திங்கள், 25 அக்டோபர், 2021

ஆண்களைவிடவும் பெண்களே புத்திசாலிகள்... சில நேரங்களில்!

ஒரு வாரம்போல வாணிப நிமித்தம் ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்புகிறான் கணவன். குளித்து முடித்து, உணவருந்திப் படுக்கையறை புகுந்த அவனுக்கு ‘அந்த’ நினைப்பு!

“இன்னும் என்ன பண்றே?” - மனைவியை அணுகிக் கிசுகிசுத்தான்.

அவனை ஓரக்கண்ணால் பார்த்து, “எல்லாம் போட்டது போட்டபடியே கிடக்குது” என்று புன்முறுவல் பூத்தாள் அவள். இந்தப் புன்முறுவலுக்கு என்ன அர்த்தம்?

‘குழந்தை தூங்காம விளையாடிட்டிருக்கு. நாத்தனார் நாவல் படிச்சிட்டுக் கொட்டக் கொட்ட முழிச்சிட்டிருக்கா. கிழவனும் கிழவியும் தொணதொணத்துட்டிருக்காங்க. எல்லாரும் தூங்கட்டும். அவசரப்படாதீங்க’ன்னு அர்த்தம்! இது எத்தனை ஆண்களுக்குப் புரியும்?

சில நேரங்களில், இந்தப் பெண்களின் பேச்சுக்கு எதிர்மறையாகப் பொருள்கொள்ள வேண்டும்.

தீபாவளிக்கு இரண்டு வாரம் இருக்கிறது. கணவன் அலுவலகம் புறப்படும்போது மனைவி குரல் கொடுக்கிறாள்: “இந்தத் தீபாவளிக்கு எனக்குப் பட்டுப்புடவை வேண்டாம்.”

“இன்னிக்கிச் சம்பள நாளாச்சே. மறக்காம பட்டுப் புடவை வாங்கிட்டு வந்துடுங்க” என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம். இதைப் புரிந்துகொண்டால் கணவன் பிழைத்தான். புரியாதவன் பாடு திண்டாட்டம்தான்.

இருவரும் ஒரு திருமணத்திற்குச் செல்கிறார்கள். ஆடம்பரமாக உடுத்து, அழகழகான பெண்கள் எல்லாம் வருவார்கள் இல்லையா? எவளோ ஒருத்தியைச் சுட்டிக்காட்டி, “இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா இல்லியா?’ என்று உங்களவள் கேட்டால், “உன்னை விடவா?” என்று கூசாமல் பொய் சொல்லத் தெரிய வேண்டும். “ஆமா” என்று உளறிக்கொட்டினால் ‘அது’ விசயத்தில் நீங்கள் பல நாள் பட்டினி கிடக்க வேண்டியிருக்கும்!

உங்கள் மனைவியின் தோழி,  செல்பேசியில் உங்களையும் அழைத்துக்கொண்டு தன்  திருமணநாள் கொண்டாட்டத்திற்கு வரச் சொல்லுகிறாள். “என் நாத்தனார் ரெண்டு பேரும் ஊரிலிருந்து வந்திருக்காங்க. அவங்களையும் அழைச்சிட்டு வரவா?” என்கிறாள் உங்கள் மனைவி. தோழியிடமிருந்து உடனடி பதில் இல்லை. கொஞ்சம் அமைதிக்குப் பிறகு அழைத்துவரச் சொல்லுகிறாள் அவள்.

அந்த அமைதிக்கு என்ன பொருள்?

“வேண்டாம்” என்பதே. அது உங்கள் மனைவிக்கும் பிற பெண்களுக்கும் மட்டுமே புரியும். உங்களைப் போன்ற ஆண்களுக்குப் புரியாது.

கணவனும் மனைவியுமான இரண்டு ஜோடிகள் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்புகிறார்கள். முதலில் ஒரு ஜோடியின் வீடு வந்துவிடுகிறது. அந்தப் பெண், “வாங்களேன், காபி சாப்பிட்டுப் போறது” என்கிறாள்.

“சரி” என்று தலையாட்ட இருந்த உங்களைத் தடுத்து, “பரவாயில்ல அக்கா. வீட்டில் அவசர வேலை இருக்கு” என்று உங்களை இழுத்துக்கொண்டு வீடு வந்து சேர்கிறாள் உங்கள் துணைவி.

