செவ்வாய், 2 ஏப்ரல், 2019

'பர...பர...' செய்தி போட்டுக் கலவரத்தைத் தூண்டுகிறதா 'காலைக்கதிர்' நாளிதழ்!?

விற்பனையில் பின்தங்கியிருந்தாலும், வாசகருக்குச் சூடாகவும் சுவையாகவும் செய்தி வழங்குவதில் காலைக்கதிர் நாளிதழ் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சில நேரங்களில், மக்களிடையே மோதல் போக்கை உருவாக்கும் வகையில் இட்டுக்கட்டிய பொய்ச் செய்திகளைப் பரப்புகிறதோ என்றொரு சந்தேகம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை. நேற்றுறு[01.04.2019] அதில் இடம்பெற்ற ஒரு  செய்தி அதற்கு எடுத்துக்காட்டாகும்.*

கர்னாடக முன்னாள் முதல்வரான சித்தராமையா ஒரு நிகழ்வில் கலந்துகொண்டதாகவும், சிலர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள முயன்றபோது, ''நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டவர்களைக் கண்டாலே எனக்குப் பயமாக இருக்கிறது; அவர்களுடன் செல்ஃபி எடுக்கவும் தயக்கமாக இருக்கிறது'' என்று அவர் பேசியதாகவும் குறிப்பிடுகிறது அந்தச் செய்தி.

அதற்கு ஆதாரமாக, சிலர் சித்தராமையாவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற காட்சியைக் அது வெளியிட்டிருக்க வேண்டும். மாறாக, நெற்றியில் குங்குமத்துடன் காட்சியளிக்கும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியின்[அவரை என்னால் அடையாளம் காண இயலவில்லை] படத்தை வெளியிட்டு, சித்தராமையாவுக்கு எதிராக அவரைச் செயல்படத் தூண்டியிருக்கிறது. 

சித்தராமையாவின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றாலும் அதைக் கண்டிப்பதற்கான முன்னுரிமை பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட குங்குமப் பொட்டுக்காரர்கள். 

கண்டித்த ஒரு சிலரின் பெயர்களைக்கூட வெளியிடவில்லை இந்த நாளிதழ்.

கீழ்க்காணும் நகல் பிரதியில் சிவப்புக் கோடிட்ட பத்திகளைக் கவனித்துப் படித்தால். நாளிதழ்களுக்குரிய நடுநிலைப் போக்கைக் காலைக்கதிர் கடைபிடிக்கிறதா, பத்திரிகை தர்மத்தைப் போற்றுகிறதா எனும் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

'[சித்தராமையாவுக்கு] சீண்டுவதே வேலையாப் போச்சு'  -இவ்வாறு உட்தலைப்புக் கொடுத்திருப்பது, 'நடுநிலை வார இதழ்' என்று சொல்லிக்கொள்ளும் காலைக்கதிர்தான். 

இதற்கு முன்பு யாரையெல்லாம் அவர் சீண்டினார் என்பற்கான பட்டியலை அது தந்ததா என்றால்...''ஊஹூம்.''

'கர்னாடக மக்கள் உண்மையில் குமுறிக்கொண்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால், அவர்கள் குமுறி எழுந்து சித்தராமையாவுக்கும் அவர் சார்ந்த பகுத்தறிவு இயக்கங்களுக்கும் அல்லது கட்சிக்கும் எதிராகப் போராட வேண்டும் என்று காலைக்கதிர் ஆசைப்படுவது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

இவ்வாறெல்லாம் ஆசைப்படுவது இதன் வளர்ச்சிக்குக் கொஞ்சமும் பயன்படாது என்பதை உறுதிபடச் சொல்லுகிறோம்.

திங்கள், 1 ஏப்ரல், 2019

எங்கும் இருள்! கொஞ்சமே கொஞ்சம் வெளிச்சம்!

பிறந்த ஊரில் பிழைக்க வழி இல்லாததால், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி மும்பை சென்றவன் கந்தசாமி. அப்போது அவனுக்கு வயது இருபது.

விடுதிகளில் 'ரூம் பாய்', உணவு விடுதிகளில் 'சப்ளையர்' என்று கிடைத்த வேலைகளைச் செய்து, வந்த வருவாயில் கொஞ்சம் சேமித்து, ஒரு 'தேனீர்க் கடை' நடத்தி இரவு பகலாய் உழைத்ததில் ஒரு நடுத்தர உணவு விடுதியின் உரிமையாளன் ஆனவன் கந்தசாமி. தாராவியில் அறிமுகமான ஒரு தமிழ்க் குடும்பத்துப் பெண்ணை மணந்துகொண்டு குடும்பியாகவும் ஆனான். வாழ்க்கை ஓடியது.

பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை மனதில் துளிர்விட,  நான்கு நாட்கள் மனைவியிடம் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் பிறந்த ஊர் வந்து சேர்ந்தான்.

வந்த சில நாட்களிலேயே 'ஏன் வந்தோம்?' என்றாகிவிட்டது.

அப்போது ஏழைகளாக இருந்தவர்களில் பலர் இப்போதும் ஏழைகளாகவே இருந்தார்கள்; அவர்களில் சிலர் 'பரம ஏழை'களாக மாறியிருந்தார்கள். 

ஆனால், விதிவிலக்காக, அப்போது லட்சாதிபதியாக இருந்து 'கந்துவட்டி' கலியமூர்த்தி இப்போது பல கோடிகளுக்கு அதிபதி ஆகியிருந்தான். அப்போதைய எம்.எல்.ஏ.விடம் அடியாளாக இருந்த 'குத்துவெட்டு' குமார் இப்போது எம்.எல்.ஏ. ஆகி, ஏகத்துக்குச் சொத்துச் சேர்த்திருந்தான். அன்று, கள்ளச் சாராயம் காய்ச்சுவதைச் சிறுதொழிலாகச் செய்துகொண்டிருந்த மாரிமுத்து இப்போது பெரியதொரு சாராய சாம்ராஜ்யத்துக்கே அதிபதியாக இருந்தான்.

வாழ்க்கை வெறுத்துப்போனது கந்தசாமிக்கு. மும்பை திரும்பிட நினைத்து ஊர்க்கோடியிலிருந்த பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தான்.

அவனைக் கடந்துசென்ற ஒரு கார் வேகம் தணிந்து நின்றது. ''கந்தசாமி, நல்லா இருக்கியா?'' என்று விசாரித்துக்கொண்டே காரிலிருந்து இறங்கி வந்தார் நல்லதம்பி; அயோக்கியர்களால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உதவப்போய் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு போராடியவர்; காவல்துறை விசாரணை, நீதிமன்ற வழக்கு என்று நிறையக் கடன்பட்டவர்.

''அய்யா, நான் நல்ல இருக்கேன். நீங்க?'' என்று பரிவுடன் கேட்டான் கந்தசாமி.

''இருந்த கொஞ்சம் நிலத்தையும் வித்துக் கடனை அடைச்சேன். மீதியிருந்த பணத்தோடு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினேன். கடுமையா உழைச்சதில் நல்ல வருமானம் வருது'' என்றார் நல்லதம்பி; கந்தசாமியுடன் பேருந்து நிலையம் சென்று அவனை வழியனுப்பி வைத்தார்.

கொஞ்சமாய் மன பாரம் இறங்கிய நிலையில் தன் பயணத்தைத் தொடர்ந்தான் கந்தசாமி.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------