சனி, 8 ஆகஸ்ட், 2020

காந்தியடிகளின் கடைசிச் சிரிப்பு!

மகாத்மா காந்தியின் இறுதி நாள் ...
அது வழிபாட்டுக்கான நேரம்.

காந்தியடிகள் வழக்கம்போல, ‘ஆபா’, ‘மனு’ ஆகிய பெண்களின் தோள்களில் கைபோட்டவாறு வழிபாடு நடக்கும் இடம் நோக்கி நடக்கலானார்.

மூன்றாம் ஜாமத்தில் அவருக்குப் பச்சை முள்ளங்கிச் சாறு பருகக் கொடுத்திருந்தாள் ஆபா. “விலங்குகள் உண்ணும் உணவை எனக்குக் கொடுத்தாய் இல்லையா?  என்னைத் தவிர வேறு யாரும் இதைச் சீந்த மாட்டார்கள். நான் மட்டுமே இதை விரும்பிக் குடிக்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தார் காந்தியடிகள்.

“பத்து நிமிடம் தாமதம் ஆகிவிட்டது. தங்களின் கடிகாரம், தன்னை நீங்கள் அலட்சியப்படுத்துவதாக நினைத்து வருந்தக்கூடும்” என்றாள் ஆபா.

“என்னுடைய நேரக்காப்பாளர்களாக நீங்கள் இருவரும் இருக்கிறீர்கள். இருந்தாலும் பத்து நிமிடத் தாமதத்துக்காக நான் வருந்துகிறேன்” என்றார் காந்தி.

“நேரக்காப்பாளர்களாகிய எங்களை நீங்கள் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லையே!” என்றாள் ஆபா.

காந்தி சிரித்தார்.

அதுவே அவரின் கடைசிச் சிரிப்பு என்பது அவர்கள் மூவருக்குமே தெரிந்திருக்கவில்லை.

வழிபாடு நடக்கும் மேடான இடத்தை அவர்கள் அடைந்தார்கள்.

கூட்டத்தில் அமைதி நிலவியது.

பெண்களின் தோள்களிலிருந்து காந்தி தம் கைகளை விலக்கிக்கொண்ட அதே மணித்துளிகளில் எவனோ ஒருவன், கூட்டத்தை ஊடுருவிக்கொண்டு அவரை நோக்கி வந்தான்.

தடுக்க முயன்ற மனுவை வேகமாகத் தள்ளிவிட்டு, காந்திக்கு வணக்கம் சொல்வது போல் கைகளைக் குவித்தான்; தலை தாழ்த்தி வணங்கிவிட்டு, தன் துப்பாக்கியிலிருந்த ஏழு தோட்டாக்களையும் காந்தியைக் குறி வைத்துச் செலுத்தினான்.

முதல் இரண்டு குண்டுகளும் அவரின் முதுகைத் துளைத்துக்கொண்டு வெளியேறின. மூன்றாவது அவரின் ஆடை மடிப்பில் சிக்குண்டது.

முதல் குண்டு பாய்ந்ததும், காந்தியின் தூக்கிய ஒரு கால் கீழிறங்கியது. அடுத்த இரண்டு குண்டுகள் சுடப்பட்டபோது காலைக் கீழே ஊன்றினார்; பின்னர் தரையில் சாய்ந்தார். அவருடைய வாயிலிருந்து வெளிப்பட்ட கடைசி வார்த்தைகள்.....

“ராம்.....ராம்.....”
=====================================================================
உதவி: ‘ஓம் சக்தி’ மாத இதழ்[ஜனவரி, 1998]

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

அந்தக் கால விலைமகளிர் கையாண்ட அசத்தல் விளம்பர உத்தி!!!

‘பாலுணர்வைப் பொருத்தவரை, வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் ஆச்சரியமான பழக்கங்களும் சடங்குகளும்   இருந்திருக்கின்றன.

விபச்சாரிகள் எனப்பட்ட விலைமகளிர் ‘பாலுறவுத் தொழிலாளர்கள்’ என்று இப்போது கௌரவமாக அழைக்கப்பட்டாலும், இவர்களுக்குத் தங்கள் தொழில் குறித்து விளம்பரம் செய்துகொள்ளும் உரிமையை எந்த நாடும் இதுவரை கொடுக்கவில்லை.

இப்படிப்பட்டவர்களைத் தேடி, சர்வதேசச் சுற்றுலாப் பயணிகள் வந்து குவியும் தாய்லாந்து போன்ற நாடுகளில்கூட விளம்பரங்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால், பழங்கால ரோமாபுரியில் செக்ஸ் தொழில் செய்யும் பெண்கள் நூதனமான விளம்பர யுக்தியைக் கையாண்டனர். பல நாடுகளிலிருந்து வாணிபம் செய்ய வரும் வணிகர்கள், தொலைதூரப் பகுதிகளிலிருந்து வந்து பணிபுரியும் போர்வீரர்கள் என்று பலரும் பெண்களைத் தேடி அலைவார்கள். சந்தடி மிகுந்த சந்தைகளில் யாரெல்லாம் இந்த வகைப் பெண்கள் என்று அடையாளம் காண்பது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது.

அவர்களின் சிரமத்தைப் போக்குவதற்குக் கீழ்க்காணும் விளம்பர உத்தி விலைமாதரால் பயன்படுத்தப்பட்டது.

இம்மாதர்கள் தங்களுக்கெனத் தனித்துவமான செருப்பு அணிவதன் மூலம் தாங்கள் யார் என்பதை அடையாளப்படுத்தினார்கள். செருப்பின் அடிப்பாகத்தில், ஒற்றை வரியில், குறிப்பிட்ட சில வார்த்தைகளைச் செதுக்கி வைத்தார்கள்.

அவர்கள் சாலைகளில் நடக்கும்போது, ‘என்னைப் பின்தொடர்ந்து வா’ என்னும் அந்த வார்த்தைகள் மண்ணில் பதியும்.

சபல ஆசாமிகளின் கண்களில் இந்த வாசகம் படுமேயானால், பரவசமாகி, விலைமாதர் பதித்துச் சென்ற தடயங்களைப் பின்தொடர்வார்கள். விரும்பும் பெண்ணைத் தேர்வு செய்து தாபம் தணிப்பார்கள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடலுறவுத் தொழில்காரிகள் அதிபுத்திசாலித்தனமாக  இம்மாதிரி விளம்பர உத்தியைக் கையாண்டது பேராச்சரியம்தான்.’ 
===========================================================
நன்றி: டாக்டர் நாராயண ரெட்டி. அவர் எழுதிய, ‘உயிர்’ என்னும் நூலிலிருந்து எடுத்தாண்டது மேற்கண்ட வரலாற்றுச் செய்தி.