‘வாங்களேன்’, ‘போறது’ போன்றவை வெறும் உபச்சார வார்த்தைகள் என்பது உங்கள் குடும்பத் தலைவிக்கும் புரியும்; உங்களுக்குப் புரியவே புரியாது.

வீட்டில், எதிர்பாராமல் வந்த விருந்தாளியைச் சாப்பிட அழைக்கிறாள் உங்கள் மனைவி. “நீங்களும் சாப்பிடுங்க” என்று சொல்லாமல், “சாப்பிட்டுடுங்களேன்” என்று சொன்னால், அதற்குப் போதுமான அளவு உணவு இருப்பில் இல்லை என்று அர்த்தம். 

குரலின் ஏற்ற இறக்கம்,  வார்த்தைகளுக்கு இடையே விடும் இடைவெளி, புருவங்களின் அசைவு, இழுத்து விடும் பெருமூச்சு என்றிவைகளுக்கேற்பப் பெண்களின் பேச்சுக்கான அர்த்தமும் மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.

பெண்களின் பேச்சை முழுமையாகப் புரிந்துகொள்வது பெண்களுக்கு மட்டுமே சாத்தியம். ஆண்களுக்கு?

ஊஹூம்!
==========================================================================
மார்ச் 1997 ‘ஓம் சக்தி’ இதழில் முருகுசுந்தரம் அவர்கள் எழுதியதைக் கொஞ்சம் மாற்றங்களுடன் பதிவு செய்திருக்கிறேன்.

வெள்ளி, 22 அக்டோபர், 2021

தமிழர்கள் வாழும் தாராவி[மும்பை]யில் 'மதக்கலவரம்'!... ஒரு பின்னோக்கு[flashback].

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக 'நக்கீரன்' வாசகர்களுடன் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவியில் நடைபெற்ற மதக்கலவரம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

“அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் தாராவியிலும் மதக்கலவரம் வெடித்தது. அந்தச் சம்பவம் நடந்து ஒருமாத காலம் நிறைவடைந்திருந்த நிலையில், மிகப்பெரிய கலவரம் தாராவிக்குள் உண்டானது. 

.....அங்கு இந்து - முஸ்லீம் கலவரம் வெடித்தவுடன் இரு தரப்புமே மற்றவர்கள் வேட்டியையும், கால்சட்டையையும் உருவிப்பார்த்து, அவர்களது மதத்தை உறுதிசெய்துவிட்டு வெட்ட ஆரம்பித்தார்கள். பலபேர் இதில் காயம்பட்டார்கள். இட்லி விற்ற ஒரு சிறுவனை இதேபோல ஆடையுருவிப் பார்த்துக் கொலைசெய்து  90 அடி ரோட்டில் வீசிவிட்டுச் சென்றனர். மொத்தமாக இதில் இறந்தது 8 பேர்தான் என்றாலும் அங்கிருந்த மக்கள் மத்தியில் இது ஏற்படுத்தியிருந்த பீதி மிகவும் கொடூரமாக இருந்தது. அதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. 

அங்கிருந்த குடிசைகளுக்குத் தீவைத்து, அந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக குடிசையைக் கொளுத்தினார்கள். கொளுத்தியவனும் தமிழன்தான். இந்து, முஸ்லீம் என இரு தரப்புகளிலும் தமிழர்கள் இருந்தார்கள். 

அந்தக் கொடூரமான கலவரங்களுக்கு மத்தியில் கடையில் இருந்த அரிசி, பருப்புகளெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன. அந்தக் கடையும் தமிழனுடையதே; அங்குள்ள பொருட்களை அள்ளிக்கொண்டு சென்றவனும் தமிழனே. 144 தடை உத்தரவு போடப்பட்டு ராணுவம் அங்கு குவிக்கப்பட்டிருந்தது. அன்றைய இரவு நான், எனது தோழர்கள் அனைவரும் வேலை முடித்துவிட்டுத் திரும்பி வந்தோம். எங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் உள்ளே தனியாக இருப்பார்கள் எனக் கூறியவுடன் தாராவிக்குள் செல்ல எங்களை அனுமதித்தனர். நடந்து போகக்கூடாது எனக் கூறி முட்டிபோட்டுக்கொண்டே செல்லச் சொன்னார்கள். நானும் உடனிருந்த தோழர்களும் முக்கால் கி.மீ தூரம் முழங்காலிட்டுக்கொண்டே சென்றோம்.    

