சனி, 19 டிசம்பர், 2020

சரணம்...சரணம்! ஜெயலலிதா சாமி சரணம்!!

'மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் புகழ்சேர்க்கும் வகையில் தஞ்சை மாநகர ஜெயலலிதா பேரவைத் துணைத்தலைவரும், தஞ்சை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான சுவாமிநாதன் மேலவீதியில் கோவில் கட்டி உள்ளார்.'

இது 2016ஆம் ஆண்டுச் செய்தி. [https://www.dailythanthi.com/Districts/Chennai/2016/12/14022336/She-built-a-temple-in-Tanjore-Digg-PersonalityShe.vpf]

“புரட்சித்தலைவி அம்மா ஆலயம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோவிலில் ஜெயலலிதாவின் பொன்மொழிகளுள் ஒன்றான “மக்களால் நான்; மக்களுக்காக நான்” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

இந்தக் கோவிலில் 24 மணி நேரமும் ஜெயலலிதா நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, கோவில் கட்டிய அ.தி.மு.க. பிரமுகர் சுவாமிநாதன் கூறுகையில், “ஜெயலலிதா மறைவு என்னை மிகவும் பாதித்தது. நான் 1990ஆம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க.வில் இருந்து வருகிறேன். 19ஆவது வார்டுச் செயலாளர், வட்டப் பிரதிநிதி ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளேன். தற்போது ஜெயலலிதா பேரவைத் துணைத்தலைவராகவும், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி, மாவட்டக் கூட்டுறவு அச்சகம் ஆகியவற்றின் இயக்குனராகவும் உள்ளேன். சாதாரணத் தொண்டனான எனக்கு ஜெயலலிதா பதவி கொடுத்து அழகு பார்த்தார். மேலும், ஜெயலலிதாவைச் சந்தித்தபோது, மக்களுக்குத்  தொடர்ந்து  நல்லது செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். அந்த எண்ணம் தான் தற்போது அவருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது" என்றார்.

இவர் அம்மையாருக்குக் கோயில் கட்டி, உயிர்களைப் படைத்துக் காத்துப் பராமரிக்கிற சக்தி வாய்ந்த தெய்வங்களின் வரிசையில் அவரைச் சேர்த்தது 2016ஆம் ஆண்டில்.

நடப்பில் உள்ளது 2020ஆம் ஆண்டு.

இப்போது, திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் அவருக்குக் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது. 

இப்பணியை மேற்பார்வையிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம், "அதிமுகவின் ஒன்றரைக் கோடித் தொண்டர்கள், ஜெயலலிதாவை  அவர்கள் குடும்பத்துக் குல தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள். இந்தக் கோயிலில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோாின் முழு உருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும். அதுமட்டுமல்லாது, இந்தக் கோயிலில் அனைவரும் வழிபடும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் திருப்பணிகள் விரைவில் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது" என்று கூறியிருக்கிறார். https://www.hindutamil.in/news/tamilnadu/612619-temple-for-jayalalithaa.html

சுவாமிநாதன் ஜெயலலிதா சாமிக்குக் கோயில் கட்டியது தஞ்சையில். இப்போது அமைச்சர் உதயகுமார் மேற்பார்வையில் அதே சாமிக்கு மதுரை திருமங்கலத்தில் கோயில் கட்டப்படுகிறது.

அமைச்சர் அவர்களே,

"இருக்கிற சாமிகள் போதாதா? இந்த ஜெயலலிதா சாமி வேறயா?" என்று நாத்திகர்கள் நக்கல் செய்யக்கூடும். அதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்.

எத்தனை எத்தனையோ சாமிகள் இருந்தும், இத்தனைக் காலமும் நம் மக்கள் பட்ட/படும் துன்பங்கள் தீர்ந்தபாடில்லை. அம்மா சாமியாகிவிட்டதால். அத்தனைத் துன்பங்களையும் அவர் தீர்த்து வைப்பார். மக்கள் எல்லா நலமும் பெற்றுச் சுகபோகமாக வாழ்வார்கள். ஆகையினால்.....

தஞ்சையிலும் திருமங்கலத்திலும் மட்டும் கோயில் இருப்பது போதாது. மாவட்டந்தோறும், முடிந்தால் தமிழ் நாட்டின் ஒவ்வொரு வட்டத்திலும் ஜெயலலிதா சாமிக்குக் கோயில் எழுப்புங்கள். உங்களுக்குக் கோடிப் புண்ணியம் கிட்டும்!

சாமியே சரணம்! ஜெயலலிதா சாமி சரணம்!!

வெள்ளி, 18 டிசம்பர், 2020

'யோகாவும் உடலுறவும்'...ஜக்கி வாசுதேவ்!

ஜக்கி வாசுதேவிடம் 'வலைத்தமிழ்'த் தளம் தொடுத்த வினாவும் அதற்கான அவரின் பதிலும்: அடைப்பு[  ]களுக்குள் நம் விமர்சனம்.

