சனி, 13 ஏப்ரல், 2019

தமிழனாம் தமிழன்...நல்லா வருது வாயில!

நைட்டும்பான், ஃபைட்டும்பான்;

எப்பப் புறப்படுறீங்கன்னா 'ஏர்லிமார்னிங்'பான்;

மசுரு வெட்டிக்கிறத 'ஹேர் கட்டிங்' ஆக்கினவன் இவன்;

'பை த பை', 'ஆன் தி வே', 'வொய்ஃபு', 'நைஸ்', 'சைஸ்'னு இங்கிலீசு கலக்காம இவனால பேசவே முடியாது.

பெத்த புள்ளகளுக்குத் தமிழில் பேரு வைக்கிறதை தகுதிக் குறைவா நினைக்கிறவன்.

அன்றாடக் கைச்செலவுக்குக் காசில்லேன்னாலும் கடன்பட்டாவது புள்ளைகளைக் கான்வெண்ட்டுலதான் படிக்க வைப்பான்.

இவன் நடத்துற கடைக்கெல்லாம் இங்கிலீசில்தான் பெயர்ப்பலகை. தமிழுக்குப் போனாப்போகுதுன்னு பலகையின் ஓர் ஓரத்தில் கொஞ்சுண்டு இடம்.

தமிழ் நீச பாஷைன்னு எவனோ நீசப்பயலுக சொன்னதை வேதவாக்கா நம்புறவன். கோயிலுக்குப் போனா, தமிழில் அர்ச்சனை பண்ணுன்னு அர்ச்சகர்கிட்டே இவன் ஒருபோதும் சொன்னதில்லை. 

''தமிழ் வாழ்க! வளர்க!! வெல்க!! என்றெல்லாம் நம் அரசியல்வாதிகள் மேடையில் முழங்கும்போது தவறாம கை தட்டுவான்.

மோடி தாடின்னு தமிழ் தெரியாத பெரிய பெரிய தலைவர்கள் வந்து, ''வணக்கம்''னும் ''நன்றி''ன்னும் ஒப்புக்கு நாலு தமிழ் வார்த்தைகளை ஒப்பிச்சாப் போதும், ''ஆஹா...ஓஹோ''ன்னு ஆனந்தக் கூச்சல் எழுப்பி ஆர்ப்பரிப்பான்.

இவன்தான் தமிழன்! 

தமிழனாம் தமிழன்...வாயில வரக்கூடாத வார்த்தையெல்லாம் வருது; மனசு கொதிக்குது!
தொடர்புடைய படம்
==================================================================================


வெள்ளி, 12 ஏப்ரல், 2019

பிரேமலதா அம்மையாருக்கு ஒரு விண்ணப்பம்!

''கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு ''ஐயோ கடவுளே'ன்னு அப்புறம் புலம்பாதீர்கள்'' என்று விசயகாந்தின் மனைவி மதிப்பிற்குரிய பிரேமலதா பேசியதாக 'News 7' தொலைக்காட்சி இன்றிரவு[12.04.2018] 08.45 மணி அளவில் செய்தி வெளியிட்டது.

பாவம் பிரேமலதா. தமிழக வாக்காளர்கள் அத்தனை பேரும் கடவுள் பக்தி உள்ளவர்கள் என்ற நினைப்பில் இவ்வாறு பேசியிருக்கிறார். கொஞ்சமே கொஞ்சம் யோசித்திருந்தால்.....

கடவுள் பக்தி இல்லாதவர்களும் இம்மண்ணில் பரவலாக இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். 

நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் கடவுள் பக்தி இல்லாத வேட்பாளர்களுக்கான பட்டியலை ஊடகங்கள் வாயிலாக அவர் அறிவித்தால், அது கடவுள் பக்தி இல்லாத வாக்காளப் பெருமக்களுக்குப் பெரிதும் உதவிகரமாக அமையும் என்பது என் எண்ணம்.

அறிவிப்பாரா தமிழர் தலைவி பிரேமலதா?
பிரேமலதா பேச்சு சற்று முன்னர் க்கான பட முடிவு
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------