்ப் பாவை' என்றும் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்திருக்கிறார்கள் நம் புலவர்கள்.

குடகு மலையில் பிறக்கிறது காவிரி. ஊற்றாக உருவெடுத்து, பூமிக்கடியில் நகர்ந்து, சில இடங்களில் ஆடு தாண்டுகிற அளவுக்கு அகலம் குறைவாகவும், சில இடங்களில் மிக அகன்றும், சில இடங்களில் அருவியாகவும், மேலும் சில இடங்களில் நீர்த் தேக்கங்களாகவும் உருமாறி நெடுந்தொலைவுக்குப் பயணிக்கிறது இந்தக் காவிரி. 

இதன் தோற்றம் குறித்து, நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற கதைகள், நம்ப முடியாதவை என்றாலும் வெகு சுவாரசியமானவை.

முன்னொரு காலத்தில், சூரபத்மன் என்னும் அசுரனின் அடாவடித் தனங்களிலிருந்து தப்பிக்க எண்ணிய தேவேந்திரன், தமிழகத்தின் சீர்காழியில் வந்து தங்கினான்; சிவபெருமானுக்கு வழிபாடு நிகழ்த்த நந்தவனம் அமைத்தான்.

போதிய தண்ணீர் இல்லாமையால், நந்தவனச் செடி கொடிகள் செழிப்பாக வளரவில்லை. விசாரித்ததில், அகத்தியரின் கமண்டலத்தில் எடுக்க எடுக்கக் குறையாத நீர் இருப்பதாக நாரதர் சொன்னார்.

தேவேந்திரன் விநாயகரைப் வழிபட, அவர் குடகு மலைக்குச் சென்று அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்தார். அது ஆறாகப் பெருக்கெடுத்து வந்து இந்திரனின் 'கா'[நந்தவனம்]வில் பாய்ந்து அதைச் செழிக்கச் செய்தது. இவ்வகையில்தான் இந்த ஆறு 'காவிரி' என்று பெயர் பெற்றது.

அடுத்த கதை.....

பிறிதொரு காலத்தில், குடகு நாட்டின் 'பிரமகிரி' மலையில் காவேரி முனிவர் அவரின் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். பிள்ளைப் பேறு இல்லாததால், பிரமனை நோக்கிக் கடும் தவம் புரிந்தார்.

அவரின் தவத்தை மெச்சி நேரில் காட்சியளித்த பிரமன், ''போன பிறவியில் நீர் செய்த பாவங்கள் காரணமாகத்தான் உமக்குப் பிள்ளைப் பேறு வாய்க்கவில்லை. எனினும், இப்போது நீர் செய்த தவத்தை ஏற்று என் வளர்ப்பு மகளான லோப முத்திரையை உமக்குப் பரிசாகத் தருகிறேன்'' என்று சொல்லி, சொன்னபடியே தன் மகளை ஒப்படைத்துவிட்டு மறைந்தார்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு, காவேரி முனிவரும் அவரின் மனைவியும் இறந்தார்கள். காவேரி முனிவர் வளர்த்ததால், 'காவேரி' என்று பெயர் பெற்றாள் லோப முத்திரை.

இச்சமயத்தில், அகத்தியரானவர் தவம் புரிவதற்காகப் பிரமகிரி வந்தார் காவேரியைக் கண்டு காதல் கொண்டார்[இதுதான் தவம் புரியும் லட்சணம் போலும்!].

''என்னை ஒரு கணமும் பிரியாதிருந்தால் உங்களை மணப்பேன்'' என்றாள் காவேரி. சம்மதித்தார் அகத்தியர். திருமணம் நடந்தது. இருவரும் சுகித்திருந்தார்கள்.

ஒரு நாள்.....

சற்றுத் தொலைவிலிருந்த 'கனிகை' என்னும் நதியில் தனியே நீராட ஆசைப்பட்டார் அகத்தியர்[இளம் மனைவி அருகிலிருக்க இப்படியும் ஓர் ஆசையா?!] காவேரியை ஒரு பாத்திரத்தில் அடைத்து[?!], ஒரு பிராமணச் சிறுவனிடம் கொடுத்துவிட்டு நீராடச் சென்றார்.

சினம் கொண்ட லோப முத்திரை, சிறுவனைத் தவறிக் கீழே விழும்படிச் செய்தாள். பாத்திரம் உடைந்து சிதற, வெளிப்பட்ட லோப முத்திரை  காவேரி நதியாக ஓட ஆரம்பித்தாள்[நிகழ்வை அறிந்து அகத்தியர் காவேரியிடம் மன்னிப்புக் கேட்டதும், அவள் ஒரு பாதி காவிரியாகவும் மற்றொரு பாதி அவருக்கு மனைவியாகவும் இருக்கச் சம்மதித்தது தனிக் கதை]

இன்னுமொரு கதை.....

