புதன், 11 நவம்பர், 2020

பெரியாரின் 'பெருமை'யும் ஹெச்.ராஜாவின் 'சிறுமை'யும்!!!

#காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து முன்னாள் பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, வேல் யாத்திரையைத் தொடங்கினார். இதில் 500க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்துகொண்டனர். அவர்களைப் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

வேல் யாத்திரை தொடங்குவதற்கு முன்பு காஞ்சிபுரம் சங்கரமடம் எதிரே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஹெச். ராஜா.

அப்போது, “சாமி சிதம்பரனார் எழுதிய 'தமிழகத் தலைவர் ஈவேரா'[ஈ.வெ.ரா] என்ற புத்தகத்தில் 'ஈவேரா விபச்சாரிகள்' வீட்டிற்குள் தினசரி புகுந்து வருவார் என எழுதப்பட்டுள்ளது. விபச்சாரிகளின் வீட்டிற்கு ஈவேரா சென்று வருவதற்கு அவரது கூட்டாளிகள் உதவி செய்வார்கள். மேலும், காவிரி ஆற்றங்கரையில் ஈவேரா தனது கூட்டாளிகளோடுடன் சேர்ந்து விலைமாதர்கள் உடன் கும்மாளம் அடிப்பார் என்றும், தன் மனைவி நாகம்மையார் சமைத்த உணவை ஆற்றங்கரைக்குக் கொண்டுவரும்படி சொல்லுவார் என்றும் 'தமிழக தலைவர் ஈவேரா' என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து ஈவேரா பெண் அடிமைத் தனத்திற்குப் போராடினாரா? அல்லது தன் மனைவியை அடிமையாக வைத்திருந்தாரா? என்கின்ற கேள்வி எழுகிறது” எனக் கூறினார்.#

- இது ஊடகச் செய்தி: https://tamil.asianetnews.com/politics/eva-often-goes-to-the-house-of-prostitutes-this-is-how-it-looks-in-the-book-king--qjjgee

                                         *                              *                            *

'தமிழர் தலைவர் ஈ.வெ.ரா.' புத்தகத்தில் இந்தக் கொஞ்சம் வரிகளை மட்டும்தான், அதாவது விபச்சாரிகளிடம் போனதை மட்டும்தான் ஹெச்.ராஜா படித்தாரா?

தன்னைத் திருத்திக்கொண்டு, தன் இறுதி மூச்சுவரை பெரியார் செய்த தியாகமும்  தொண்டும் அவரைப் 'பெரியார்' ஆக்கின. அதைத்தான் சாமி.சிதம்பரனார் புத்தகம் முழுக்க எழுதியிருக்கிறார். அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு இதை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இந்த ராசாதி ராசா!

பொதுக்கூட்டங்களில் பேசும்போது, தாய்மார்களை வெளியேற்றிய பின்னர், தன் இளமைப் பருவத்தில் செய்த சில தவறுகளைப் பெரியாரே சொல்லியிருக்கிறார். இது ஊர் உலகத்துக்கெல்லாம் தெரியும். 

செய்த தவறுகளை ஒளிவு மறைவில்லாமல் சொல்வதற்குப் பெரும் துணிவும் தூய மனமும் வேண்டும். இவை இருந்ததால்தான், காந்தியடிகளால் தம் இளம் வயதில் செய்த பாலியல் தவறுகளை, 'சத்திய சோதனையில் பதிவு செய்ய முடிந்தது. இன்றளவும் அவர் 'மகாத்மா' என்று போற்றப்படுகிறார்.

'எப்படி வாழ வேண்டும் என்று அறிந்துகொள்ளக் காந்தியடிகளின் 'சத்திய சோதனை' படியுங்கள். எப்படியெல்லாம் வாழக் கூடாது என்று தெரிந்துகொள்ள நான் எழுதிய 'வனவாசம்'[சுயசரிதை] படியுங்கள்' என்றார் கவிஞர் கண்ணதாசன். 'குழந்தை மனம் கொண்டவர்' என்று இன்றளவும்  அவர் போற்றப்படுகிறார்.

வாழ்வில் உயர் நிலையை எட்டியவர்களில் பலரின் அந்தரங்க வாழ்க்கையைத் துருவி ஆராய்ந்தால், அவர்கள் பாலியல் விசயத்தில் மிகப் பலவீனமானவர்கள் என்பதைக் கண்டறியலாம்.

இந்தப் பலவீனம் பெரியாருக்கும் இருந்தது. காலப்போக்கில் அதைப் புறக்கணித்து, பெண்ணடிமைத்தனம் ஒழிவதற்காக, அவர் ஆற்றிய பணி ஏராளம். மகளிர் மாநாடு ஒன்றில்தான் அவருக்குப் 'பெரியார்' பட்டம் வழங்கப்பட்டது என்பதே இதற்கான சான்று.  

இவ்வாறான வரலாற்று உண்மைகளை அறியாததால்தானோ என்னவோ இந்த ராசா எனப்படுபவர், 'பெண்ணடிமைத்தனம் ஒழியப் பெரியார் போராடினாரா?' என்று கேள்வி கேட்டுத் தன் அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

'தேசியச் செயலாளர் பதவி பறிபோனது.

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவி பகற்கனவானது.

