ஞாயிறு, 3 அக்டோபர், 2021

பெண்களே இல்லாமல் ஒரு பெண் தெய்வத் திருவிழாவா?!?!?

'ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல்நாடு கிராமம். இங்குள்ள கண்மாய்க் கரையில் உள்ள எல்லைப் பிடாரி அம்மனுக்குப் பீடம் அமைத்து வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் 'வினோதத் திருவிழா' நடைபெற்றது. இந்தத் திருவிழா நடக்கும் தேதி அறிவித்ததில் இருந்து கடந்த ஒருவார காலத்திற்கு இப்பகுதிக்குப் பெண்கள் யாரும் வந்ததில்லை.' -இது ஊடகச் செய்தி.

இன்று[03.10.2021] பிற்பகல், 'மாலை முரசு' தொலைக்காட்சி மூலமும் இச்செய்தியை அறிய நேரிட்டது.

காலங்காலமாக, 'தெய்வங்கள்' என்று போற்றப்படும் பெண்கள் புறக்கணிக்கப்பட்டு ஒரு பெண் கடவுளுக்கு விழா எடுக்கும் அறியாமையை என்னென்று சொல்வது?

50க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கொன்று பிரியாணி சமைத்து உண்டு இன்புற்றிருக்கிறார்களே ஆண்கள், அவர்கள் உண்ட அந்தக் கறிப்பிரியாணி செரித்திருக்குமா?

யாரோ ஒரு/சில பெண் வெறுப்பாளர்கள் கட்டிவிட்டுச் சென்ற கதையை[இதற்கு முன்பும் சில ஊர்களில் இம்மாதிரியான விழாக்கள் நடைபெற்றுள்ளன] நம்பி, பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, ஆளாக்குவதற்காகத் தம் வாழ்வை அர்ப்பணிக்கிற அன்னையர் குலத்தை அவமதிக்கும் ஆடவர்களை, அறிஞர் உலகம் ஒருபோதும் மன்னிக்காது.

இதை 'விநோதத் திருவிழா' என்கிறது செய்தி ஊடகம். அல்ல; பெண்களின் விரோதிகள் நடத்திய திருவிழா இது.

நாளும் பகுத்தறிவு வளர்ச்சி பெற்றுவரும் நிலையில் இம்மாதிரி விழாக்களுக்கு அரசு உடனடியாகத் தடை விதித்தல் அவசரத் தேவையாகும்.

அரசு கண்டுகொள்ளாது எனின், மகளிர் அமைப்புகள் ஒருங்கிணைந்து, இவற்றிற்குத் தடை கேட்டு நீதி மன்றங்களை அணுகுதல் வேண்டும். 

தீர்வு கிடைப்பதில் தாமதம் நேருமாயின்.....

சிந்திக்கும் திறனும், சீர்திருத்தங்களில் நாட்டமும் கொண்ட அறிவுஜீவிப் பெண்கள், இது குறித்த விழிப்புணர்வைப் பிற பெண்களுக்கும் ஏற்படுத்துவதோடு, உரிய தருணத்தில் தொடர் போராட்டங்களையும் நடத்திட வேண்டும்.

செய்வார்களா?

====================================================================================

https://www.puthiyathalaimurai.com/newsview/117664/Kamuthi-A-bizarre-festival-of-the-Bidari-Amman-Temple-in-Ella-which-is-worshiped-only-by-men

வெள்ளி, 1 அக்டோபர், 2021

'களிமண்' மண்டையர்கள்!!!

'நாசாவின் 'சந்திரா எக்ஸ்-ரே' வான் ஆய்வகத்தின் அலுவல்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படம் வெளியியாகியிருந்தது.' அந்தப் படம்.....

சிவப்பாகவும், நீலமாகவும், கறுப்புவெள்ளையாகவும் திட்டுத்திட்டான சிறு சிறு மேகங்கள் போல ஏதோதோ தெரிகின்றன. இதற்கு மேலும்  விளக்கம் தருவது நமக்கு இயலாத ஒன்று.

நம் பக்த சிரோன்மணிகளோ, இங்கே 'தங்கத்தால் ஆன கடவுளின் கை[Hand of God] தெரிவதாகச் சமீக ஊடகங்களில்  'அலப்பறை' செய்கிறார்களாம்[அடர் மஞ்சள் நிறத்தில் ஐந்து விரல்கள் போல் தோன்றும் பகுதியை கடவுளின் கை என்கிறார்களோ?!?!].

'bbc' செய்தி ஊடகத்தில் https://www.bbc.com/tamil/science-58717442  -28 செப்டெம்பர் 2021] இதை வாசித்தபோது.....

"சாத்தானின் கை' என்று எவருக்கும் தோன்றவில்லையா?!"

"கையைக் காட்டிய கடவுள் ஏன் கால்களையோ கருணை வழியும் கண்களையோ, வேறு பிற உறுப்புகளையோ, ஒட்டுமொத்த உடம்பையோ காட்டவில்லை?"

"கடவுளின் கைகளை முன் எப்போதாவது பார்த்தவர் உண்டா?"

"கடவுளின் கையாகவே இருந்தாலும் அதனால் மனித இனத்துக்கோ, பிற உயிரினங்களுக்கோ என்ன நன்மை?"

"இவர்களின் மண்டையில் இருப்பது மூளையா, களிமண்ணா?"

என்றிவ்வாறெல்லாம் கேட்கத் தோன்றியது.

தான் மட்டும் முட்டாளாக இருந்தால் போதாது, சக மனிதர்களும் அவ்வாறே இருந்திடல் வேண்டும் என்று ஆசைப்படுகிற அறிவுசூன்யங்களுக்காகவே, படத்தில், தங்கத்தால் ஆன கை போன்று தெரிகிற 'ஒளி மூட்டம்' பற்றி, அதன் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது 'நாசா' ஆய்வகம்.

#விண்மீன் ஒன்று வெடித்துச் சிதறிய பின்பு உருவான, 'பல்சர்'(துடிப்பு விண்மீன்) ஒன்றால் உருவான ஆற்றல் மற்றும் துகள்களின் மூட்டமே தங்க நிறத்தில் கை போன்ற உருவமாகத் தெரிகிறது.# 

[கூடுதல் விளக்கத்திற்கு மேலே இடம்பெற்றுள்ள 'பிபிசி' முகவரிக்குச் செல்க].