திங்கள், 2 ஆகஸ்ட், 2021

மகா 'கும்பமேளா'வும் மகா மகா மூடர்களும்!!!

#உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி நகரில் இடம்பெற்றுள்ள கங்கை ஆற்றில் 'சவான்'[சாவன்?] மாதத்தின்[ஜூலை16-ஆகஸ்டு16] 2ஆவது திங்கட்கிழமையை முன்னிட்டு, பக்தர்கள் திரளாகக் கூடி, புனித நீராடினர்.  இதில், கொரோனாக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையான சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் காற்றில் பறக்க விடப்பட்டது.

இதேபோன்று, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்ய ஒன்றாகக் குவிந்தனர்.  அவர்கள் முகக் கவசமில்லாமல் தரிசனம் செய்ய வரிசையில் நின்றிருந்தனர்.

கடந்த பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் கொரோனாப் பரவல் குறைந்திருந்த சூழலில், சிவராத்திரி மற்றும் கும்பமேளா ஆகிய நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கானோர் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது உள்ளிட்ட விசயங்களை மறந்து குவிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சம் எனப் பதிவானது.  அதன்பின்பு அந்த மாத இறுதிக்குள், எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து நாள்தோறும் 4 லட்சம் என்ற அளவில் உச்சம் தொட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

அண்மைக் காலங்களாகக் கொரோனாவின் 2ஆவது அலை தீவிரம் குறைந்துள்ளது என்றபோதிலும், மக்கள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் 3ஆவது அலை தோன்றக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மறந்து இன்று காலையிலேயே கங்கையில் புனித நீராடவும், சாமி தரிசனமும் செய்யவும் பக்தர்கள் குவிந்துள்ளனர்# 

-இது செய்தி[https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/02072928/Devotees-flock-to-the-holy-river-Ganga-in-Varanasi.vpf  [பதிவு: ஆகஸ்ட் 02,  2021 07:29 AM]

***"கொரோனாவையும் இது போன்ற கொடூரக் கொள்ளை நோய்களையும் அழிப்பதற்கான ஆற்றலோ, இரக்கக் குணமோ  இல்லாத கடவுள்களா நமக்குள்ள துன்பங்களை அகற்றப்போகிறார்கள்?" என்று கேட்டுச் சிந்திக்கிற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத முட்டாள்கள் இவர்கள். 

பல்லாயிரவர் சாவுக்குக் காரணமான கொரோனாவின் எண்ணிக்கையைப் பன்மடங்காகப் பெருக்கும் இந்த இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்[தண்டிப்பதற்கான வழிமுறைகள் ஏதுமில்லை என்பது மிகப் பெரிய சோகம்!(பக்தர்களுக்கு அத்தனை பெரிய மரியாதை இந்த நாட்டில்!!)].

தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக,  மூடநம்பிக்கைகளைப் பாதுகாத்தும் வளர்த்தும் இவர்களின் மூளைகளில் நாளும் திணித்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும், இவற்றை வைத்துப் பிழைப்பு நடத்தும் அவதாரங்களும்கூட, கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

இவர்களையெல்லாம் தண்டித்தால் மட்டுமே நாட்டில் மூடநம்பிக்கைகள் குறையும்; மேற்கண்டவை போன்ற செயல்பாடுகளும் மட்டுப்படும்.

இன்றைய அரசியல்வாதிகள் பலரின் அரசியல் ஈடுபாடு தடுக்கப்படுவதோடு, மக்கள் நலனில் அக்கறையுள்ள  நல்ல சிந்தனையாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றுதல் அவசியத் தேவை.

அத்தகையவர்களைக் கண்டறிந்து ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுப்பதற்கு மக்கள் கற்றுக்கொள்ளுதல் மிக மிக மிக முக்கியம்.

ஆனால், இந்தப் புண்ணிய பூமியில் உள்ள மக்களில் பெரும்பான்மையோர் மூடர்களே என்பதால் அது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்பது கொஞ்சம் யோசித்தாலே புரியும்!

'நாட்டில் நல்லதே நடந்திடல் வேண்டும்' என்று எதிர்பார்ப்பவர்கள், 'விதி வலிது' என்று தமக்குத்தாமே ஆற்றுப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. 

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

"ஓநாய்கள் ஜாக்கிறதை!"... கட்டிளம் கன்னியருக்கான விழிப்புணர்வுக் கதை!!

"சுருதி, உனக்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கேன். இன்னும் புறப்படலையா?" என்று அலைபேசியில் பதறினான் திலீபன்.

"அப்பாவும் அம்மாவும் டூர் போய்ட்டாங்க. புறப்பட்டுப் போய் அரை மணி நேரம் ஆச்சு. நானும் கிளம்பிட்டேன். நமக்கான டிரெயின் புறப்படுறதுக்கு ஒரு மணி நேரம் இருக்கில்லையா? வந்துடுவேன்" என்றாள் சுருதி. 

