திங்கள், 31 டிசம்பர், 2018

புத்தக வாசிப்பில் தமிழனும் மலையாளியும்!!

தமிழ்நாட்டிலுள்ள பிரபல நூல் வெளியீட்டாளர்கள், பிரபலக் கதாசிரியர்களின் நூல்களைப் பிரசுரித்து விற்பனை செய்தால், பிரசுரித்த பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் சில நூறு பிரதிகளாவது விற்பனை ஆகாமல் தேங்கிக் கிடக்கும். இவற்றைப் பரபரப்பாக விற்பனையாகும் பிற நூல்களோடு இலவசமாகக் கொடுத்துவிடுவார்கள். தவறினால், விற்பனையாகாத பிரதிகள் கரையான்கள், எலிகள், பூச்சிகள் என்று பலவித ஜீவராசிகளுக்கும் இரையாக நேரிடும்.

ஆனால், அருகிலுள்ள கேரள மாநிலத்தில் புத்தக வெளியீடு இப்படியொரு அவலநிலையில் இல்லை.

அங்கே, எந்தவொரு நூலும் எடுத்த எடுப்பில் பத்தாயிரம் பிரதிகள் பிரசுரமாகி விற்றுத் தீர்ந்துவிடுகின்றனவாம்[தரம் காரணமோ?]. இரண்டாம் பதிப்பு, மூன்றாம் பதிப்பு[ஒவ்வொரு முறையும் பத்தாயிரம் படிகள்] என்று அச்சடித்துத் தள்ளுகிறார்களாம்.

அங்கே அவர்கள் தரமான வாசகர்களை நம்பிப் பத்தாயிரம் பிரதிகள் வெளியிடுகிறார்கள். இங்கே பொது நூலகத்தை நம்பி ஆயிரம் பிரதிகள் அச்சிடுகிறார்கள். நூலகம் ஏற்கவில்லை என்றால் பதிப்பாளர் நிலைமை 'ஐயோ பாவம்'தான்.

இங்கு முதல் பதிப்பு நூல்கள் விற்பனை ஆனாலே போதும் என்பது நிலைமை. தொடர் பதிப்புகள் வெறும் கனவு மட்டுமே.

மலையாளிகளின் சுய மொழிப்பற்றும், ஆர்வமும், வெறியும் தமிழர்களுக்கு இல்லை...இல்லவே இல்லை.

மலையாள சினிமாச் சுவரொட்டிகளைப் பார்க்கும்போது, தேனீர்க்கடை மலையாளி, ''ஓ...இது எங்கள் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் கதையாக்கும். ஈ சினிமா தகழி சிவசங்கரம்பிள்ளை கதை அல்லோ'' என்பார். நம் தமிழ்ச் சகோதரரோ.....

''கமல் படம்; ரஜினி படம்; சமந்தா படம்...'' என்றெல்லாம் சொல்லிச் சொல்லிப் பூரிப்பார். 

எம்.டி.வாசுதேவன் நாயர் வெளிநாடு சென்றுவந்த அனுபவங்களை மலையாளத்தில் நூலாக வெளியிட்டால், உடனே அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட ஒரு நாயர் தயாராக இருப்பார்[அவர்கள் தங்கள் மொழி நூல்களைக் காசு கொடுத்து வாங்குகிறார்கள்].

இப்படி, மலையாளிகள் கட்டுக்கோப்பாக, ஒற்றுமையாகச் செயல்பட்டு உயர்ந்து நிற்கிறார்கள்.

தமிழனுக்கு.....

சக எழுத்தாளன் மீது பொறாமைப்பட்டு, வீங்கி வெடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: கண்ணன் மகேஷ்; 'வாங்க எழுதலாம்', தமிழ்ச்சோலைப் பதிப்பகம், போரூர், சென்னை-600116.

வெள்ளி, 28 டிசம்பர், 2018

இனி, தமிழ்நாட்டுச் சாமிகளுக்கு இந்தியில் 'அர்ச்சனை'!!!

கிறித்தவ மதம் எங்கிருந்தோ இங்கு வந்தது. இங்குள்ள எல்லாத் தேவாலயங்களிலும் கிறித்தவர்கள் தமிழில்தான் வழிபடுகிறார்கள்; சடங்குகள் செய்கிறார்கள். அவர்கள் வணங்குகிற சாமி கோபித்துக்கொள்ளவில்லை.

நம் கோயில்களில் உள்ள மிகப் பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழில்தான்[காலந்தோறும் எழுத்து வடிவம் மாறியுள்ளது] உள்ளன.

''சாம்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் -எந்தன்
சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்'' என்றார் பாவேந்தன் பாரதிதாசன்.

நாம் பேசுவதும் எழுதுவதும் தமிழில்தான்.  உலக அளவில், மொழி அறிஞர்களால் பாராட்டப்பட்டது இம்மொழி. 

இம்மொழியில் கோயில்களில் அர்ச்சனை செய்தால் சாமிகளுக்குக் கோபம் வருமா? சாபம் கொடுக்குமா?

இன்னும் எத்தனை காலத்துக்கு, சமஸ்கிருதம் தேவ பாஷை என்று புளுகப்படுவதை நம்பி மூடனாகவே வாழப்போகிறான் தமிழன்? 

இவனின் இந்தச்  சூடுசொரணை கெட்ட அவலநிலை நீடித்தால்.....

இந்தி இந்தியாவின் பெரும்பான்மையினர் பேசும் மொழி. எங்கும் இந்தி எதிலும் இந்தி எனும் நிலை உருவாகிவருகிறது. இந்தி நாட்டை...மன்னியுங்கள், இந்தியநாட்டை ஆளுகிறவர்களுக்கு இந்தியே பிடித்த மொழி. சாமிகளுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இனி 'இந்தி'யாவிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் இந்தியில்தான் மந்திரம் சொல்லப்படுதல் வேண்டும் என்றொரு ஆணை பிறப்பிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆக.....

சமஸ்கிருதத்தின் இடத்தை இந்தி கைப்பற்றவிருக்கிறது[நகைக்காதீர்கள். இதுவும் நடக்கும்]. தமிழ்.....

நம் அரசியல்வாதிகளுக்கான 'மேடை மொழி'யாக என்றென்றும் நீடிக்கும். ஹ...ஹ...ஹ...!!!

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!
------------------------------------------------------------------------------------------------------------------
அமேசான் கிண்டிலில் நான் படைத்த 07 நூல்கள்:
சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!: புத்துணர்ச்சிக் கதைகள் (Tamil Edition)

காமம் பொல்லாதது: பாலுணர்வுச் சிறுகதைகள் (Tamil Edition)ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனிதகுலமும் (Tamil Edition)


கடவுள்?.....ஊஹூம்!: தற்சார்பற்ற சுயசிந்தனைப் பதிவுகள் (Tamil Edition)
பத்து ரூபாயில் கடவுள்: சிறுகதைகள் (Tamil Edition)அடடா இந்தப் பெண்கள்!!!: சிலிர்ப்பூட்டும் சிறுகதைகள் (Tamil Edition)
100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)