திங்கள், 6 செப்டம்பர், 2021

'அவர்கள்' திருந்த மாட்டார்கள்!!!

தமிழ்நாட்டில் வாழ்வோரில் மிகப் பெரும்பான்மையோர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள். இங்குப் பிழைப்புத் தேடி வந்த ஏனையோரும்[பிராமணர்கள் உட்பட] தமிழ் அறிந்தவர்களே.

இங்கே பிரபலமாக உள்ள பெரிய பெரிய கோயில்கள் எல்லாமே, தமிழகத்தை ஆட்சி செய்த தமிழ் மன்னர்களால் தமிழ் மக்களின் உழைப்பில் கட்டப்பட்டவையே.

தமிழ் மக்களுக்காக, தமிழ் மக்களின் உழைப்பில் கட்டப்பட்ட கோயில்களில் உள்ள கடவுள்களுக்குத் தமிழில் வழிபாடு நிகழ்த்துவதே இயற்கை நெறியாகும்.

இம்மண்ணை ஆண்ட மன்னர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, 'சமஸ்கிருதம் தேவ பாஷை; வேதம் கடவுளால் அருளப்பட்டது. அதிலுள்ள மந்திரங்களைச் சொல்லி வழிபட்டால்தான் கடவுளின் அருள் கிட்டும்' என்று போதனை செய்து அவர்களை நம்ப வைத்தார்கள் 'பிராமணர்கள்'; வழிபாட்டு நெறிமுறைகளைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.

அறிவியல் யுகம் பிறந்தது.

ஆழ்ந்து சிந்திக்கக் கற்ற தமிழர்கள், சமஸ்கிருதமும் சம்பந்தப்பட்ட மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மொழியே என்பதை அறிந்தார்கள்.

வாழ்க்கைப் பயன்பாடுகளுக்கு மட்டுமல்லாமல், கடவுள் வழிபாட்டுக்கும் உகந்த மொழி, தாய்மொழியாம் தமிழே என்பதை உணர்ந்தார்கள். அதை வழிபாட்டு மொழியாக்கிட இடைவிடாது முயன்றார்கள். 

அதைக் கோயில்களில் நுழையவிடாமல்  அவ்வப்போதைய ஆட்சியாளர்களின் உதவியுடனும் நீதி மன்றங்களை அணுகியும் தொடர்ந்து தடுத்துவந்தார்கள் 'அவர்கள்'.

அவர்கள் திருந்தவில்லை; தமிழைக் கோயில் வழிபாட்டு மொழியாக ஏற்பதற்கு இன்றளவும் அவர்கள் தயாராக இல்லை என்பதை, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதை எதிர்த்து, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர்[பிராமணர்கள் சார்பாக] உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தது உறுதிப்படுத்தியது.

இவர், '1998ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது[நடைமுறைகளை உருவாக்கியவர் கடவுளா?!?!]. மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது' என்றெல்லாம் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

நரசிம்மன் என்பவரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், '2008ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை செய்ய எந்தத் தடையும் இல்லை என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது' என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள்,  'குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது. ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யத் தேவையில்லை. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம்' என்று உத்தரவிட்டுள்ளார்கள்.

நீதிபதிகளின் தீர்ப்பு நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிற அதே வேளையில், தமிழரின் கடின உழைப்பில் உருவான கோயில்களில் தமிழை நுழையவிடாமல் தடுக்கும் முயற்சியை 'அவர்கள்' இன்றளவும் தொடர்ந்துகொண்டிருப்பது, தமிழர்கள் என்றென்றும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக மிக மிக அவசியம்! 

தகவல் உதவி: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=131594    -9/3/2021 4:51:58 PM

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

மு.க.ஸ்டாலினுக்கு நெல்லைக் கண்ணன் சூட்டிய மணிமகுடம்!!!

வ.உ.சி.யின் 150ஆவது பிறந்தநாள் விழா இன்று (5ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வ.உ.சி.க்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

வ.உ.சி.யின் 150ஆவது பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாடுதல் முதலான அந்த அறிவிப்புகளை, அனைத்துத் தமிழ் ஊடகங்களும் குறிப்பிடத்தக்க செய்தியாக அறிவித்துள்ளன.  இந்நிலையில்.....

மேற்கண்ட அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழறிஞர் நெல்லைக் கண்ணன்.

அதன் உள்ளடக்கம் பின்வருமாறு:

#சென்னை காந்தி மண்டபத்தில் அவர்[வ.உ.சி] செக்கு இழுந்த இடத்தில் அவருக்கு மார்பளவுச் சிலை; கோவையில் சிறையில் இருந்த இடத்தில் முழு உருவச் சிலை; தமிழ்நாட்டில் பல இடங்களில் வ.உ.சி.க்கு மரியாதை; ஒவ்வொரு வருடமும்  'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது' என்ற பெயரிலே ஆண்டுதோறும் விருது; விருதுத் தொகையாக ரூ.5 லட்சம் தமிழனுக்குத் தருவது என்று ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

குறையே சொல்ல முடியாத அளவிற்கு ஸ்டாலின் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். இன்றுவரை யாரும் அவரை நோக்கிக் கை நீட்டிக் குறை சொல்ல முடியாத அளவிற்கு ஆட்சி நடத்துகிறவர் அவர். அந்த மிகப்பெரிய மனிதனுக்கு, அந்தச் செக்கிழுத்த செம்மலுக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையைச் செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். 

வயதில் இளையவர் என்றாலும் நான் அவரது பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன். 

இந்தப் பெருமையை இந்த நாட்டிற்காகத் தன்னையும் தன் குடும்பத்தையும் தன் சொத்துச் சுகங்களையும் இழந்து வாடிய ஒரு மிகப்பெரிய மனிதனுக்குத் தந்திருக்கின்ற இந்த முதலமைச்சர் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்#

மூத்த அரசியல்வாதியும், தமிழறிஞருமான நெல்லைக் கண்ணன் அவர்கள் மனம் நெகிழ்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் போற்றிப் புகழ்ந்திருக்கும் அதே வேளையில், 'இதுவே தி.மு.க.வின் கடைசிக் கால ஆட்சி'என்பதாகத் தமிழ்நாடு 'பாஜக' தலைவர் அண்ணாமலை கணித்திருக்கிறார்; அறிவித்திருக்கிறார்.

நெல்லைக் கண்ணன் அவர்கள் முதலமைச்சர் மு.க, ஸ்டாலினை வாழ்த்தியதற்கான காரணங்களைப் பட்டியலிட்டது போல், அண்ணாமலை அவர்களும், தி.மு.க.ஆட்சி[திராவிடக் கட்சி] முடிவுக்கு வருவதற்கான காரணங்களைச் சுட்டிக் காட்டியிருந்தால், தான் தேர்ந்த ஓர் அரசியல்வாதி என்பதை அடையாளப்படுத்தியதாக இருந்திருக்கும்.

ஏனோ செய்யத் தவறியிருக்கிறார் தமிழ்நாடு 'பாஜக' தலைவர்!

====================================================================================

நன்றி: தமிழறிஞர் நெல்லைக் கண்ணன் & நக்கீரன்

https://www.nakkheeran.in/24-by-7-news/politics/v-o-chidambaram-pillai-related-announcements-m-k-stalin-nellai-kannan   -Sunday, Sep 05 2021