புதன், 11 ஜூலை, 2018

குமுதம்[வார இதழ்] திருந்தவே திருந்தாதா?!

குமுதம், 'அவரை'க் கடவுளாக்கிக் கதைகள் எழுதுவது பற்றி நமக்குக் கவலையில்லை. இம்மாதிரிக் கதைகளை வெளியிட்டுவரும் இந்த நம்பர்1[???] வார இதழின் 'உள்நோக்கம்' பற்றியும் நாம் ஆராயவில்லை. வாசகனின் சிந்திக்கும் அறிவை இவை முடமாக்குகின்றன என்பதே நம் குற்றச்சாட்டு.

குமுதம், தொடர்ந்து எழுதிவரும் 'மகா பெரியவா' குறித்த 'மிகைக் கற்பனை'க் கதைகளுள் கீழ்வருவதும்[குமுதம், 18.07.2018]  ஒன்று.

திருவானைக்காவுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தின் தலைவர் 'மகா பெரியவா'வைச் சந்திக்கிறார். ''எங்க ஊரில் மாரியம்மன் கோயில் கட்டியிருக்கோம். கும்பாபிசேகம் நடத்தப் போதுமான வசதியில்லை. பெரியவா உதவணும்''னு கோரிக்கை வைக்கிறார்.

ஒரு வேதியரை அழைத்து, ''நீ போய்க்  கும்பாபிஷேகம் செய். அவங்க கொடுக்கிறதை வாங்கிக்கோ''ன்னு சொல்றா பெரியவா.

கிராமம் சென்று அதை நடத்தி முடித்த வேதியர், பெரியவாவின் உத்தரவை அலட்சியப்படுத்தி, அதிகமாகப் பணம் கேட்கிறார். தலைவர் தன் மனைவியின் கழுத்து நகையை அடமானம் வைத்துப் பணம் கொடுக்கிறார். 

வேதியர் வீடு திரும்புகிறார். அன்றைய தினத்திலிருந்தே, அவர் மனைவியின் கனவில் அம்பாள் சூலாயுதத்தோடு தோன்றிப் பயமுறுத்தவே, அந்த அம்மாவின் பல நாள் தூக்கம் பறிபோகிறது.

செய்வதறியாது கலக்கமுற்ற வேதியர், மனைவியை அழைத்துக்கொண்டு மகா பெரியவாவைத் தரிசனம் பண்ணுகிறார்.

இவர்[வேதியர்] ஏதும் சொல்லாத நிலையில்[!!!], ''அம்பாள் சூலத்தோடு தொறத்திண்டு வராளா? வழிப்பறிக்காரன் மாதிரி நீ கழுத்துச் சங்கிலியைப் பறிச்சுண்டு வந்தா அம்பாள் சும்மா இருப்பாளா? போயி, யார் உனக்குச் சங்கிலியை அடகு வெச்சிப் பணம் தந்தாரோ, அந்தச் சங்கிலியை அவர் மீட்டெடுக்க வழி பண்ணு''ன்னு பெரியவா கட்டளை பிறப்பிக்கிறார்.

வேதியர், கிராமத் தலைவரிடம் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறார். தலைவரும் நகையை மீட்கிறார்.

வேதியர் மீண்டும் பெரியவாவைச் சந்திக்கிறார். ஒரு தாம்பாளத்தில் பட்டு வஸ்திரம் கனி வர்க்கம் எல்லாம் வைத்து, பணமும் வைத்து வேதியருக்குக் கொடுக்கச் சொல்றா பெரியவா.

வேதியர் பணத்தை எண்ணிப் பார்த்தபோது. கிராமத் தலைவரிடம் எவ்வளவு வாங்கித் திருப்பிக் கொடுத்தாரோ அவ்வளவு பணமும்[இதுவும் வேதியர் சொல்லாமலே பெரியவாவுக்குத் தெரிந்திருக்கிறது!!!] இருந்ததாம். அதற்கப்புறம் வேதியரின் மனைவிக்கு வழக்கம்போல நல்ல தூக்கம் வாய்த்ததாம்.

பெரியவாவின் கட்டளையை மீறியவர் வேதியர். அம்பாள் அவருடைய கனவில் தோன்றி அச்சுறுத்துவதாகக் கதையமைப்பதே முறையாகும்[இரண்டு கண்களையும் குத்துவதாகக்கூடக் கற்பனை செய்திருக்கலாம்]. அவர் மனைவியைத் துன்புறுத்தியது நியாயம் அல்லவே. கருணைக் கடலான அம்பாளுக்கு இது தெரியாமல் போனது எப்படி? இன்னும் சில குறைகளைச் சுட்டிக்காட்டலாம். இது போதும்.