வலைத்தமிழ்:

'யோகா பயில்கிறவர்களுக்குப் பாலியல் உணர்வுகள் அறவே கூடாது என்று வற்புறுத்தப்படுகிறதே ஏன்?'

கவனியுங்கள், பாலியல் உணர்வு அறவே கூடாதா என்பது கேள்வி.

ஜக்கி:

உடலியல் சார்ந்த ஒன்றை நீங்கள் புனிதம் என்று போதிக்கவும் வேண்டாம்; ஆபாசம் என்று அவமதிக்கவும் வேண்டாம். அதன் வழியாகவே நீங்கள் வாழ்கிறீர்கள். அதற்குத் தேவையில்லாத அலங்காரங்களையோ, அசிங்கங்களையோ நீங்கள் புகட்டாதிருந்தால் அது அதற்கேயுரிய அழகோடு திகழும்[அழகோடு திகழும், சரி. அதனால், யோகாவுக்கு அது தடையில்லை என்கிறாரா? இல்லை, தடை விதிக்கிறாரா? தெளிவான பதில் இல்லை]

இரு பாலினங்களுக்கும் இடையிலான உடல் தேவை என்பது இனப்பெருக்கத்தைப் பொருத்தவரை சரிதான். ஆனால், அதைக் கடந்து உங்கள் தேடல் இருக்குமேயானால்[உடலுறவு மூலம் இன்பம் கிடைக்கிறது. அதற்கு மேல் யாரும் எதையும் தேடுவதில்லையே. கேள்விக்குத் தொடர்பில்லாத கருத்து]  அது போதாது.

உங்கள் சமூகத்திலேயே சிலர் அறிவு ரீதியாக இயங்கி, அந்த அறிவுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். அத்தகைய மனிதர்களுக்கு பாலுறவின் தேவை குறைந்துவிடும்['பாலியல் தேவையைக் குறைப்பது எப்படி?' என்பதல்ல கேள்வி]. உடல் ரீதியாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கு அந்தத் தேவைகள் அதிகரிக்கும். நீங்கள் உங்களை எதனுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களோ அதைச் சார்ந்துதான் அதிகம் செயல்படுவீர்கள்.

மிக அடிப்படையானதும், எளிமையானதுமான ஒன்றைச் சரியென்றும் தவறென்றும் இனம் பிரிக்கிறீர்கள். பாலுறவைத் தவறென்று சொல்வதற்கு ஒரு தத்துவம்[இதனால் பலவகையிலும் தொல்லைகள் நேர்வதால், பல நேரங்களில் இதைத் தவிர்க்கத் தோன்றுகிறது. மற்றபடி, இதில் ஏது தத்துவம்?]  வேண்டும். அதைத் தொடரவும் வேண்டும். இந்தச் சிக்கல்கள் எல்லாம் அவசியமில்லை. அதன் எளிமையான தன்மைகளை நீங்கள் பார்ப்பீர்களானால், அது உங்கள் வாழ்வில் ஒரு சிறிய அம்சம். அதை நீங்கள் பெரிதுபடுத்தினீர்களானால், அதுவே உங்கள் வாழ்வின் முக்கிய அம்சம் ஆகிறது[இவை பற்றி மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. கேள்விக்கான பதில் மட்டுமே தேவை] .

யோகா என்றால் 'ஒன்றாதல்'[உடல், மனம், எண்ணம் ஆகிய மூன்றுமா? வேறு எதனுடனுமா?] என்று பொருள். காதல் என்றாலும் அதுதான் பொருள். பாலுறவு என்றாலும் அதுதான் பொருள்.

உங்கள் உடல், மனம், எண்ணம் ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து நீங்கள் தேடும்போது[எதை?] அதனை யோகா என்கிறோம். இந்த ஒருமையை[அதென்ன ஒருமை? யோகாவா, அல்லது, எதையோ தேடும்போதுன்னாரே அதுவா?] நீங்கள் உடலளவில் தேடும்போது நீங்கள் என்ன செய்தாலும் அது இரண்டாகத்தான் தெரியும். பாலுறவு என்கிற பெயரில் மக்கள் செய்யும் அத்தனை விசித்திரங்களுமே[?] ஏதாவது ஒரு விதத்தில் ஒன்றுபட்டுவிட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் செய்யப்படுகிறது. ஆனால், அது நிகழவே நிகழாது. சில விநாடிகளுக்குப் போலியானதோர் ஒருமை நிகழும். பிறகு இருவரும் பிரிந்துவிடுவார்கள்.

வினா எழுப்பிய வலைத்தளக்காரர்கள் என்ன நினைத்தார்களோ, வாசிக்கும் ஜக்கி பக்தர்கள் மெய் சிலிர்ப்பார்கள்!

ஹ...ஹ...ஹ!!!

=============================================================== 

https://www.valaitamil.com/udal-uravu-kuriththa-ungal-paarvai_12223.html