.....ஒருத்தனைக் கத்தியால் குத்திக் கொல்ல நினைத்தார்கள் என்றால் விஷம் தடவித்தான் குத்துவார்கள். தெருக்களில் ரத்தம் சிந்திக்கிடப்பது, கண்ணாடிகள் நொறுங்கிக்கிடப்பதெல்லாம் அங்கு சாதாரணம். சாதிக்கலவரங்கள், மதக்கலவரங்கள், களவாணிப்பயல்களுக்கு இடையேயான மோதல்கள் எனப் பலவற்றைப் பார்த்துப் பழகிவிட்டார்கள் அந்த மக்கள்.

.....அங்கு நடக்கிற பிரச்சினைகளைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசாரைக் கொண்டுவந்து குவிப்பார்கள். பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டுவரவே அவர்கள் வந்திருந்தாலும் கலவரத்தில் நம்மையும் சுட்டுவிடுவார்களோ என அச்சமாக இருக்கும். 

அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி யூனியன் உட்பட எல்லா யூனியன்களும் உங்களுக்கு நாங்கள் போனஸ் வாங்கித் தருகிறோம் எனக் கூறி அங்கிருந்தவர்களைப் போராட வைத்தார்கள். கடைசியில் அங்கிருந்த டெக்ஸ்டைல்ஸ் அனைத்தும் குஜராத்திற்குச் சென்றுவிட்டது. ஒவ்வொரு கம்பெனியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வேலை பார்த்தார்கள். சில கம்பெனிகளில் 7 ஆயிரம் தமிழர்கள்வரை வேலை பார்த்தார்கள். 80களிலேயே ரூ. 25 ஆயிரத்திற்கும் அதிகமாகச் சம்பளம் வாங்கிய தமிழர்களும் அங்கு இருந்தனர். இந்தக் கம்பெனிகள் எல்லாம் மூடப்பட்டதால் வெறும் 15 ரூபாய் தினக்கூலிக்காக நம்முடைய ஆட்கள் வேலைக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது.  

இவ்வளவு நெருக்கடியான வாழ்க்கைக்கு மத்தியிலும் கணபதி வழிபாடு சிறப்பாக நடைபெறும். மாடுங்காவில் வரதா பாய் தரப்பினர், கணேசர் கோவிலில் ஆதிதிராவிடர்கள், ட்ரான்சிட் கேம்பில் நாடார்கள், கல்யாணிவாடியில் முக்குலத்தோர் என வெகு விமரிசையாக் கணபதி விழா நடக்கும். 'இந்த உப்பளத்தின் ஒலிப்புலத்திலும் இயேசு முளைக்கிறார்; ஏற்பாடு ஜெபிக்கிறார். 'இந்த உப்பளத்தின் ஒலிப்புலத்திலும் அல்லா முளைக்கிறார்; அருளாளர் ஆகிறார்'. கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ், இஸ்லாமியர்களின் ரம்ஜான் என எல்லா மதப்பண்டிகைகளும் அங்கு களைகட்டும். ஆனால், இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு விழா கொண்டுவதற்கான வாய்ப்பே அங்கு அமையவில்லை.

இங்கே சாமிகள் எல்லாம் அந்தந்த மதங்களுக்கானது. அங்கு தானாக முளைத்த ஒன்று என்றால் அது ரௌடிசம். நாங்கள்தான் உங்களுக்குப் பாதுகாப்பு என்றுகூறி அவர்களது சுயநலத்திற்காகச் சாதிய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மக்களைத் தனிமைப்படுத்தும் வேலைகளும் அங்கு நடந்தன.

கொஞ்சம் கவிதை வரிகளை மட்டும் தவிர்த்து, கட்டுரையில் இடம்பெற்றிருந்த கருத்துரைகளை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறேன்.

'நக்கீரன்' இதழுக்கு நம் நன்றி.

https://www.nakkheeran.in/360-news/thodargal/aaravayal-periyaiya-dharavi-story-series-3

Published on 27/05/2021 (15:15) | Edited on 18/06/2021 (10:01)