செவ்வாய், 31 மார்ச், 2020

அம்மம்மா!...அண்டவெளியில் இத்தனை சூரியன்களா!!!

நாம் பார்க்கும் சூரியனிலிருந்து ஒளி நம் பூமிக்கு வந்துசேரப் பத்து நிமிடங்கள்தான் ஆகிறது. பூமிக்குச் சற்றுத் தொலைவில் உள்ள அடுத்த சூரியன் 04[நான்கு] ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. அந்தச் சூரியனின் ஒளியானது நம்மை வந்தடைய நான்கு ஆண்டுகள் ஆகும்.

வெகு தொலைவில் இன்னும் பல சூரியன்கள் உள்ளனவாம். அவற்றிலிருந்து ஒளிக்கிரணங்கள் இங்கு வந்தடைய லட்சக்கணக்கான ஒளியாண்டுகள் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்தப் பூமி உருவாவதற்கு முன்னரே வெகு வெகு வெகு தொலைவிலிருக்கும் பல சூரியன்கள் தத்தம் ஒளிக்கிரணங்களை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அந்தக் கிரணங்கள், பூமி உருவாகி 450 கோடி  ஆண்டுகள் ஆன பிறகும் இங்கு வந்துசேரவில்லையாம்.

அந்தச் சூரியன்களுக்கு அப்பாலும் பல சூரியன்கள் இருக்கக்கூடுமாம். நெடு நெடு நெடு நெடு நெடுந் தொலைவிலுள்ள அவற்றின் ஒளிக்கிரணங்கள் நொடிக்கு ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் மைல்கள் என்ற அளவில் அதிபயங்கர வேகத்தில் பயணம் செய்துகொண்டே இருக்கின்றன. இருந்தும், அவை வந்து சேருவதற்கு முன்னரே இந்தப் பூமி அழிந்தும் போகலாம் என்று அனுமானிக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

இவையெல்லாம் விண்வெளியில் நிகழும் விந்தைகள். 

ஒட்டுமொத்தப் பிரபஞ்ச வெளியில் இம்மாதிரி எத்தனை எத்தனையோ அதிசயங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கக்கூடும். அனைத்தையும் மனித அறிவால் அனுமானிப்பதென்பது எக்காலத்தும் சாத்தியமே இல்லை என்கிறார்கள் இந்த அறிஞர்கள். இந்த அற்ப அறிவை வைத்துக்கொண்டுதான் கடவுள், ஆன்மா, பூதம் பேய், பிசாசு, சொர்க்கம் நரகம் என்று கதையளந்துகொண்டிருக்கிறார்கள் நம் அவதாரங்களும் ஆன்மிகப் பிதாமன்களும்!
                                 =============================
ஓர் அறிவியல் பருவ இதழிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்த குறிப்புரை கொண்டு எழுதப்பட்ட பதிவு இது. இதழின் பெயரைக் குறித்துவைக்கவில்லை.

ஞாயிறு, 29 மார்ச், 2020

நட்சத்திரம் உருவாவது எப்படி?

அண்டவெளியில் நிறையவே ஹைட்ரஜனும் ஹீலியமும் இருக்கும். ஏற்கனவே, விண்வெளியில் சிதறிக் கிடக்கும் அணுக்கள் இவற்றுடன் கலக்கும். 

காலப்போக்கில், இவை ஒன்றிணைந்து கலந்து பல மில்லியன் கிலோமீட்டர் நீளம் கொண்ட ‘அண்டவெளி’ மேகங்களாக[நம் தலைக்கு மேல் தெரிகிற மேகங்கள் அல்ல] உருவாகும்.

இந்த அண்டவெளி மேகங்கள் பூமியிலிருந்து கோடானுகோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இடம்கொண்டிருக்கும்.

ஒரு கட்டத்தில், ஒன்றுதிரண்டிருக்கும் இவை சுழல ஆரம்பித்து, ஈர்ப்பு விசை காரணமாகப் பிரமாண்டமான உருண்டையாக மாறித் தொடர்ந்து சுழன்றுகொண்டே இருக்கும்.

இந்நிலையில், பிரமாண்ட உருண்டையின் மையப்பகுதி அதி பயங்கரமாக அழுத்தப்பட்டு அப்பகுதியில் பல மில்லியன் டிகிரி அளவுக்கு வெப்பம் தோன்றும்.

ஒரு கட்டத்தில், அங்கே அணுச்சேர்க்கை நிகழ்ந்து ஒரு நட்சத்திரம் உருவாகி  ஒளிவிடத் தொடங்குகிறது.

சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களும் தோன்றக்கூடும்.

சூரியன் என்னும் நட்சத்திரம் தோன்றியதும் இவ்வகையில்தான். சூரியனின் தோற்றத்தைத் தொடர்ந்து பூமியும் தோன்றியது.

நம் உடம்பில் உள்ள அணுக்கள் உட்பட, பூமியில் உள்ள அனைத்து அணுக்களுமே அண்டவெளி நட்சத்திரங்களிலிருந்து தோன்றியவைதான். அந்த வகையில், இங்குள்ள உயிர்கள் அனைத்தும் நட்சத்திரக் குழந்தைகளே என்று சொல்வதில் தவறேதும் இல்லை.
Lonely young star caught in a growth spurt | Cosmos
=======================================================================
எனக்கு அறிவியலறிவு மிக மிகக் குறைவு. அறிவியல் பதிவுகள் எழுதும் ஆசையோ அதிகம். ஆழ்ந்த படிப்பறிவு கொண்டு எழுதுதல் சாத்தியம் இல்லையாதலால், அவ்வப்போது அறிவியல் நூல்களிலிருந்து ‘சுட்டெடுத்து’ப் பதிவிடுதல் வழக்கம்.

என்.ராமதுரை அவர்களின், ‘அணு-அதிசயம்-அற்புதம்-அபாயம்’ என்னும் நூலிலிருந்து திரட்டிய கருத்துகளின் தொகுப்பே இப்பதிவு. 

மறைந்த அந்த அறிஞருக்கு என் நன்றி.