செவ்வாய், 7 செப்டம்பர், 2021

95 அடி போதாது; 950 அடியில் பெரியாருக்குச் சிலை நிறுவுக!!!

#29-07-1944 அன்று கடலூரில் பெரியாரின் மீது ஒன்றைச் செருப்பு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. தன் மீது விழுந்த ஒற்றைச் செருப்பு தனக்கும் பயன்படாது; வீசியவருகும் பயன்பாடாது என்பதால், வந்த வழியில் திரும்பிச் சென்று முன்னதாக வீசப்பட்ட இன்னொரு செருப்பையும் எடுத்துவந்தார் பெரியார் என்பது பழைய செய்தி.

செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில்[28 ஆண்டுகளுக்குப் பிறகு] 1972இல்  கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கடலூர் மக்களால் பெரியாருக்குச் சிலை திறக்கப்பட்டது. கலைஞர் திறந்து வைத்த சிலைத் திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார் ஈ.வெ.ரா.பெரியார்.

உயிருடன் இருந்தபோது பெரியார் தனக்குத்தானே சிலை வைத்துக்கொண்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார்கள் சிலர்[பெரியார் தனக்கு தானே சிலை வைத்துக்கொள்ளவில்லை. தொண்டர்களால் வைக்கப்பட்டது அது]. 

அக்கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில், "பிற்காலத்தில், ராமசாமினு ஒருத்தன் இருந்தான். அவன் பகுத்தறிவுப் பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருந்தான்னு பேசுவாங்க. அதுக்காகத்தான் இந்தச் சிலை" என்றார் பெரியார்#[https://youturn.in/articles/periyar-statue-in-cuddlore.html]

#சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் லட்சுமணசாமி, ஓய்வு பெற்ற சென்னை பிரதம நீதிபதி டாக்டர் ராஜாமன்னார், கர்மவீரர் காமராஜர் என்று பலருக்கும் உயிருடன் இருக்கும்போதே சிலை வைக்கப்பட்டது என விடுதலை நாளிதழ் செய்தி வெளியிட்டது.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பிலேயே பெரியாருக்குச் சிலை நிறுவப்பட உள்ளது. திருச்சியில் பெரியாருக்கு 135 அடியில் பிரமாண்ட சிலையை நிறுவ இருப்பது[தமிழ்நாடு அரசு அல்ல. தமிழ்நாடு அரசு அதற்கு அனுமதி மட்டுமே அளித்து இருக்கிறது].

அங்குசம் எனும் இணையதளத்தில், 'பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூறில், "பெரியார் உலகம்” என்ற பெயரில் பெரியாரின் 95 அடி உயரச் சிலை, 40 அடி பீடம், [அந்த வளாகத்தில்] குழந்தைகள் பூங்கா, நூலகம் முதலியவையும் அமைக்கப்படுவதற்குத் தேவைப்படும் தமிழ்நாடு அரசின் ஆணையைத் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்' என்று செய்தி வெளியாகி இருக்கிறது#[https://youturn.in/factcheck/trichy-periyar-statue-100cr-govt.html].

இது குறித்து முழுமையாக விசாரித்தறியாமல், 'தினமலம்' நாளிதழ்[பெரியாருக்கு 135[95] அடி உயரச் சிலை நிறுவுவதை இது கிண்டல் செய்திருக்கிறது] போன்ற, பெரியார் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட விஷ ஜந்துக்கள், தமிழக அரசை மனம்போன போக்கில் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருக்கிறதுகள்.

வெறும் கற்பனைக் கடவுள்களுக்குப் பல்லாயிரக் கணக்கில் சிலை வைத்துக் கோயில், கும்பாபிஷேகம், திருவிழா என்று கோடானுகோடி ரூபாயை வீணடித்துக்கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாதவர்கள், மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவதற்காகத் தன் இறுதி மூச்சுவரை அரும்பாடுபட்ட, பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்கு 95 அடி உயரச் சிலை வைப்பதைச் சகித்துக்கொள்ள இயலாமல், அடிவயிறு எரியப் பொருமுகிறார்கள்.

95 அடியென்ன, 950 அடியில்கூடப் பெரியாருக்குச் சிலை வைக்கலாம்.

