புதன், 6 ஜனவரி, 2021

சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கும் ராமாயணச் 'சீதை' கதைகள்!!!

பலவகைப்பட்ட ராமாயணங்களில் பௌத்த ராமாயணமும் ஒன்று. 

அதில், தசரத ராஜனுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும், அவர்களில் மூத்தவளுக்கு ராமன் லக்ஷ்மணன் என்பவர்களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த மனைவிக்குப் பரதன் என்கின்ற ஓர் ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது.  பரதனுக்குப் பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்த தசரதன் வாக்குத் தவறி ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான்.

ஆனால், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு ராமன், லக்ஷ்மணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளைக் காட்டுக்கு அனுப்பினான். பரதன் அவர்களைக் கொன்றுவிடுவான் என்ற அச்சத்தால் அவ்வாறு செய்தானாம்..

ஆயினும், பரதனோ ராமனைத் தேடிக் காட்டுக்குப் போய் அவனையே பட்டத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தான் நாட்டுக்குத் திரும்பி வர முடியுமென்றதாகவும், அதுவரை அவனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி பரதன் கேட்டு வாங்கி அழைத்துவந்ததாகவும், பன்னிரண்டு வருஷமான பின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர்மக்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவளது தமையனாகிய ராமனுக்குத் திருமணம் செய்வித்துப் பட்டங் கட்டினதாகவும் சொல்கிறது பௌத்த ராமாயணம்.

அந்தக்காலத்தில் அண்ணனும் தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும், எகிப்து தேச ராஜதர்மமே சகோதரியை மணப்பது தான் என்றும் இதை அறிந்துதான் ரிக்வேதம் 10ஆவது மண்டலத்தில் 10, 12 சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப் பட்டிருக்கிறதென்றும், அதற்கு முன் அவ்வழக்கமிருந்து வந்ததற்கும் மேலும் ஆதாரமாக, சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் சி.ஆர்.சீனிவாச அய்யங்கார் என்பவர் தாம் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

தோழர் சி.ஆர். சீனிவாசய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின் பகுதிக் குறிப்பு 431ஆம் பக்கத்தில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

சீதை தசரதனுடைய மகள். அவளைத் தசரதன் ஜனகனுக்குத் தானம் கொடுத்தார். சீதையின் பாதம் பூமியில் பட்டால் பூமி இழுத்துக்கொள்ளும் என்பதால், பூமியில் அவளின் பாதம் பட்டுவிடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான்.

தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாளாம். அப்போதே பூமிக்குள் மறைந்தும் போய்விட்டாள்.

பிறகு கொஞ்ச காலம் கழித்து, ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்பட்டாள். 

ஆனால் ஜனகனுக்கு அவள், தான் முன் வளர்த்து வந்த சீதை என்பது தெரியாமல் போனதால், அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்துவிட்டானாம்.

இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும், ஸ்கண்டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் ஐயங்கார் குறிப்பிட்டிருக்கிறார்.

அன்றியும் இதே தோழர் சீனிவாசய்யங்கார், “எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவனது மனைவியைத் தூக்கிக்கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு” என்று ராவணனுக்கும் ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்திருந்ததாராம். அந்தச் சாபத்தின் பலனாய் ராவணனானவன் ராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்துகொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக்கொண்டு போனதாகவும், அதனாலேயே ராவணன் ராமனால் கொல்லப்பட்டதாகவும் பார்க்கவ புராணம் சொல்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார் ஐயங்கார்.

மேலும், சீதை ராவணன் மகள் என்றும், அவள் பிறந்த காலதோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னாராம். அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டுபோய் எறிந்து விட்டான். அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக்கொண்டு வரப்பட்டதாகவும், அதை ஜனகன் கண்டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததான் என்பதாகவும் ஒரு கதை உண்டு என்கிறார் அவர்.

கதைகள் முழுக்க முழுக்கக் கற்பனையாகவே இருப்பினும், மிகுந்த சுவை பயப்பவை என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை!

===============================================================

'பகுத்தறிவு', கட்டுரை[மே 1936]

செவ்வாய், 5 ஜனவரி, 2021

குடிமகன்களுக்கேயான ஒரு சிறப்புக் குறுங்கதை!

“அப்பா, என்னோட வகுப்பாசிரியர் இன்னிக்கி உன்னைக் கையோட கூட்டிட்டு வரச் சொன்னார்” என்றான் பரணி, தன் தந்தை மாணிக்கத்திடம்.
“ எதுக்குடா?”

“தெரியல.”

“வேறெதுக்கு, ‘தினமும் கிழிஞ்ச சட்டை போட்டுட்டு வர்றான். புதுத் துணி எடுத்துக் குடு’ன்னு சொல்வாரு. மாசக் கடைசியில் முதலாளி சம்பளம் தருவாரு. புதுசு எடுத்துடலாம். நான் சொன்னதா உன் வாத்தியார்கிட்டே சொல்லிடு.”

முண்டாசுக் கட்டுடன், வழக்கமாக மூட்டை சுமக்கும் அரிசி மண்டிக்குக் கிளம்பினான் மாணிக்கம்.

அன்று மாலையில், சரக்கடித்துவிட்டு வீடு திரும்பிய மாணிக்கத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பரணியின் வகுப்பாசிரியர் மதிவாணன் அவன் வருகைக்காகக் காத்திருந்தார்.

மடித்துக் கட்டியிருந்த கைலியை அவசரமாக நெகிழவிட்ட மாணிக்கம், “ஐயா, மண்டியில் நிறைய வேலை இருந்துச்சி. அதான் வர முடியல. இந்த மாசச் சம்பளத்தில் பரணிக்குப் புதுத் துணிமணி எடுத்துடுறேன்” என்றான் பவ்வியமாக.

“அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் பையன் போடுற டிரஸ்ஸைப் பத்தி யாருக்கும் அக்கறை இல்ல. அவன் படிப்பைப் பத்திப் பேசத்தான் உங்களை வரச் சொன்னேன்......

.....உங்க மகன் ரொம்பப் புத்திசாலி. ரொம்ப நல்லா படிக்கிறான். மாதத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் வாங்குகிறவன். ஆனா, அது எப்பவாவதுதான். பெரும்பாலும் குறைச்ச மதிப்பெண்தான் வாங்குறான். ஏன் இப்படின்னு விசாரிச்சேன். 

‘அப்பா குடிச்சிட்டு வர்றதால தினசரி அம்மாவோட சண்டை போடுவார். படிக்கவே முடியாது. நல்ல புத்தி வந்து குடிக்காம கொஞ்ச நாள் இருப்பார். அப்போ நல்லா படிச்சி நிறைய மார்க் எடுப்பேன். அவர் மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சதும் படிக்க முடியாம போயிடும்’னு சொன்னான்.

ஏய்யா, நீங்க குடிச்சி வீணாப் போறதும் இல்லாம பையனோட எதிர்காலத்தையும் பாழடிக்கிறீங்களே. இது உங்களுக்கே நல்லா இருக்கா? பையனுக்கு வாத்தியார் என்கிறதைத் தவிர உங்களோட எந்த ஒட்டுறவும் இல்லாத எனக்கு இவன் மேல இருக்கிற அக்கறைகூட இவனைப் பெத்த உங்களுக்கு இல்லையே” என்றார் மதிவாணன்.

“இனி கடவுள் சத்தியமா குடிக்க மாட்டேன். என்னை நம்புங்கய்யா.” -கண்ணீர் மல்கச் சொன்னான் மாணிக்கம்.