புதன், 15 ஜூலை, 2020

கொரோனாவைக் குணப்படுத்திய மருந்தீசர்!!!










மருந்தீசர் ஆலயம்மருந்தீசர் ஆலயம், திருத்துறைப்பூண்டி.

#“அனைத்து விதமான வியாதிகளையும் தீர்க்க வல்லவர் மருந்தீசர். நோய் உள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து ம்ருத்யுஞ்ச ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் செய்தால் , விரைவில் நலம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. 

சமீபத்தில்கூட, அமெரிக்காவில் வசிக்கும் எங்கள் உறவினர் ஒருவர் கொரோனா பெருந்தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகி அவதிப்பட்டு வந்தார். அவருக்காக இத்தலத்தில் சிறப்பு வழிபாடு - பிரார்த்தனை செய்து, விபூதிப் பிரசாதம் அனுப்பி வைத்தோம். மருந்தீசரின் அருளால் விரைவில் அவர் நோயிலிருந்து மீண்டெழுந்தார். 

தற்போது நலமாக உள்ளார். இந்த ஈசன் நவகிரகங்களுக்கு அருளியவர் என்பதால், பக்தர்கள் தங்களது ஜாதகத்தை எடுத்து வந்து மருந்தீசரிடம் வைத்து அர்ச்சனை செய்து வழிபடுவது விசேஷம். அதனால், சகலவிதமான தோஷங்களும் நீங்கி மறுவாழ்வு பெறுவார்கள். 

ஶ்ரீவரசக்தி விநாயகர்

எதிரிகளால் தொல்லை, மனத்தில் வீண் பயம், பிதுர் சாபம் உள்ளிட்ட காரணங்களால் அவதிப்படுபவர்கள், அமாவாசையன்று நெய்தீபம் ஏற்றி மருந்தீசரை வழிபட்டால், பிரச்னைகள் விரைவில் விலகும்.

அகத்தியருக்குத் திருமணக் காட்சி தந்த தலம் இது என்பதால் திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தலத்து அம்பாளை வழிபட, திருமணத் தடை நீங்கும். தொடர்ச்சியாக 5 வாரம் இத்தலத்து ஈசனை அர்ச்சனை செய்து வழிபட்டால், சகல வியாதிகளில் இருந்தும் நிவர்த்தி அடையலாம்” என்கிறார்கள் கோயில் அர்ச்சகர்கள்.

இது, விகடன் செய்தி. https://www.vikatan.com/spiritual/gods/sri-piravi-marundeeswarar-temple-in-thruthuraipoondi
=====================================================================
கொரோனாவின் தாக்குதல் உலகெங்கும் அதிகரித்துவரும் நிலையில், இம்மாதிரியான தகவல்களைப் பரப்புவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல என்பது என் எண்ணம். கூடுதல் விமர்சனம் எதையும் முன்வைக்க விரும்பவில்லை.


செவ்வாய், 14 ஜூலை, 2020

இனிது இனிது! மரணம் மிக இனியது!!

வேறு எதனையும்விட, மரணத்தை நினைந்து மனிதன் பெரிதும் அஞ்சுகிறானே, உண்மையில் அது அத்தனை துன்பமானதா?

“இல்லை” என்பதே ஆழ்ந்து சிந்தித்தால் கிடைக்கும் பதிலாகும்.

ஒரு வகையில், அந்த அனுபவம் சுகமானது என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது.

உழைத்துக் களைத்து, வயிறார உண்டு முடித்து, அயர்ச்சியுற்ற நிலையில், நல்ல எண்ணங்களுடனும் மன மகிழ்ச்சியுடனும் உறங்கத் தொடங்குகிற அந்தக் கணங்கள் எத்தனை சுகமானவையோ அத்தனை சுகமானதாக அது இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

உடம்பின் அணுக்களில் பெரும்பாலானவை அல்லது கணிசமானவை அழிவுறும் நிலையில் புதிய அணுக்கள் உருவாக அல்லது பழையவை புதுப்பிக்கப்பட, உடம்பு உறக்கத்தில் ஆழ்த்தப்படுகிறது.

‘உறக்கம்’ ஒரு தற்காலிக மரணம்[திருக்குறள் தந்த மேதையின், ‘உறங்குவது போலும் சாக்காடு...’ நினைவு கூர்க] என்பார்கள்.

அணுக்களைப் புதுப்பித்துக்கொள்ளும் அல்லது புதியனவற்றை உருவாக்கும் ஆற்றலை உடம்பு முற்றிலுமாய் இழந்துவிடும் நிலையில் எய்துவதே ‘இயற்கை மரணம்’ எனலாம்.

இயற்கை மரணத்தின்போது எவ்வகையான துன்பத்தையும் நாம் அனுபவிப்பதில்லையா? இல்லையாயின், ‘மரண வேதனை’ என்கிறார்களே, அதெல்லாம் வெறும் கற்பனைதானா?

அல்ல; அதுவும் உண்மைதான். அதற்கெனக் காரணங்கள்  சில உள்ளன.

கொடிய நோய்களின் தாக்குதல், விபத்துகளால் உறுப்புகள் சிதைதல் போன்றவை முக்கிய காரணங்கள். அப்போது உணரும் வேதனையுடன் செத்துப்போனால், அதை மரண வேதனை என்கிறோம். 

எனவே, மரண வேதனை என்று தனியாக எதுவும் இல்லை.

உடம்பை இயக்குகிற முக்கிய உறுப்புகள் வயது ஆக ஆக வலிமை குன்றி வருகின்றன; செயலாற்றும் திறனை இழக்கின்றன. இதன் விளைவாக, மனிதனின் சிந்திக்கும் ஆற்றலும் குறைந்து வருகிறது. பெருமளவில் அந்த ஆற்றல் இழக்கப்படும்போது ஒருவித மயக்கநிலை உருவாகிறது. முழு அளவில் ஆற்றலை இழக்கும்போது மயக்கநிலையைக் கடந்து மரணத்தைத் தழுவுகிறோம். உடல் நோவுக்கோ, மன வேதனைக்கோ இடமில்லை என்றாகிறது.

முழு முதுமை எய்திய நிலையில், அரிதாகச் சிலர், சில நாட்களோ பல நாட்களோ சுய நினைவு இழந்த நிலையில் உயிர் வாழ்ந்து இறந்துபோவது அறியற்பாலது. ஆக.....

மரண வேதனை குறித்த நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளாமல், உடல்நலம் பேணுவதில் முழுக் கவனம் செலுத்தினால், நமக்குச் சுகமானதொரு மரணம் வாய்க்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்துக்கு இடமில்லை.

முக்கிய குறிப்பு:
சுற்றிவளைத்து, மரணம் சுகமானது என்பதை உறுதிப்படுத்த முயன்றுள்ளேன். உண்மையில் இது சுகமானதுதானா என்பது ஏற்கனவே செத்துப்போனவர் எவரேனும் மீண்டும் உயிர் பெற்று வந்து சொன்னால்தான் தெரியும்.  ஹி...ஹி...ஹி!