செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ஆகச் சிறந்த உலகின் நெ.1 மூடத்தனம்!!!

‘கோயில் பலன்கள்’ என்னும் சிறு தலைப்பில், ‘ராணி’ [11.08.2019] வார இதழில் இடம்பெற்ற ‘வீட்டு வாஸ்து’ குறித்த விதிமுறைகளையும், அவற்றின் மீதான நம் ஐயங்களையும். வாசித்து மகிழுங்கள்; பயன் பெறுங்கள்!

பலன் 1:
கோயிலுக்கு நேர் எதிரே வீடு அமையக்கூடாது. அமைந்தால் அது ‘ஆலயக் குத்து’ எனப்படும். அந்த வீட்டில் அதிக ஆசாரத்துடன் இருத்தல் வேண்டும் குறிப்பாக, மாதவிலக்கான பெண்கள் அந்த வீடுகளில் இருத்தல் கூடாது.

ஐயம்:
மாத விலக்கான பெண்கள் வீட்டில் இல்லாம வேறு எங்கே அடைக்கலம் தேடிப் போறது? கோயிலுக்கு எதிரே மாதவிலக்கு ஆகக்கூடாதுன்னா, ‘ஆயி’[மலம்]. மூத்திரம் எல்லாம் போலாமா? இதுகளைவிடவும் மாதவிலக்கு அசிங்கமானதுன்னு எந்த மடையன் சொன்னான்?

பலன் 2:
தாம்பத்திய உறவு கொள்வதில் தம்பதியர் கட்டுப்பாடு காத்தல் வேண்டும்.

ஐயம்: 
கட்டுப்பாடுன்னா என்ன? ஒன்னும் புரியலையே. கோயிலுக்குப் போயி, தாலாட்டுப் பாடி சாமியைத் தூங்க வைச்சிட்டு வந்து உடலுறவில் ஈடுபடுறதா? சாமி கோயிலைவிட்டு வெளியேறி ஊர்வலமோ சுற்றுலாவோ போற நேரம் பார்த்துப் புணர்ச்சி பண்றதா?

பலன் 3:
வீட்டுக்கு எதிரே பாழடைந்த வீடு, பாழ்பட்ட கிணறு, குட்டிச்சுவர் எல்லாம் இருத்தல் கூடாது.

ஐயம்:
இருந்தா..... பாழடைஞ்ச வீடு மாதிரி கோயிலும் பாழடைஞ்சி போயிடுமா?

குட்டிச்சுவர் அவசரத்துக்கு ஒதுங்குற இடம். அவசரம்னா, ஒன்னுக்கு இருக்கிறது; ‘அது’ விசயத்தில் ஒன்னா இருக்கிறதுன்னு எதுவாகவும் இருக்கலாம். சாமி இதையெல்லாம் கண்டும் காணாம இருக்கப் பழகிக்கணும்!
பாழடைந்த வீடு க்கான பட முடிவு
தரமான பல உள்ளடக்கங்களுடன் பெரும் எண்ணிக்கையிலான வாசகர்களின் நிரந்தர ஆதரவைப் பெற்ற முன்னணி வார இதழான ‘ராணி’, இனியும் இதுபோன்ற வாஸ்துக் குறிப்பு[குப்பை]களைத் தவிர்ப்பது நல்லது.
==============================================================================


திங்கள், 5 ஆகஸ்ட், 2019

பக்தியின் பெயரால் தமிழை அழிக்கும் இந்து முன்னணித் தமிழர்கள்!!!

இப்போதெல்லாம் தமிழ் அழிப்பின் மூலம் சமஸ்கிருதம் வளர்ப்பதில் பெரிதும் முனைப்புக் காட்டுபவர்கள், ‘ஆரியர்கள்’ என்றும் ‘வந்தேறிகள்’ என்றும் அழைக்கப்படும் பிராமணர்களைக் காட்டிலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இந்து முன்னணியினர்தான்.

இதற்கு ஏராள எடுத்துக்காட்டுகள் தர இயலும். இப்போதைக்கு ஒன்று மட்டும்.

#ஈரோடு மாநகர், மாவட்ட இந்து முன்னணி சார்பில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள் ‘பிரதிஷ்டை' செய்யப்பட்டு, 'விசர்ஜனம்' செய்யப்படும் என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது# -இது, இன்றைய[05.08.2019] நாளிதழ்ச்[இந்து தமிழ்] செய்தி.

அதென்னய்யா பிரதிஷ்டை? என்னய்யா விசர்ஜனம்?

குறிப்பிட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து[நிறுவி], மந்திரங்கள் ஓதி, அச்சிலைகளுக்குள் கடவுளைக் குடியேற்றுகிறார்களாம். அதாவது.....

சிலைகளுக்கு உயிர்கொடுக்கிறார்கள் வேத மந்திரம் கற்ற விற்பன்னர்கள். இதற்குப் பெயர்தான் பிரதிஷ்டையாம்.

அணு முதல் அண்டம்வரை அனைத்துப் பொருள்களிலும் கடவுள் ஊடுருவியிருப்பதாகச் சொல்கிறார்கள் ஆன்மிகம் பேசும் மகான்கள். அது உண்மையாயின் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளிலும் அவர் இருக்கிறார் என்றாகிறது. அப்புறம் மந்திரங்கள் சொல்லி உயிரூட்டுவது, அதாவது ‘பிரதிஷ்டை ’ செய்வது எதற்கு?

‘கரைத்தல்’ என்னும் தூய தமிழ்ச்சொல் இருக்கையில் ‘விசர்ஜனம்’ என்னும் புரியாத வடசொல்[சமஸ்கிருதம்] எதற்கு?
விசர்ஜனம் க்கான பட முடிவு
ஆக, சாமிகளின் பெயரால் அவர்கள் எதைச் சொன்னாலும் அதை முழுமையாக நம்பி நடைமுறைப்படுத்துவது அன்று தொட்டு இன்றுவரை தமிழரின் வழக்கமாக உள்ளது. காரணம்.....

எதிர்க்கேள்வி ஏதும் எழுப்பினால் கடவுள் தண்டிப்பார் என்ற அச்சம்.

இதன் விளைவாக ஏராள மூடநம்பிக்கைகளை நம்மவர்கள் சுமந்து திரிகிறார்கள்.

பகுத்தறிவை அடகு வைத்து, இந்த மோசடிக் கும்பலுக்கு உறுதுணையாக இருந்து செயலாற்றுபவர்கள் இந்து முன்னணி சார்ந்த தமிழர்கள்.

இந்த முன்னணி மூடநம்பிக்கைத் தமிழர்கள் தம் பகுத்தறிவை அடகு வைப்பதை நாம் பொருட்படுத்தவில்லை. தாய்மொழியாம் தமிழையும் அல்லவா அடகு வைக்கிறார்கள்!

இவர்களைக் கண்டித்துத் திருத்துவது அனைத்துத் தமிழர்களின் கடமையாகும்.
=================================================================================