கல்கி, 'தமிழ் இந்து' போன்ற இதழ்கள், மகா பெரியவாவின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில், அவர் சொல்லிச் சென்ற அறவுரைகளைப் பதிவு செய்கின்றன. குமுதம் போல் புதிது புதிதாய்ப் பொய்க் கதைகள் கற்பித்து, அமைதியாய் வாழ்ந்து முடித்த அந்த  ஆன்மிகப் பெரியவருக்கு அவமரியாதை ஏதும் செய்வதில்லை.

ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களே முகம் சுழிக்கும் வகையில் தொடர்ந்து இட்டுக்கட்டிய கதைகளைக் குமுதம் வெளியிட்டு வருவது வருந்தத்தக்கது.

குமுதம் திருந்த வேண்டும். தவறினால், பெரியவாவைப் பெரிதும் மதித்துப் போற்றுபவர்களால் அது திருத்தப்பட வேண்டும்.

 காத்திருப்போம்; நல்லது நடந்தால் வரவேற்போம்.

திங்கள், 9 ஜூலை, 2018

அவனுக்கு ஐந்து நிமிடம் போதும்! அவளுக்கு?!

மிகப் பழைய[20 ஆண்டுகள் இருக்கலாம்] 'மாலைமதி' இதழில் வாசித்த ஒரு சிறுகதையின் 'கரு'வுக்கு இங்கே 'புது வடிவம்' தந்துள்ளேன். குமுதம் குழுமம் அதிபர் வரதராசன் அவர்கள் என்னை மன்னிப்பாராக!

அவன் வருவதற்கு முன்பு அந்த அறையில் அவளுக்குத் துணையாக இருள் மட்டுமே இருந்தது.

அவன் வரும்வரை 'குளுகுளு' என்றிருந்த அவளின் தந்தக் கடைசல் மேனி இப்போது 'திகுதிகு' என்று எரிந்துகொண்டிருக்கிறது. 

ஒரு மருந்துக் கம்பெனியின் பிரதிநிதியாய் ஒரு மாதம் போல ஊர் சுற்றியவன், எதையெல்லாம் பார்த்தானோ, எவளையெல்லாம் உரசினானோ கட்டுக்கடங்காத காமம் சுமந்து நள்ளிரவில் வீடு திரும்பினான்.

கதவு திறந்ததும் கலைந்து கிடந்த ஆடையைச் சரிசெய்யக்கூட அவளை அனுமதிக்கவில்லை. கட்டிலுக்கு இட்டுச் சென்றான். கட்டியணைத்து இறுக்கினான். 

கவிழ்த்தான்; உருட்டினான்; புரட்டினான். உதட்டோடு உதடு சேர்த்துக் கொஞ்சமாய் அவளின் உமிழ்நீர் சுவைத்தான். எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் நேரம்தான். அத்தனை அவசரம்...அதி வேகம்.

இன்னும் சுவைப்பான், உரசுவான், தொட்டுத் தடவுவான், விடியும்வரை கதை படிப்பான் என்று  அவள் உடம்பு சிலிர்த்துக் காத்திருக்க.....

எதிர்பாராத வகையில், உத்வேகத்துடன் இயங்கி அவன் உச்சத்தைத் தொட்டான், 

அவன் உதடுகள் 'உச்' கொட்டின. சட்டென 'அது' முடிந்துவிட்டதால் உண்டான சலிப்பு அதில் தெரிந்தது. அப்புறம்.....

அப்புறமென்ன, சரிந்து ஒருக்களித்துப் படுத்தான்; கால் வினாடியில் குப்புறக் கவிழ்ந்தான். நாள் முழுக்க மூட்டை சுமந்து ஓய்ந்தவன் போல் உறங்கிப்போனான்.

தெரு நாயின் ஊளைச் சத்தத்தையும் மீறி ஒலித்த அவனின் குறட்டை அவளை முகம் சுழிக்க வைத்தது.

அவளின்  கண்களில் கண்ணீர் பெருகியது; உதடுகளில் உப்புக் கரித்தது.

தன் தேவையை நிறைவேற்றுவதில் காட்டும் வேகத்தை, அவளின் தேவை அறிந்து அதை நிறைவேற்றுவதில் அவன் ஒருநாளும் வெளிப்படுத்தியதில்லை. அதற்கான முயற்சியிலும் அவன் ஈடுபட்டதில்லை.

சுவிட்சைத் தட்டியதும் எரிவது ஆணின் காமம். மறு தட்டுதலில் அது அடங்கிவிடும். சூடு பிடிக்கத் தாமதமாகும் இஸ்திரிப் பெட்டி போன்றது பெண்ணின் காமம். சூடு தணிவதற்கும் நீண்ட நேரம் ஆகும்.

அவள் கவிழ்ந்து கிடக்கும் அவனின் உடம்பை மெலிதாய்த் தொட்டுப் பார்த்தாள். சூடு தணிந்திருந்தது. தன் உடம்பு இன்னமும் கொதித்துக்கொண்டிருப்பதை,  தொட்டுப் பார்க்காமலே அவளால் உணர முடிந்தது!
------------------------------------------------------------------------------------------------------------------