அலைபேசியை அணைத்துப் பத்திரப்படுத்திக்கொண்டு, புறப்படத் தயாரானபோது, பெற்றோர்களுக்கு அன்று அதிகாலையிலேயே  எழுதிய கடிதத்தைப் பீரோவின் உள்ளறையில் வைத்தது நினைவுக்கு வந்தது. அதை இன்னொரு முறை வாசித்துப் பார்க்க நினத்து, பீரோவைத்  திறந்தாள். 

அவள் எழுதி கடிதம் அங்கே இல்லை. அதற்குப் பதிலாக அப்பா ஒரு கடிதம் வைத்திருந்தார்.

அதிர்ச்சியுடன் அதைப் பிரித்து வாசித்தாள் சுருதி. 

'அன்பு மகளுக்கு,

தீர விசாரித்த வகையில் திலீபன் நல்லவன் அல்ல என்பது தெரிந்ததால், அவனுடன் பழக வேண்டாம் என்று வற்புறுத்திச் சொன்னோம். எங்களின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் நீ அவனைக் காதலித்ததோடு, அவனுடன் ஓடிப்போகவும் திட்டமிட்டிருப்பதை இன்று நீ எங்களுக்கு எழுதி வைத்த கடிதத்தின் மூலம் அறிந்தோம்.

உனக்கு நாங்கள் செய்துபோட்ட ஆறு பவுன் சங்கிலியோடு செல்ல இருக்கிறாய் என்பதையும் அந்தக் கடிதம் மூலமாகவே தெரிந்துகொண்டோம். 

சங்கிலியை விற்றால் கிடைக்கும் பணம் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே செலவாகிவிடும்.  அப்புறம் என்ன, அந்த அயோக்கியன், கையில் பைசா இல்லாமல் உன்னைத் தவிக்கவிட்டு ஓட்டம் பிடிப்பது நிச்சயம்.

ஓடிப்போகும் அவனுக்காகக் காத்திருப்பதையோ, தேடி அலைவதையோ மறந்தும் செய்துவிடாதே. காரணம்.....

அங்கிங்கெனாதபடி எங்கெல்லாமோ இரை தேடும் மனித ஓநாய்கள், தக்கப் பாதுகாப்பின்றித் தனித்துவரும் கன்னிப் பெண்களுக்காகக் காத்திருக்கின்றன. அந்த ஓநாய் மனிதர்களிடம் நீ சிக்கினால் சாறு பிழிந்த வெறும் சக்கையாக ஆவாய் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்.

எதிர்வரும் இக்கட்டான சூழ்நிலையில், நீ இரண்டு முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. ஒன்று, நம் சொந்த ஊர் திரும்புவது. அப்படியொரு முடிவை நீ மேற்கொண்டால், பசியாறுவதற்கும், பயணச்சீட்டு எடுப்பதற்கும் சில ஆயிரம் ரூபாய்களை இந்தக் கடிதத்துடன் வைத்துள்ளோம். அவன் பார்வையில் படாமல் இதைப் பாதுகாப்பது உன் பொறுப்பு.

ஊர் திரும்புவதால் எதிர்கொள்ள வேண்டிய அவமானத்தைத் தாங்கும் மன உறுதி இல்லையென்றால் தற்கொலை புரியும் முடிவுக்குத் தள்ளப்படுவாய். ஆனால், அதை நிறைவேற்ற அதிகபட்சத் தைரியம் வேண்டும். 

நீ தைரியசாலிதான். இருப்பினும், தூக்கில் தொங்குவதற்குப் பதிலாகத் தூக்க மாத்திரைகள் விழுங்கி, ஆழ்ந்த மயக்கத்திலேயே உயிரைப் போக்கிக் கொள்ளலாம். அது வலி தெரியாத சாவு.

பின்னதையே நீ தேர்வு செய்திட அதிக வாய்ப்புள்ளது என்று நினைத்து, நிறையத் தூக்க மாத்திரைகளையும் இத்துடன் வைத்துள்ளோம். புறப்படும்போது மறவாமல் எடுத்துச் செல்லவும்.

தற்கொலை கோழைத்தனம் என்று நீ நினைத்தால், நம் வீடு திரும்ப வாய்ப்புள்ளது. நீ திரும்பி வரவேண்டும் என்பதே எங்களின் ஆசை... அல்ல, பேராசை.

அவனின் உண்மைச் சொரூபம் வெளியான பிறகேனும், எங்கள் ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவாய் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையுடன் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறோம். -இப்படிக்கு, பாசமிகு உன் தாயும் தந்தையும்'.

கலங்கிய கண்களுடன், அலைபேசியை உயிர்ப்பித்த சுருதி, "திலீபன், என்னை மறந்துடு" என்று சொல்லியதோடு, அதே அலைபேசியின் மூலம், "நான் அவனுடன் ஓடிப்போகவில்லை. உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என்று தன்னை ஈன்றெடுத்தவர்களுக்கும் தகவல் சொன்னாள் சுருதி.