செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

மன்மத மரபணுக்கள்!!!

‘தாம் உயிர்வாழ வேண்டும் என்பதற்காக ஜீன்கள் நடத்தும் தொடர் போராட்டங்களின் விளைவுதான் பரிணாம வளர்ச்சி’ என்பது ‘ரிச்சர்ட் டாக்கின்ஸ்’ என்னும் விஞ்ஞானி  முன்வைக்கும் புதிய சித்தாந்தம் ஆகும்.

இவருடைய சித்தாந்தத்தின்படி.....

‘நமக்காக ஜீன்கள்[மரபணுக்கள்] இல்லை; ஜீன்களுக்காகத்தான் நாம்.  ஜீன்கள் சுயநலம் மிக்கவை. அவை தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்கின்றன. தம்மை நிலைநிறுத்திக்கொள்வதற்காக அவை நம்மை வாகனங்களாகப் பயன்படுத்துகின்றன. நாமெல்லாம் ஜீன்களைச் சுமந்து திரியும் வெறும் சுமைதாங்கிகளே!’

நம் நாடிநரம்புகளில் காம இச்சையைத் தூண்டி, ஆணும் பெண்ணுமாய்க் கலவியில் ஈடுபடத் தூண்டுவதே இந்தப் பொல்லாத ஜீன்கள்தானாம்!

நாளும் நம்மை விரகதாபத்துடன் அலையவிட்டுப் புணர்ச்சியில் ஈடுபடுத்தி நம் இனத்தை விருத்தி செய்வதன் மூலம் தம்மை அழியாமல் காத்துக்கொள்கின்றனவாம் அனைத்திற்கும் மூலமான ஜீன்கள் என்னும் இந்த மரபணுக்கள்.

நாம் நம் தாத்தா பாட்டி, தாய் தந்தை, சகோதர சகோதரிகள், ரத்தப் பந்தங்கள் என்று ஒருவர் மீது ஒருவர் பாசத்தைப் பொழிந்து தள்ளுகிறோமே, அந்தப் பாசப்பொழிவுக்கு மூல காரணமே இந்த ஜீன்கள்தானாம்.

ஆக, நாம் அன்பு, பாசம், நேசம், காதல், கத்தரிக்காய், பணம், பதவி என்று எது எதற்கெல்லாமோ போராடி, அல்லலுற்று அரற்றித் திரிவதை ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கும் ‘அந்தக் கள்வன் யார்?’ என்று ஒரு பதிவில்[கலியுகக் கவிஞனும் ஒரு கள்வனும்! http://kadavulinkadavul.blogspot.com/2017/06/blog-post_6.html] கேட்டிருந்தேன். அந்தக் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துவிட்டது. அந்தத் கள்வன்...அல்ல, கள்வர்கள்.....

ஜீன்கள்... ஜீன்களே!

நன்றி: ‘ஜீன் ஆச்சரியம்’, விகடன் பிரசுரம்; முதல் பதிப்பு: மே, 2016.

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

'குமுதம்' இதழுக்கு 'மகா பெரியவா' மீது என்ன கோபம்?!?!

மறைந்த, 'மகா பெரியவா' என்று சொல்லப்படும் 'சந்திர சேகரேந்திர சுவாமியை மையப்படுத்தி, குமுதம் இதழ் தொடர்ந்து கற்பனை நிகழ்வுகளை வெளியிட்டுவருகிறது.

அவரைப் பெருமைப்படுத்துவதாக நினைத்து அது வெளியிடும் கட்டுரைகள், அவரை எந்த அளவுக்குச் சிறுமைப்படுத்துகின்றன என்பதைக் குமுதம் அறியமலிருப்பது ஏன் என்று புரியவில்லை.

25.08.2021 இதழில் வெளியாகியிருக்கும் பெரியவா தொடர்பான கட்டுரையின் தலைப்பு, 'மகா பெரியவா தந்த மட்டைத் தேங்காய்' ஆகும்.

மகப்பேறு இல்லாத ஒரு பெண்ணிடம், "இந்தா இதை மடியில் வாங்கிக்கோ"ன்னு  மட்டை உரிக்காத இரண்டு தேங்காய்களைக் கொடுத்தார் பெரியவா. அந்தப் பெண்ணும் அவ்வாறே செய்தாள்; கருவுற்றாள்[இரண்டு தேங்காய் என்பதால், ஓர் ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தனவாம்].

"இது உண்மை நிகழ்வென்றால், இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு,  பிள்ளைப் பேறு இல்லாத அத்தனைப் பெண்களும் பெரியவாவைத் தரிசித்து[பெரியவா உயிரோடு இருந்தவரை]க் குழந்தை பெற்றிருக்கலாம். மருத்துவச் செலவு மீதியாகியிருக்கும்.

இந்த நிகழ்வுக்கு முன்பே, 'சாத்தனூர்' என்னும் அந்தப் பெண்ணின் ஊருக்குச் சென்று அவர் முகாமிட்டிருந்தபோது, அவர் வருகைபுரிந்த சமயத்தில் மாதவிலக்கு நின்றுபோனதால், தன் வயிற்றில் கரு தங்கியிருப்பதாக அந்தப் பெண் நம்பினாராம். கதாசிரியரின் இந்தக் கற்பனை எத்தனை அபத்தமானது என்பது சிறிது சிந்தித்தாலே புரியும்.

இப்படி நடப்பது சாத்தியம் என்றால்.....

பெரியவா முகாமிட்ட ஊர்களில் எல்லாம் குழந்தை இல்லாத பெண்கள் கருவுறும் அதிசயம் நிகழ்ந்திருக்கும் அல்லவா?

கிஞ்சித்தும் சிந்திக்கத் தெரியாதவர்கள்கூட இந்தக் கேள்வியைக் கேட்பார்களே!

குமுதம், தனிச்சுற்றுக்கு மட்டுமேயான ஓர் இதழ் அல்ல; பொது மக்களுக்கானது. இதில் வெளியாகும் இம்மாதிரியான கதைகள் மக்களின், குறிப்பாக, பெரியவா பக்தர்களின் சிந்திக்கும் அறிவைச் சீரழிக்கக்கூடியவை என்பதால், இந்தக் கதை குறித்த விமர்சனத்தை அடியேன் எழுதிட நேர்ந்தது.

பெரியவாவைப் பெருமைப் படுத்துவதாக நம்பிக்கொண்டு, அவரைச் சிறுமைப்படுத்தும் இம்மாதிரிக் கதைகளை இனிமேல் குமுதம் வெளியிடாது என்று நம்புவோம்.