செவ்வாய், 12 அக்டோபர், 2021

பிரெஞ்சுக்காரர்களின் நிர்வாண மோகம்!!!

பிரான்ஸ் நாடு பல நிர்வாணக் கடற்கரைகளையும், நிர்வாண விடுதிகளையும் கொண்டிருக்கிறது. அங்கே ஒரு நிர்வாணப் பொது நீச்சல் குளமும் உள்ளது. நிர்வாண விரும்பிகள், அந்த மாதிரி விடுதிகளில் தங்கிக் குதூகளிப்பதும், வாரத்திற்கு மூன்று முறை அவ்வகைக் குளங்களில் நிர்வாணமாக நீந்திப் பரவசப்படுவதும் நடைமுறையில் உள்ளதாம்.

இந்நிலையில், நிர்வாண விரும்பிகளுக்காக, பாரிஸ் நகரின் கிழக்குப் பகுதியில் இருக்கும் 'போயிஸ் டி வின்சென்ஸ்' என்ற இடத்தில், கால்பந்து மைதான அளவிற்கு ஒரு நிர்வாணப் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. 

முகம் சுளிப்பவர்களுக்கு ஒரு நிர்வாண விரும்பி அறிவுறுத்துவது.....

"நிர்வாணத்தைப் பாலியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது." 

"இது உண்மையான ஆனந்தம். நிர்வாண விரும்பிகளுக்கு இது இன்னுமொரு சுதந்திரம்" என்று பாரிஸ் நிர்வாண விரும்பிகள் சங்கத்தை[நம் நாட்டில் இது மாதிரியான சங்கம் தொடங்குவது எப்போதோ?!]ச் சேர்ந்த 'ஜூலியன் க்ளாட்-பெனெக்ரி' ஏஃப்பி[?] செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

"இது இயற்கையை மதித்து அதற்கு மரியாத செலுத்தும் செயல்" என்றும் அவர் கூறியிருக்கிறார்.

"பொது இடங்களைப் பயன்படுத்துவதில், எங்கள் திறந்த மனதுடைய பார்வையின் ஒரு பகுதியே இது" என்று பூங்காக்களை நிர்வகிக்கும் துணை மேயர் 'பெனிலோப் கோமிட்ஸ்' என்பவர் கூறியுள்ளார்.

"இந்தப் பூங்காவில் வேண்டுமென்றே பாலுறுப்புகளை வெளிப்படுத்துவது, மற்றவர்களின் நிர்வாணத்தைப் பார்த்துக் களிப்படைவது போன்றவற்றைச் சகித்துக்கொள்ள முடியாது" என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளார்களாம்.

பிரான்ஸ் போகிற போக்கைப் பார்த்தால், அங்கே நிர்வாண உடற்பயிற்சிக்கூடம், நிர்வாணக் கல்வி நிலையங்கள்[இருபாலருக்கானவை உட்பட], நிர்வாண மருத்துவமனைகள் எல்லாம் திறக்கப்படக்கூடும் என்பது அடியேனின் அனுமானம்.

நிர்வாண விரும்பிகளுக்கானமேற்கண்ட ஏற்பாடுகளுக்கு விமர்சனங்களும் எழுந்தன. ஓர் அரசியல்வாதி, "எல்லாம் பைத்தியக்காரத்தனம்" என்று விமர்சித்தாராம்.

இவர் மாதிரியான பத்தாம்பசலி அரசியல்வாதிகள் பிரான்சில் ஆட்சிபீடம் ஏறினால், மேற்கண்ட நிர்வாண விடுதிகள், நிர்வாண நீச்சல் குளங்கள், நிர்வாணப் பூங்கா என்று அனைத்திற்கும் தடை விதிப்பார்கள். 

ஆகவே, நிர்வாண மனிதர்களையும், 'மனிதி'களையும் நரில் கண்டு ரசித்து இன்புற விரும்புகிறவர்கள் இப்போதே ஃபிரான்சுக்குப் பயணம் மேற்கொள்வது நல்லது!

https://www.bbc.com/tamil/global-41114153       

திங்கள், 11 அக்டோபர், 2021

உரசல் சுகம்!![பொழுதுபோக்கு]

குமுதம் இதழில் 33 ஆண்டுகளுக்கு [12.03.1987] முன்பு வெளியான பழைய கதை இது. ஆடவரின் பலவீனத்தை அச்சு அசலாய்ப் படம் பிடிப்பதால் இன்னும் 200 ஆண்டுகள் கழித்துப் படித்தாலும் படிப்பவர் இதழ்களில் புன்னகை மலரும்! 

அருணுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது.

“இந்த மாதிரிக் காட்டான்களெல்லாம் ஏன்தான் பஸ்ஸில் ஏறுகிறார்களோ? சே!” என்று முணுமுணுத்தான்.