சிலை வைப்பதோடு, ஊரூருக்குப் பெரியார் எழுதிய நூல்களும், அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளை விவரிக்கும் படைப்புகளும் அடங்கிய நூலகங்களை அரசு உருவாக்குதல் வேண்டும்.

பெரியாரின் உயரிய சிந்தனைகளை மக்கள் அறிந்துணர்ந்து பின்பற்றிட இவை வழிவகுக்கும் என்பது உறுதி.

திங்கள், 6 செப்டம்பர், 2021

'அவர்கள்' திருந்த மாட்டார்கள்!!!

தமிழ்நாட்டில் வாழ்வோரில் மிகப் பெரும்பான்மையோர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள். இங்குப் பிழைப்புத் தேடி வந்த ஏனையோரும்[பிராமணர்கள் உட்பட] தமிழ் அறிந்தவர்களே.

இங்கே பிரபலமாக உள்ள பெரிய பெரிய கோயில்கள் எல்லாமே, தமிழகத்தை ஆட்சி செய்த தமிழ் மன்னர்களால் தமிழ் மக்களின் உழைப்பில் கட்டப்பட்டவையே.

தமிழ் மக்களுக்காக, தமிழ் மக்களின் உழைப்பில் கட்டப்பட்ட கோயில்களில் உள்ள கடவுள்களுக்குத் தமிழில் வழிபாடு நிகழ்த்துவதே இயற்கை நெறியாகும்.

இம்மண்ணை ஆண்ட மன்னர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, 'சமஸ்கிருதம் தேவ பாஷை; வேதம் கடவுளால் அருளப்பட்டது. அதிலுள்ள மந்திரங்களைச் சொல்லி வழிபட்டால்தான் கடவுளின் அருள் கிட்டும்' என்று போதனை செய்து அவர்களை நம்ப வைத்தார்கள் 'பிராமணர்கள்'; வழிபாட்டு நெறிமுறைகளைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.

அறிவியல் யுகம் பிறந்தது.

ஆழ்ந்து சிந்திக்கக் கற்ற தமிழர்கள், சமஸ்கிருதமும் சம்பந்தப்பட்ட மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மொழியே என்பதை அறிந்தார்கள்.

வாழ்க்கைப் பயன்பாடுகளுக்கு மட்டுமல்லாமல், கடவுள் வழிபாட்டுக்கும் உகந்த மொழி, தாய்மொழியாம் தமிழே என்பதை உணர்ந்தார்கள். அதை வழிபாட்டு மொழியாக்கிட இடைவிடாது முயன்றார்கள். 

அதைக் கோயில்களில் நுழையவிடாமல்  அவ்வப்போதைய ஆட்சியாளர்களின் உதவியுடனும் நீதி மன்றங்களை அணுகியும் தொடர்ந்து தடுத்துவந்தார்கள் 'அவர்கள்'.

அவர்கள் திருந்தவில்லை; தமிழைக் கோயில் வழிபாட்டு மொழியாக ஏற்பதற்கு இன்றளவும் அவர்கள் தயாராக இல்லை என்பதை, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதை எதிர்த்து, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர்[பிராமணர்கள் சார்பாக] உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தது உறுதிப்படுத்தியது.

இவர், '1998ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது[நடைமுறைகளை உருவாக்கியவர் கடவுளா?!?!]. மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது' என்றெல்லாம் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

நரசிம்மன் என்பவரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், '2008ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை செய்ய எந்தத் தடையும் இல்லை என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது' என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள்,  'குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது. ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யத் தேவையில்லை. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம்' என்று உத்தரவிட்டுள்ளார்கள்.

நீதிபதிகளின் தீர்ப்பு நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிற அதே வேளையில், தமிழரின் கடின உழைப்பில் உருவான கோயில்களில் தமிழை நுழையவிடாமல் தடுக்கும் முயற்சியை 'அவர்கள்' இன்றளவும் தொடர்ந்துகொண்டிருப்பது, தமிழர்கள் என்றென்றும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக மிக மிக அவசியம்! 

தகவல் உதவி: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=131594    -9/3/2021 4:51:58 PM