ஞாயிறு, 3 மே, 2020

“பூமி சூரியனிலிருந்து தோன்றியதல்ல” -விஞ்ஞானி ஏ.ஐ.ஓபாரின்

‘நெருப்புக்கோளமான சூரியனிலிருந்து சிதறிய சிறு பொறிதான் காலப்போக்கில் குளிர்ந்து குளிர்ந்து பூமி உருவானது’ என்பது அண்மைக்காலம் வரையிலான விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

‘உயிரின் தோற்றம்’ குறித்து ஆராய்ந்த உயிரியல் அறிஞர் ஏ.ஐ.ஓபாரின் இதை மறுத்துரைக்கிறார்.

உயிரின் தோற்றம் குறித்து அவர் எழுதிய நூலிலிருந்து[‘உயிரின் தோற்றம்’, ஏ.ஐ.ஓபாரின்; தமிழாக்கம்: நா.வானமாமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.முதல் பதிப்பு: பிப்ரவரி, 2008].....
//வெளிமண்டலத்திலுள்ள நட்சத்திரங்களுக்கும் கோள்களுக்குமிடையே இடைவெளிகள் உள்ளன. அந்த இடைவெளிகள் வெறுமையானவை[சூன்யம்] அல்ல. அங்கே வாயுக்களும் தூசுகளும் நிறைந்து காணப்படுகின்றன.  [சில நேரங்களில், இவை பெரிய மேகங்கள் போல உருவெடுக்கின்றன. பால்வெளி[Milky Way]யில் நட்சத்திரக் கூட்டத்திடையே, இந்த மேகங்கள் கரும் புள்ளிகளாகக் காட்சி தருகின்றன].

மேற்கண்ட, நூல் அல்லது நார் போன்ற வாயுப் பொருள்களும் தூசுகளும் இணைவதன் மூலமே நட்சத்திரங்கள் உருவாகின்றன என்று விஞ்ஞானி  எஃப்.ஜி.வெஸன்காவ் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.

எனவே, தூசுவும் வாயுவும் கொண்ட மேகங்களிலிருந்து நட்சத்திரங்களும் சூரியனும் தோன்றியது போல பூமியும்[பிற கோள்கள் உட்பட] தோன்றியிருக்கக்கூடும்[சூரியனிலிருந்து தெறித்து விழுந்தது அல்ல]//

முக்கியக் குறிப்பு: இது குறித்து இன்னும் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்ல வல்லவர்கள் அவர்தம் தளத்தில் பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.

“நடுநடுவே விஞ்ஞானக் கருத்துகள் புரியாதிருப்பினும் முழுவதையும் படித்து, மையக் கருத்தை அறிந்துகொள்ள வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்” என்கிறார் தமிழாக்கம் செய்த வானமாமலை அவர்கள்.

நான் புரிந்துகொண்டவற்றை எளிமைப்படுத்திப் பதிவாக்கியிருக்கிறேன்.

சனி, 2 மே, 2020

மூடநம்பிக்கைகளின் பிறப்பிடம் கடவுளே!

இந்நாள்வரை, கடவுளைக் கண்களால் பார்த்தோ, உடல் உறுப்புகளால் தீண்டியோ, செவிகளால் கேட்டோ, நாவால் சுவைத்தோ, மூக்கால் முகர்ந்தோ அறிந்தவர் அல்லது உணர்ந்தவர் எவருமிலர்[இந்த உண்மையை மறைத்து, “கடவுளைப் பார்க்க முடியுமா என்று கேட்கிறாய்.  கம்பிக்குள் மின்சாரம் இருப்பதை நீ பார்த்ததில்லை. நம்புகிறாய். கடவுளை நம்பு” என்று சொல்லி நெஞ்சை நிமிர்த்துபவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

ஐம்புலன்களால் அறிந்திராத அல்லது, உணர்ந்திராத எப்பொருள் பற்றியும் சிந்திப்பது சாத்தியமே இல்லை. கடவுளும் இதற்கு விதிவிலக்கல்லர்.

ஆறாவது அறிவின் துணையுடன் ‘அனுமானம்’ செய்வதன் மூலமாகவே கடவுள் என்று ஒருவர் இருப்பதாக ஆன்மிகவாதிகள் சொன்னார்கள்; சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அனுமானம் என்பது ‘உண்மை’யைக் கண்டறிவதற்கான ஒரு ‘வழிமுறை’ மட்டுமே. அதனால் அறியப்படுபவை அனைத்தும் உண்மை ஆகிவிடா. 

[கடவுளை அனுமானம் செய்யும் ஆன்மிகவாதிகள், ‘கடிகாரம் ஒரு படைக்கப்பட்ட பொருள். அது ஒரு மனிதனால் படைக்கப்பட்டது. அது போல், பிரபஞ்சம் ஒரு படைப்பு. இதைப் படைத்தவர் கடவுள்’ என்று சொல்லி மிக எளிதாகக் கடவுள் இருப்பதை உறுதிப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

இவர்களின் அனுமானத்தில் பிழைகள் உள்ளன. கடிகாரத்தைப் படைக்கப்பட்ட பொருள் என்று குறிப்பிட்டதே தவறாகும். பல்வேறு மூலப்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே கடிகாரம் என்பதை அறியவில்லை அவர்கள்[இவர்களின் நோக்கில், படைப்பு என்பது நொடிப்பொழுதில் மனதால் நினைத்தோ அபயக்கரம் உயர்த்தியோ நிகழ்த்தும் செயல்].

அது போல, பிரபஞ்சம் ஒருவரால் படைக்கப்பட்டது என்று சொல்வதும் தவறு. பிரபஞ்சம் இருந்துகொண்டே இருப்பதா, தானாகத் தோன்றியதா, படைக்கப்பட்டதா என்பவை குறித்தான ஆய்வுகள் இன்னும் முற்றுப்பெறவில்லை].

முழு உண்மை அறிவதில் ஈடுப்பாடின்றி, அனுமானங்களின் மூலம் அறியப்பட்ட கடவுள் எனப்படுபவரை இடைவிடாத பரப்புரைகளின் மூலம் மக்களை நம்ப வைத்துவிட்டார்கள் பக்திமான்கள்.

கடவுளை நம்பிய மக்கள், கடவுளைப் போலவே கற்பனை செய்யப்பட்ட ஆன்மா, சொர்க்கம் நரகம், ஆவி, பேய், பூதம் போன்றவற்றையும் நம்பினார்கள்; நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நிகழ்வுக்கான உண்மைக் காரணத்தை ஆராய்ந்து கண்டறிய இயலாதபோதெல்லாம், அது கடவுளால் நிகழ்ந்தது என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள்.

அம்மன் கண்களில் கண்ணீர் வழிவது, அவளின் சீற்றத்தால் அம்மை நோய் வருவது, வேப்ப மரத்தில் பால் வடிவது, வானில் உலாவரும் நட்சத்திரங்களையும் கோள்களையும் கடவுள்களாக்கி வழிபடுவது, உண்டு கழித்து வாழ்ந்து மடியும் மனிதர்களைக் கடவுளின் அவதாரங்கள் ஆக்குவது என்றிப்படி ஏராள நிகழ்வுகளை இதற்கு எடுத்துக்காட்டு ஆக்கலாம்.

கடவுள் நம்பிக்கையை ஒழித்தால் மட்டுமே மேற்கண்ட வகையிலான கணக்குவழக்கற்ற மூடநம்பிக்கைகளை ஒழித்திட முடியும் என்பது உறுதி.
========================================================================