அவன் அமர்ந்திருந்தது இருக்கையின் ஓரத்தில். நின்று பயணம் செய்பவர்கள் அவன் மீது சாய்வதும் இடிப்பதுமாக இருந்தார்கள். அவன் மிகவும் சங்கடப்பட்டான். இப்படி ஒருவர் மீது ஒருவர் இடிப்பதும் உரசுவதும் அவனுக்குக் கட்டோடு பிடிக்காது.

வேறு வழியில்லாமல் பொறுத்துக்கொண்டு கையில் இருந்த வார இதழில் மூழ்கினான். ஆனாலும், நிற்பவர்கள் சும்மா இருக்கவில்லை; அவனை ஒரு சுமை தாங்கியாகவே நினைத்துச் செயல்பட்டார்கள்.        

அவன் மூக்கருகில் ஏதோ ஒன்று உரசி, ‘கிச்சு...கிச்சு’ மூட்டியது! சமாளிக்க முடியாமல் இரண்டு மூன்று தும்மல்கூடப் போட்டுவிட்டான். ஆத்திரத்துடன் பக்கவாட்டில் கவனித்தபோது, ஒரு கிராமத்து ஆசாமி அவன் தோளின் மீது ஒய்யாரமாகச் சாய்ந்து நின்றுகொண்டிருந்தார்.

அவர் தோளில் கிடந்த துண்டு, காற்றில் பறந்து அவன் முகத்தில் உரசி மூக்கில் நமைச்சலை உண்டுபண்ணியது. அந்த நபரின் அசிங்கமான கோலத்தையும் அழுக்குத் துண்டையும் பார்த்தவனுக்கு வயிற்றைக் குமட்டியது.

தோளில் கிடக்கும் தனது துண்டு அருணுக்குத் தொந்தரவு தருகிறது என்பதையோ, அவனின் கனல் தெறிக்கும் கோபப் பார்வையையோ அந்த ஆசாமி உணர்ந்ததாகத் தெரியவில்லை.

வேறு வழியில்லாமல், “யோவ், இந்தத் துண்டைக் கொஞ்சம் மடிச்சித் தோளில் போடய்யா” என்று குரலில் அழுத்தம் கொடுத்துச் சொன்னான் அருண்.

அந்த ஆள், முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லாமல், துண்டை மடித்துத் தோளில் போட்டுக்கொண்டார்; சண்டைகிண்டையெல்லாம் போடவில்லை.

அருண், மீண்டும் வார இதழில் பார்வையை மேயவிட்டான். ஆனாலும், வண்டி குலுங்கிச் சாய்ந்து நிமிரும்போதெல்லாம் அவன் மீது விழுவதும் விலகுவதுமாக இருந்தார் அவர்.

பேருந்தில் கூட்டம் குறைய ஆரம்பித்தது. ஒரு சிலர் மட்டுமே நின்றுகொண்டிருந்தார்கள்.

அருண் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஆனாலும், அது நீடிக்கவில்லை.

மீண்டும் அவன் முகத்தில் துணியின் உரசல். அவன் கோபம் எல்லை கடந்தது.

அந்த ஆசாமியின் துண்டைப் பிடுங்கி வெளியே எறிந்துவிடுவது என்ற தீர்மானத்துடன் பக்கவாட்டில் பார்வையை ஓட்டினான்.

அவனுள் பொங்கி வழிந்த கோபம் முச்சூடும் அடங்கிப்போனது.

இப்போது அவன் முகத்தில் கிச்சுக்கிச்சு மூட்டிக் ‘கிளுகிளுப்பு’த் தந்துகொண்டிருந்தது ஓர் அழகிய இளம் பெண்ணின் முந்தானை!

“ஆஹா...ஆஹா...என்ன சுகம்!” -அவன் உள் மனசு சிலாகித்தது. உடம்பு சிலிர்த்தது! அந்த லொடலொடா அரசுப் பேருந்தில் சொர்க்கத்துக்குப் பயணம் போவதாக உணர்ந்தான்.

தான் பேருந்தைவிட்டு இறங்கும்வரை அவள் தன்னருகிலேயே நின்றுகொண்டிருக்க வேண்டும் என்று தனக்குத் தெரிந்த கடவுளையெல்லாம் வேண்டிக்கொண்டான் அருண்!!!

==========================================================================

கதையை நான் எழுதியதாகச் சொல்லிக்கொள்ளவே ஆசைப்பட்டேன். என் மனசாட்சி முரண்டு பிடித்ததால், கதையை[கொஞ்சம் மாற்றங்களுடன்] எழுதியவர் பெயரைக் கீழே தந்திருக்கிறேன்.

எழுதியவர்:                  ப.முருகேசன்.