வியாழன், 27 மே, 2021

விலங்கினங்களின் 'உடலுறவு'க்கான தேர்வு முறை!

'தன்னைப் பணிய வைத்திடும் ஆளுமை உள்ள ஆணைத்தான் பெண் விலங்கு விரும்புகிறது' என்று அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நடைமுறை உண்மையைக் கண்டறியப் போதுமான சோதனைகளையும் அவர்கள் மேற்கொண்டார்கள். அவற்றில் ஒன்று.....

ஆண் எலிகள் பல ஒரு சோதனைக் கூடத்திலிருந்த கூண்டுக்குள் விடப்பட்டன. ஒரு மணி நேர அளவில், அவற்றிடையே பலவிதமான மிரட்டல்கள், மோதல்கள், துரத்தல்கள் எல்லாம் நிகழ்ந்த பிறகு தலைவர், துணைத் தலைவர், தொண்டர் என்னும் வரிசைப்படி தங்களுக்குள்ளேயே அவை ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்கிக்கொண்டன.

எலிகளுக்கிடையே தொடர்ந்து நடந்த  போராட்டங்களை மிக மிக மிக உன்னிப்பாகக் கவனித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள், அவற்றுக்கான 'உடல் வலிமை'யை அளவுகோலாகக் கொண்டு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்றிப்படித் தர நிர்ணயம் செய்து குறித்துக்கொண்டார்கள்.

பின்னர், அத்தனை ஆண் எலிகளும் மெல்லிய சிறு சிறு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டன, நாய்களை நாம்  கட்டிவைப்பது போல.

ஆண்கள் தாமாகப் பெண் எலிகளைத் தேடிச் சென்று அவற்றுடன் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதே இதன் நோக்கமாகும். அடுத்தடுத்த நாட்களில், ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சோதனைகளில் நிகழ்ந்தவை அவர்களைப் பேராச்சரியத்தில் மூழ்கடித்தன.

சோதனை விவரம்:

ஆண் எலிகள் கட்டி வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய கூண்டுக்குள் ஒரு பெண் எலியை அனுமதித்தார்கள். நிமிட நேரத்தில் அந்தப் பெண் எலி உடலுறவுக்காக ஓர் ஆண் எலியைத் தேர்வு செய்தது. விஞ்ஞானிகள் வரிசைப்படுத்தியிருந்ததில் நம்பர் ஒன் எலி அது!

இரண்டாவதாக அனுப்பப்பட்ட பெண் எலி தேர்வு செய்தது போராட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற ஆண் எலி. அதாவது, நம்பர் 2.

அடுத்தடுத்துக் கூண்டுக்குள் அனுப்பப்பட்ட பெண் எலிகளின் தேர்வுகள், விஞ்ஞானிகளின் தரவரிசைப் பட்டியலின்படியே நிகழ்ந்தன.

ஜாதகப் பரிமாற்றங்கள், விசாரணைகள், பரிந்துரைகள் என்று எதுவும் இல்லாமல் பெண் எலிகள் தத்தமக்கான ஆண்களைத் தேர்வு செய்ததற்கான அடிப்படைத் தகுதியை, இம்மாதிரியான மிக நுண்ணிய ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தார்கள் ஆய்வறிஞர்கள். 

எலிகள்[ஆண்] பலவாயினும், ஒவ்வொன்றின் உடம்பிலிருந்தும் வெளிப்பட்டடவை வேறு வேறான  வாசனைகளே என்கிறார்கள் அவர்கள். 

முதலில் அனுப்பப்பட்ட பெண் எலி, தனக்கான நம்பர் 1 ஆண்மையாளனைத் தேர்ந்தெடுத்தது அதன் உடம்பிலிருந்து வெளிப்பட்ட மிகையான வாசனையை நுகர்ந்துதான். பிற தேர்வுகளும், மாறுபட்ட வேறு வேறு வாசனைகளின் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளனவாம்.

இது போன்ற தொடர் ஆய்வுகளின் மூலம், பிற விலங்கினங்களும் தத்தமக்கான இணையைத் தேர்ந்தெடுப்பது வாசனை நுகர்வின் மூலம்தான் என்கிறார்கள் ஆய்வு நிகழ்த்திய அறிஞர்கள்.

                                                *                   *                 *             

ஆதாரம்: https://groups.google.com/g/panbudan/c/PbZ3AFan2Mc

கட்டுரையாளர் 'வில்லன்' அவர்களுக்கு என் நன்றி.

கூடுதல் தெளிவு கருதி, கட்டுரை நடையைச் சற்றே மாற்றியமைத்துள்ளேன் என்பது அறியத்தக்கது. 

புதன், 26 மே, 2021

'அனைத்துக்கும் ஆசைப்படு'ம் ஜக்கி வாசுதேவ்!!!

சர்ச்சைகளுக்கும், ஆடம்பர வாழ்விற்கும் பெயர்போனவர் ஜக்கி வாசுதேவ். தன்னைத்தானே சத்குரு என அறிவித்துக்கொண்ட இவர் பல விலையுயர்ந்த வாகனங்களுக்குச் சொந்தக்காரராக இருக்கின்றார். அந்த வகையில், ஆடம்பர ரகக் கார், பைக் என இவரிடத்தில் ஏராளமான சொகுசு மற்றும் பிரீமியம் தர வாகனங்கள் இருக்கின்றன[ஹெலிக்காப்டரும் உள்ளது].

இவர், தன் காரிலேயே தனக்கான மினி வீடு ஒன்றைக் கட்டியிருக்கின்றார். 

இவர், தனது 'ஃபோர்டு எஃப்150 பிக்-அப் ட்ரக்கினை'த் தனக்குப் பிடித்தவாறு மாடிஃபை செய்திருப்பதாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

இந்தியாவைப் பொருத்தவரை வாகன மாடிஃபிகேஷன் என்பது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும். ஆனால், ஜக்கி வாசுதேவ் இந்தச் செயலை இந்தியாவில் வைத்துச் செய்யவில்லை.

இந்தியாவைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில், அண்மையில் அமெரிக்கா சென்ற அவர், தனது பயணங்களுக்காகப் பிரத்யேகமாக ஃபோர்டு எஃப்150 பிக்-அப் ட்ரக்கினை அமெரிக்காவிலேயே மாடிஃபை செய்திருக்கின்றார்.

இது குறித்த வீடியோவை 'ஈஷா சத்குரு' எனும் அவரது யுட்யூப் சேனலிலேயே அவர் வெளியிட்டுள்ளார். 

ஜக்கி வாசுதேவ் ஃபோர்டு எஃப்150 பிக்-அப் ட்ரக் மிகக் கடுமையாக மாடிஃபிகேஷனுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அதன் டயர், நிறம், மின் விளக்குகள் மற்றும் உடற்பாகங்கள் என முக்கியக் கூறுகள் பல மாடிஃபிகேஷனுக்காக நீக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், நீக்கப்பட்டவைகளுக்குப் புதிதாக ஆஃப்டர் மார்க்கெட் பாகங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தச் செயலால் அக்கார் அதன் உண்மைத் தோற்றத்தை இழந்து, புதிய தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இந்தக் காரணத்திற்காகத்தான் இந்தியாவில் வாகன மாடிஃபிகேஷன் செயலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம், மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் சட்டத்திற்குப் புறம்பான அல்லது விதிமீறல்களில் ஈடுபடும்போது அதனை இனம் கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. .

மாற்றியமைக்கப்பட்டிருக்கும் ஃபோர்டு எஃப் 150 பிக்-அப் ட்ரக் உலக நாடுகள் சிலவற்றிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.