திங்கள், 16 செப்டம்பர், 2019

நன்றி மறவாத முன்னாள் நடுவணமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!!!

“இந்தி மட்டுமே இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்தும்” என்று அதிபுத்திசாலி அமைச்சர் அமித்ஷா சொல்லிவைக்க, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், கர்னாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா போன்றோரும் கடும் கண்டணம் தெரிவித்துவரும் இன்றைய சூழலில்.....

தனக்கு அமைச்சர்[முன்னாள்] பதவி தந்ததை எண்ணி இன்றளவும் மோடிக்கு நன்றி பாராட்டும் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், “தமிழ் மிகப் பழைமையான மொழி என்று தமிழைப் பாராட்டியவர் மோடி. தமிழின் மீது பற்றுக்கொண்ட ஒரே இந்தியப் பிரதமர். இதை நினைந்து பார்க்கத் தவறிவிட்டான் தமிழன். இவன் நன்றி கெட்டவன்” என்றெல்லாம் திருவாய் மலர்ந்திருக்கிறார்[இன்றைய{16.09.2019} ஊடகச் செய்தி].
பொன்னார் க்கான பட முடிவு
எந்தவொரு பிரச்சினை ஆனாலும் புரியாமல் பேசிச் சமாளிப்பதில் இவருக்கு இணையானவர் எவரும் இல்லை எனலாம்.

‘இந்தியே இந்தியாவை அடையாளப்படுத்தும்’ என்று சொன்னவர் அமித்ஷா. ஏராளமான கண்டனங்களுக்கு ஆளாகியிருப்பவரும் அவரே. தமிழின் மீது அவர் பற்றுக்கொண்டவர் என்பதற்கு ஆதாரம் இருப்பின் அதை வெளியிடுதல் வேண்டும். அதற்கு மாறாக, தமிழ் குறித்தான மோடியின் புகழுரைகளை மேற்கோள் காட்டி.....

“தமிழன் நன்றி இல்லாதவன்” என்கிறாரே, இதை எப்படிப் புரிந்துகொள்வது?!

மோடி நம் மொழியைப் பாராட்டினார்[அமித்ஷாவின் பேச்சு குறித்து இவர் இன்னும் வாய்திறக்கவில்லை] என்பதற்காக, அமித்ஷா செய்த குற்றத்தை நாம் மறந்துவிட வேண்டும் என்கிறாரா பொன்னார்?

ஒரு மொழியை வெறுமனே பாராட்டுவது வேறு; அதன் தகுதியை மேம்படுத்துவது வேறு என்பதுகூடப் புரியாதவரா இந்த மேனாள் அமைச்சர்?!

“இந்தி இந்தியாவின் அடையாள மொழி என்றார் அமித்ஷா. அவர் சொன்னது தவறு. இந்தியாவை அடையாளப்படுத்துவது இந்தி அல்ல; பழம் பெருமை வாய்ந்த தமிழ்தான்” என்று மோட்டி அறிவித்திருந்தால்......

அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் நாளெல்லாம், “மோடி வாழ்க! ... மோடி வாழ்கவே!!” என்று முழக்கமிட்டுக்கொண்டே இருக்கலாம்.

இனியேனும் கொஞ்சம்...கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்துப் பேசுவதற்குப் பயிற்சி மேற்கொள்ளுவாரா பொன், ராதாகிருஷ்ணன்?
=================================================================================

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

தேன் சிந்தும் வேப்ப மரம்!!!

பதிவுக்கு இப்படியொரு தலைப்பைக் கொடுத்து எதையேனும் கிறுக்கி வைத்தால் நீங்கள் உள்நுழைந்து வாசிக்க முற்படுவீர்களா? 

நிச்சயமாக இல்லை.

நீங்கள் சிந்திக்கத் தெரிந்தவர். வேப்ப மரத்தில் தேன் வடியாது; பால்[நாம் குடிக்கிற பால் அல்ல] வடியும். அது இயல்பானது என்பது உங்களுக்கு அத்துபடியாய்த் தெரியும்.

உங்களை ஒத்தவர்கள் இந்த நாட்டில் வெகு சிலரே. மற்றபடி, எங்கெங்கு காணினும் முட்டாள்களே நீக்கமற நிறைந்துள்ளனர்.

இந்த உண்மையைப் புரிந்து வைத்திருக்கும்  ஊடகக்காரர்கள்.....

எங்கேனும் ஒரு வேப்ப மரத்தில் பால் வடிந்தால், ‘இன்ன ஊரில் வேப்ப மரத்தில் பால் வடிகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று குழுமி, மரத்துக்குப் பூஜை செய்து வழிபடுகிறார்கள்’ என்று செய்தி  சொல்லி/ வெளியிட்டுப் பத்திரிகையின் விற்பனையை அல்லது, தொ.கா.வின் பார்வையாளர்களை அதிகரிக்க முயல்கிறார்கள். 

வேப்பங்காயைப் பறித்தால் பால் சிந்துவதைக் கண்கூடாகக் காணலாம். அந்தப் பால்தான் அதிக அளவில் ஊறும்போது மரத்தின் கிளையிலும் அடிமரத்திலும் வெளிப்பட்டு வழிகிறது.

இது தெரிந்திருந்தும், வேப்ப மரத்தில் பால் வடிவது ஓர் அதிசயம் என்பதாகச் செய்தி வெளிட்டு, மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுவிடாமல் தடுக்கிறார்கள் ஊடகக்காரர்கள். மூடர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருந்தால் இவர்களின் காட்டில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கும்!

“வேப்ப மரத்தில் பால் வடியாமல் தேனா வடியும் முட்டாள்களே?” என்று கேட்டு இவர்களைச் சாடுவதற்கு இங்கு யாரும் இல்லை என்பது மிகப் பெரிய சோகம்.

அரசும் கண்டுகொள்வதில்லை. காரணம்.....

ஊடகங்களின் ஆதரவு இவர்களுக்கு நிரந்தரத் தேவையாக இருப்பதுதான்!