யார் யாரையோ சிபாரிசு பிடித்து நடுவணரசில் அமைச்சர் பதவி பெறும் முயற்சி பலனளிக்காதது'

என்றிவ்வகையில், முற்றிலுமாய்த் தான் புறக்கணிக்கப்பட்ட நிலையில்.....

பெரியாரின் இளமைப் பருவத்தில் நடந்த அசம்பாவிதத்தைச் சுட்டிக்காட்டி அவரை இழிவுபடுத்தினால், மேலிடம் பாராட்டும்; பதவி கொடுக்கும் என்று ஆசைபட்டதன் விளைவுதான் இந்தச் சிறுமதியாளரின் பெரியார் குறித்த பதிவு எனின், அதில் தவறேதும் இல்லை!

செவ்வாய், 10 நவம்பர், 2020

கமல்ஹாசனின் 'கோட்டை'க் கனவும் 'தத்துப்பித்து' அறிவிப்பும்!!!

தன்னுடைய அடுத்த பிறந்தநாளைக் "கோட்டையில் கொண்டாடுவோம்" என அரசியல்வாதி கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதை ஊடகங்கள் வாயிலாக அறிந்திட நேர்ந்தது [https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-says-next-birthday-will-be-celebrated-in-st-george-fort-402682.html  Monday, November 9, 2020, 18:09 [IST]

அவர், தன்னுடைய டிவிட்டர் செய்தியில்.....

'என் பிறந்த நாளை 'நற்பணி' தினமாகக் கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள உள்ளும் புறமும் சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிகர். எதிர்காலத்தில் மிகச் சிறந்த அரசியல்வாதியாகவும் திகழக்கூடும்.

தன்னுடைய அடுத்த பிறந்த நாளைக் "கோட்டையில் கொண்டாடுவோம்" என்று அறிவித்திருக்கிறார். இதன் வாயிலாக, தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என்பதை அறிய முடிகிறது.

முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது தவறல்ல. வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆக விரும்பும் அவர், தன்னுடைய அடுத்துவரும் பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடவிருப்பதாகச் சொல்லியுள்ளது பெரும் தவறாகும். 

தேர்தலில் வென்றால், கோட்டையில் ஒரு முதலமைச்சராகப் பணியாற்றலாமே தவிர, கமல்ஹாசனாகப் பிறந்தநாள் எல்லாம் கொண்டாட முடியாது; கூடாது.

அரசு விதிமுறையின்படி, அரசு அலுவலகங்களில் அலுவலர்களோ, தனி நபரோ, அரசியல் கட்சியினரோ பிறந்தநாள் கொண்டாடுவது குற்றம் என்பதைக் கமல் அறியவில்லை போலும்!

கீழ்க்காணும் நிகழ்வுகள் அவரின் வாசிப்புக்கு:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைப் பேரூராட்சியின் செயல் அலுவலர் ராஜா.  இவர் நடிகர் விஜய்-இன் தீவிர ரசிகர். ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாளைச் சிறப்பாக அலுவலகத்தில் வைத்துக் கொண்டாடி, மக்களுக்குக் கொரோனா முகக்கவசங்கள் வழங்கத் திட்டமிட்டார்.

அதன்படி, விஜய் பிறந்தநாள் தினத்தன்று, ஊத்தங்கரைப் பேரூராட்சி அலுவலகத்தில் பேணர் கட்டி, கேக் வெட்டி அலப்பறையாகக் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் கொரோனா காலம் என்பதால் நடிகர் விஜய் பெயரைச் சொல்லி, பொது மக்களுக்கு முகக் கவசங்களும் விநியோகிக்கப்பட்டது.

இந்தக் கொண்டாட்டங்களை முன்னெடுத்ததோடு பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, நிகழ்வுகளை வீடியோவாகப் பதிவு செய்து அதை இணையத்தில் பரப்பி உள்ளார். இந்த வீடியோ கிருஷ்ணகிரி மாவட்ட வாட்ஸ் ஆப் குழுக்களில் வைரலாகப் பரவியுள்ளது.

இதையடுத்து, பேரூராட்சிச் செயல் அலுவலர் ராஜாவைப் பணியிட நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. 

இதன் வாயிலாக, அரசு விதிமுறையின்படி, அரசு அலுவலகங்களில் அலுவலர்களோ,  தனி நபரோ, அரசியல் கட்சியினரோ பிறந்தநாள் கொண்டாடுவது குற்றம் என்பது அறியத்தக்கது.

https://tamil.samayam.com/latest-news/state-news/krishnagiri-actor-vijay-birthday-celebration-in-govt-officer-video-went-viral-responsible-suspended/articleshow/76710060.cms

                                        *                 *             *

மத்தியப் பிரதேசம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓர் அரசு அலுவலகத்தில் நேற்று ஒரு ஊழியருக்குப் பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டிக் கொண்டாடினர். தொடர்ந்து அங்குள்ள அரசு ஊழியர்கள் பணி நேரத்தின் போது கதவைப் பூட்டிவிட்டு உள்ளே குத்தாட்டம் போட்டுள்ளனர். 'பத்மாவத்' படத்தின் 'கூமர்' உள்பட பல்வேறு இந்திப் பாடல்களுக்கு அவர்கள் டான்ஸ் ஆடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

இந்தச் செய்தி அறிந்த தேவாஸ் மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததுடன் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். 

https://newstm.in/national/general/mp-employed-civil-servants-during-work-hours-the-video-is/c77058-w2931-cid335537-su6229.htm