புதன், 8 ஏப்ரல், 2020

அடடா!...மதவாதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!!

இம்மண்ணில் தோன்றிய மதங்களை எண்ணி விடலாம். மதவாதிகள் பரப்பிய புனைகதைகளையும், கற்பித்த பொய்ச் சம்பவங்களையும் எண்ணி முடிப்பது சாத்தியமே இல்லாத ஒன்று!

“தீய சக்திகளை நிர்மூலம் செய்து நல்லவர்களை வாழ வைக்கப் பல அவதாரங்கள் எடுத்தார் எங்கள் கடவுள்; இன்னும் எடுக்க இருக்கிறார்.” 

"பாவிகளின் பாவங்களைச் சுமப்பதற்காகவே தேவன் இங்கே மனிதனாகப் பிறக்கிறார். செத்துப் பிழைத்து அதிசயங்கள் நிகழ்த்துகிறார்.” 

“நாங்கள் தொழுகின்ற கடவுளே உண்மையானவர். வாருங்கள். வந்து கையேந்தி முறையிடுங்கள். நீங்கள் கேட்பதெல்லாம் அவர் தருவார்.” 

மதவாதிகள் பலரும், மேற்கண்டவை போன்ற பல உறுதிமொழிகளைக் காலங்காலமாய்ப் பரப்புரை செய்தார்கள்; செய்துகொண்டிருக்கிறார்கள். அவை, எக்காலத்தும் நிறைவேற்றப்படாத நிலையிலும் அறியாமையில் புதையுண்டு கிடந்த/கிடக்கும் அப்பாவி மக்கள் அவற்றை நம்பினார்கள்; நம்புகிறார்கள்.

கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கக் கற்ற எவரும் நம்பியதில்லை. இவர்களின் எண்ணிக்கை உலகின் மக்கள் தொகையில் கணிசமானது.

இந்தக் கணிசமானவர்களை மட்டுமல்லாது, பிற மதம் சார்ந்தவர்களையும் தம் பக்கம் இழுக்க அனைத்து மதத் தலைவர்களுக்கும் மிக மிக மிக அரிய வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. அது.....

இருந்த இடத்தில் இருந்துகொண்டே[ஒன்றுகூடினால் கொரோனா வைரஸ் தாக்கிக் கொன்றுவிடும்] தத்தம் கடவுளிடம் வேண்டுகோள் வைத்து, ஒட்டுமொத்த உலகையும் கதிகலங்கச் செய்துகொண்டிருக்கிற இந்தக் கொடூரக் கொரோனாவைச் சில மணித்துளிகளில், ஏன், மிக மிக மிகச் சில நொடிகளில் பூண்டோடு அழித்தொழிக்கலாம். 

“இதோ இக்கணமே இதை நாங்கள் சாதித்துக் காட்டுகிறோம்” என்று சவால் விட்டுச் செய்து முடிப்பதற்கான அரிய வாய்ப்பு அனைத்து மதத் தலைவர்களுக்கும் வாய்த்திருக்கிறது[இதற்கு முன்பு கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் நழுவவிட்டுவிட்டார்கள்!].

வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள, உடனடியாக அவர்கள் களத்தில் இறங்குவார்களா?

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

எனக்கு மிகமிக மிகமிக மிகமிகப் பிடித்த ஜென் கதை!!!

இந்தக் கதை என்னைவிடவும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். படிக்கத் தவறாதீர்.

ஜென் மாஸ்டர் | Tamil and Vedas
வயதான ஜென் குரு அவர்.

அவருக்கு மூன்று சீடர்கள் இருந்தார்கள். ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பை இனி யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசித்தார்.

சீடர்களை அழைத்தார்; சொன்னார்:

“நீங்கள் மூவருமே எனக்குப் பிடித்த சீடர்கள்தான்.  மூவரில் ஒருவரிடம் ஆசிரம நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க நினைக்கிறேன். ஒரு தேர்வுக்கு இன்று உங்களை உட்படுத்த இருக்கிறேன்.

நீங்கள் மூவரும் அவரவர் விருப்பத்திற்கேற்பச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள். பயண நேரத்தில், கடவுளைப் பற்றித் தொடர்ந்து சிந்தியுங்கள். சிந்தனை மிக ஆழமானதாகவும் அறிவுபூர்வமானதாகவும் இருத்தல் வேண்டும்.

இன்றே உங்களின் பயணத்தை மேற்கொள்ளுங்கள். ஓராண்டு நிறைவு பெற்றவுடன் திரும்பி வாருங்கள். வந்தவுடன், கடவுள் குறித்து நீங்கள் சிந்தித்து அறிந்தவற்றை விவரித்துச் சொல்லுதல் வேண்டும். உங்களின் கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்த்து உங்களில் ஆசிரமப் பொறுப்பை ஏற்கப் போகிறவர் யார் என்பதை அறிவிப்பேன்.”

குரு சொல்லி முடித்தவுடன் மூன்று சீடர்களும் தத்தம் பயணத்தை மேற்கொண்டார்கள்.

காலச்சக்கரம் சுழல, ஓராண்டு நிறைவு பெற்றது.

மூன்று சீடர்களும் ஆசிரமம் திரும்பினார்கள்.

கடவுள் குறித்த அவர்களின் கருத்தைச் சொல்லுமாறு பணித்தார் குரு.

“குருவே, நான் கடவுளைக் கண்டேன்.  அவருக்கு உருவம் இல்லை. அவர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார்” என்றான் ஒரு சீடன்.

“இறைவனுக்கு உருவம் உள்ளது. ஒளி வடிவமாக அவர் இருக்கிறார் என்பதை என்னால் உறுதிபடச் சொல்ல முடியும். கண்களால் அவரைக் காண இயலாது. மனதால் மட்டுமே அது முடியும்” என்றான் இரண்டாவது சீடன்.

“குருவே எனக்குக் குழப்பமாக உள்ளது. கடவுளை ஆறறிவால் அறியவோ, மனத்தால் உணரவோ என்னால் முடியவில்லை” என்றான் மூன்றாவது சீடன்.

குரு மெலிதானதொரு புன்னகையை இதழ்களில் படரவிட்டார்; சொன்னார்: “நீ சொன்னதுதான் உண்மை. நீதான் இனி இந்த ஆசிரமத்தின் பொறுப்பாளன்.”
=======================================================================
ஆதார நூல்: அம்பிகா சிவம் அவர்களின் ‘ஞானம் தரும் ஜென் கதைகள்’