திங்கள், 27 மே, 2019

தமிழகத்தில் மோடியின் படுதோல்விக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சொல்லும் காரணங்கள்!

#தமிழகம் பற்றியும் இங்கு பா.ஜ.க.வை வளர்ப்பது பற்றியும் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் இன்னும் அக்கறை காட்டியிருக்க வேண்டும். இந்நாள்வரை அவர்கள் நடந்துகொண்ட விதம், பா.ஜ.க.வை ஒரு வட இந்தியச் சார்புள்ள கட்சியாகவே தமிழர்களை எண்ண வைத்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக, எல்லாத் திட்டங்களுக்கும் இந்திப் பெயரையே வைக்கிறார்கள். இதைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை. இதன் காரணமாகப் பா.ஜ.க.வை ஒரு அந்நியப்பட்ட[தங்களுக்குத் தேவையில்லாத] கட்சியாகவே எண்ணுகிறார்கள
உலகமே வியக்கும் அளவுக்கு மாபெரும் வெற்றியை ஈட்டிய மோடியால் தமிழகத்த்இல் ஒரு இடத்தைக்கூடை கைப்பற்ற இயலாமைக்குக் காரணம் மேற்குறிப்பிடப்பட்டவைதான்.

மோடியும் அமித்ஷாவும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இடம்பெறவே இல்லை. காரணம்.....

காலை 10 மணிக்கு விமானத்தில் வந்திறங்கி, நட்சத்திர ஓட்டலில் தங்கி, ஏதாவது ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு மாலையில் விமானம் மூலம் டெல்லிக்குப் பறந்துவிடுவதுதான்.

இவர்கள் முதலில், இந்தியை மட்டுமே போற்றும் போக்கிலிருந்து விடுபடுவதோடு, வடஇந்தியர் என்னும் மனப்பான்மையிலிருந்தும் கண்டிப்பாக விடுபடுதல் மிக மிக முக்கியம். 

அடுத்து, தமிழக மக்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கு இவர்கள் முயற்சி செய்தல் வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும் வேண்டும். தமிழகம் வந்து, சிறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து, மனம் திறந்து அவர்களுடன் உரையாடுதல் அவசியத் தேவை.

இவ்வகையில் செயல்படுவதன் மூலம் தமிழ் மக்களின் மனங்களை இவர்களால் கண்டிப்பாக வெல்ல முடியும்#

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி பி.எஸ்.ராகவன் அவர்கள் 'தமிழ் இந்து'[27.05.2019]வுக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதியே மேற்கண்ட கருத்துத் தொகுப்பு.

ஞாயிறு, 26 மே, 2019

'சண்டி யாகம்' செய்த காங்கிரசாரும் 'சத்துரு சம்ஹார யாகம்' செய்த எச்.ராஜாவும் இனியேனும் திருந்துவார்களா?!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு, தேர்தலில் வெற்றிக் கனிகளைப் பறிப்பதற்காகத் தமிழகக் காங்கிரசாரும், தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிடுபவர்களைத் தோல்வியுறச் செய்வதற்காகச் 'சத்துரு சம்ஹார' யாகத்தை[சத்துரு - எதிரி; சம்ஹாரம் - அழிப்பது] 2019 மார்ச் மாதம் இறுதியில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜாவும செய்து முடித்தார்கள்.

மேற்கண்டவர்கள் செய்யும் யாகங்கள் மூடத்தனமானவை. அவற்றால் கிஞ்சித்தும் பயனில்லை என்று நான் வெவ்வேறு பதிவுகள் மூலம்  நம்பர் 1 பதிவரான நான்[ஹி...ஹி...ஹி!] சுட்டிக்காட்டினேன். 

தமிழகக் காங்கிரஸ் கட்சிக்காரர்களோ எச்.ராஜாவோ இதைப் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடியே யாகங்களைச் செய்து முடித்தார்கள்.

செய்த யாகங்களால் பயன் ஏதும் விளைந்ததா என்றால் இல்லை என்பதே உரிய பதிலாக இருக்க முடியும்..

ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. நம்ம ராசாவுக்கு நேர்ந்ததும் அதுவே.

இம்மாதிரி யாகங்களால், மழை பெய்வித்தல், சுனாமி போன்றவற்றால் விளையும் சீரழிவுகளைத் தடுத்தல் என்று எந்தவொரு பயனும் விளைந்ததில்லை என்பது வரலாறு.[அரிதாக எப்போதாவது தற்செயலாக விளையும் பயன்களைக் கணக்கில் கொள்ளுதல் கூடாது]. 

மேற்கண்ட நிகழ்வுகளும் இக்கருத்துக்கு வலிமை சேர்ப்பவை ஆகும்.

எச்.ராஜா, காங்கிரசார் என்றில்லை, இனி யாகம் செய்து காரியம் சாதிக்க நினைப்போர் எவராயினும் அம்முயற்சியைக் கைவிடுதல் வேண்டும் என்பது என் பரிந்துரையாகும்.