தேவகாந்தன் என்னும் அரசன், தன் நாட்டில் மழை பொய்த்ததால், உமையம்மையை நோக்கித் தவம் புரிய, அம்மையும் ஒரு நாள் அவன் கனவில் தோனறி, ''வலம்புரி[குடகுக்கு] வந்து சேர்'' என்று சொல்ல, அவனும் அங்கு செல்ல, சென்ற பொழுதே காவேரி ஆறு உற்பத்தி ஆகிப் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.

இக்கதைகள் மூலமாக நாம் அறியத்தக்கது என்னவென்றால்.....

நம் மூதாதையர்களில் சிலர், இப்படி இன்னும் எப்படியெல்லாமோ கதைகள் சொல்லிச் சொல்லி மக்களைச் சிந்திக்க விடாமல் தடுத்துவிட்டார்கள் என்பதும், அவர்கள் விட்டுச் சென்ற பணியை இன்றளவும் நம் ஆன்மிகவாதிகள் தொடர்ந்து செய்கிறார்கள் என்பதும்தான்.

வெள்ளி, 29 ஜூன், 2018

தங்க மீசையும் தனித் தமிழ்நாடும்!!

போராட்டம் நடத்திப் போலீசிடம் லத்தி அடி வாங்காமல், மறியல், உண்ணாவிரதம், கடையடைப்பு, தீவைப்பு அது இதுன்னு கலவரம் செய்து சிறையில் கம்பி எண்ணாமல் 'தனித் தமிழ்நாடு' பெறுவது எப்படி என்று நான் நீண்ட நாட்களாக யோசித்ததில் இன்றுதான் அதற்கொரு வழி பிறந்தது.

ரொம்ப ரொம்பச் சுளுவான வழி அது. கூடக்குறையப் பணம் செலவாகும்...அவ்வளவுதான்.

இந்த வழியை நான் கண்டுபிடித்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். ஆண்டவனின் அருளும் அதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

இன்று காலை வழக்கம்போல, 'தி இந்து[29.06.2018]' நாளிதழை வாசித்துக்கொண்டிருந்தபோது.....

#'ரூ. 1.37 கோடியில் வைர மூக்குத்தி காணிக்கை' என்னும் தலைப்பின் கீழ், 'தனித் தெலங்கானா மாநிலம் அமைந்தால், பல்வேறு கோயில்களுக்குத் தன் குடும்பத்துடன் நேரில் சென்று 'நேர்த்திக் கடன்' செலுத்துவதாக, தெலங்கானா 'ராஷ்ட்ரீய சமிதி' கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் வேண்டிக்கொண்டிருந்தார்.

தனித் தெலங்கானா அமைந்ததைத் தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5.5 கோடி மதிப்பில் சாலிக்கிராம ஹாரத்தை சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டு காணிக்கையாக வழங்கினார். திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு வைர மூக்குத்தியைக் காணிக்கையாகச் செலுத்தினார்.

இவை தவிர, வாரங்கல் பத்ரகாளி அம்மனுக்குத் தங்கக் கிரீடம், குருவி பகுதியில் உள்ள வீரபத்திர சாமிக்குத் தங்க மீசை போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தித் தன் நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.

விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மனுக்குப் பட்டு வஸ்திரங்களையும், ரூ 1.37 கோடி மதிப்பிலான வைர மூக்குத்தியையும் காணிக்கையாக வழங்கினார். மொத்தம் 11.290 கிராம் எடை கொண்ட இந்த வைர மூக்குத்தியில் விலை உயர்ந்த 57 வைரக் கற்களும், நீலம், கெம்பு போன்ற விலை உயர்ந்த கற்களும் பதிக்கப்பட்டுள்ளவாம்!#

இந்தச் செய்தியைப் படித்தவுடன், கத்தியின்றி ரத்தமின்றி வெகு சுலபமாகத் தனித் தமிழ்நாடு பெறுவதற்கான வழியை நான் கண்டறிந்தேன்.

சக்தி வாய்ந்த கடவுள்களுக்கான பட்டியலைத் தயாரித்தேன். அவர்களுள் அதி அபூர்வ சக்தி வாய்ந்த எங்கள் ஊர் 'தலைவெட்டி முனியப்பன்' சாமியைத் தேர்வு செய்தேன்; முனியப்பனுக்கு, ஏற்கனவே இருக்கும் 'மண்ணாலான கிடா மீசை'யைப் பெயர்த்து எடுத்துவிட்டு, தங்கத்தால் ஆன மீசையைப் பொருத்துவதாக நேர்ந்துகொண்டிருக்கிறேன்.

என்னுடைய இந்தக் கோரிக்கை எப்போது வேண்டுமானாலும் நிறைவேறலாம் என்பதால் 'தங்க மீசை'க்கான பணத்தைத் திரட்ட முழு மூச்சுடன்  நன்கொடை வசூலில் இறங்கியுள்ளேன். உங்களின் உதவியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

பணமும் மனமும் உள்ளவர்கள் என் மின்னஞ்சலுக்குத் தகவல் அனுப்புங்கள். தொடர்பு கொள்கிறேன்.

நன்றி.