ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

மு.க.ஸ்டாலினுக்கு நெல்லைக் கண்ணன் சூட்டிய மணிமகுடம்!!!

வ.உ.சி.யின் 150ஆவது பிறந்தநாள் விழா இன்று (5ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வ.உ.சி.க்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

வ.உ.சி.யின் 150ஆவது பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாடுதல் முதலான அந்த அறிவிப்புகளை, அனைத்துத் தமிழ் ஊடகங்களும் குறிப்பிடத்தக்க செய்தியாக அறிவித்துள்ளன.  இந்நிலையில்.....

மேற்கண்ட அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழறிஞர் நெல்லைக் கண்ணன்.

அதன் உள்ளடக்கம் பின்வருமாறு:

#சென்னை காந்தி மண்டபத்தில் அவர்[வ.உ.சி] செக்கு இழுந்த இடத்தில் அவருக்கு மார்பளவுச் சிலை; கோவையில் சிறையில் இருந்த இடத்தில் முழு உருவச் சிலை; தமிழ்நாட்டில் பல இடங்களில் வ.உ.சி.க்கு மரியாதை; ஒவ்வொரு வருடமும்  'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது' என்ற பெயரிலே ஆண்டுதோறும் விருது; விருதுத் தொகையாக ரூ.5 லட்சம் தமிழனுக்குத் தருவது என்று ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

குறையே சொல்ல முடியாத அளவிற்கு ஸ்டாலின் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். இன்றுவரை யாரும் அவரை நோக்கிக் கை நீட்டிக் குறை சொல்ல முடியாத அளவிற்கு ஆட்சி நடத்துகிறவர் அவர். அந்த மிகப்பெரிய மனிதனுக்கு, அந்தச் செக்கிழுத்த செம்மலுக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையைச் செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். 

வயதில் இளையவர் என்றாலும் நான் அவரது பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன். 

இந்தப் பெருமையை இந்த நாட்டிற்காகத் தன்னையும் தன் குடும்பத்தையும் தன் சொத்துச் சுகங்களையும் இழந்து வாடிய ஒரு மிகப்பெரிய மனிதனுக்குத் தந்திருக்கின்ற இந்த முதலமைச்சர் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்#

மூத்த அரசியல்வாதியும், தமிழறிஞருமான நெல்லைக் கண்ணன் அவர்கள் மனம் நெகிழ்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் போற்றிப் புகழ்ந்திருக்கும் அதே வேளையில், 'இதுவே தி.மு.க.வின் கடைசிக் கால ஆட்சி'என்பதாகத் தமிழ்நாடு 'பாஜக' தலைவர் அண்ணாமலை கணித்திருக்கிறார்; அறிவித்திருக்கிறார்.

நெல்லைக் கண்ணன் அவர்கள் முதலமைச்சர் மு.க, ஸ்டாலினை வாழ்த்தியதற்கான காரணங்களைப் பட்டியலிட்டது போல், அண்ணாமலை அவர்களும், தி.மு.க.ஆட்சி[திராவிடக் கட்சி] முடிவுக்கு வருவதற்கான காரணங்களைச் சுட்டிக் காட்டியிருந்தால், தான் தேர்ந்த ஓர் அரசியல்வாதி என்பதை அடையாளப்படுத்தியதாக இருந்திருக்கும்.

ஏனோ செய்யத் தவறியிருக்கிறார் தமிழ்நாடு 'பாஜக' தலைவர்!

====================================================================================

நன்றி: தமிழறிஞர் நெல்லைக் கண்ணன் & நக்கீரன்

https://www.nakkheeran.in/24-by-7-news/politics/v-o-chidambaram-pillai-related-announcements-m-k-stalin-nellai-kannan   -Sunday, Sep 05 2021

சனி, 4 செப்டம்பர், 2021

'புதிய தேசியக் கல்விக் கொள்கை'... எதிரணியில் சித்தராமையா!!


நடுவணரசின் 'புதிய தேசியக் கல்விக் கொள்கை'க்குத் தமிழ்நாடு அரசு மட்டுமே தீவிர எதிர்ப்புத் தெரிவித்தது; இன்றளவும் தெரிவித்துக்கொண்டிருக்கிறது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலான தமிழகத் தலைவர்கள் பலரும் பு.தே.க.கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அனைத்திந்திய அளவில் ஓர் எதிரணியை உருவக்க முயன்றார்கள். 'மதிமுக' தலைவர் 'வைகோ', புதிய கல்விக் கொள்கையினால் விளையும் தீங்குகளை விவரித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஓரணியில் திரளும்படி பிற மாநில முதல்வர்களுக்குக் கடிதமும் எழுதினார். 

பயன் ஏதும் விளையவில்லை.

எந்தவொரு மாநில முதல்வரும் நடுவணரசின் பு.தே.க.கொள்கையை எதிர்த்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில், கர்னாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பு.தே.க.கொள்கையை எதிர்த்துக் குரல் எழுப்பியிருப்பது பெரிதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

அது தொடர்பான செய்தி.....

#கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா, உயர்கல்வித் துறை அமைச்சர் அஸ்வத் நாராயணனுக்குப் புதிய தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாகக் கடிதம்  எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பது:

'கர்நாடகத்தில் புதிய தேசியக் கல்விக் கொள்கையை, நிபுணர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் ஆலோசிக்காமல் திடீரென்று அரசு அமல்படுத்தியிருக்கிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கையில் இருக்கும் சாதகம் மற்றும் பாதகங்கள் குறித்து விரிவாக எந்த ஒரு விவாதமும் நடத்தாமல், இந்தக் கல்வி ஆண்டிலேயே[2020] அதை அரசு அமல்படுத்தியிருப்பது சரியான முடிவு அல்ல.

புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்திய பின்பு, அதுகுறித்து விவாதம் நடைபெறுவது தேவையற்றது. உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் உங்களுக்கு இது பற்றித் தெரியவில்லையா? 

எந்த ஒரு நாட்டிலும் உயர் கல்வித்துறை சிறப்பாக இருந்தால்தான், அந்த நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குச் சரியான முறையில் தீர்வு காண முடியும். 

புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை பற்றி விவாதிக்க வேண்டியது அவசியமாகும். இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கையால் சாதாரண ஏழை, கிராமப்புற மாணவ, மாணவிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, கர்நாடக அரசு அமல்படுத்தி உள்ள இந்தக் கல்விக் கொள்கையை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்#

====================================================================================

நன்றி: https://www.dailythanthi.com/News/Districts/2021/09/04022449/The-new-education-policy-in-Karnataka-needs-to-be.vpf  -செப்டம்பர் 04,  2021 02:24 AM