திங்கள், 29 நவம்பர், 2021

நீதியரசர் 'ரமணா'வின் உரையும் மருத்துவர் ராமதாஸின் உரிமைக் குரலும்!

அதில் பங்கேற்றுப் பேசிய தலைமை நீதியரசர் என்.வி. இரமணா, “உயர்நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள், வழக்காடும் மொழி, அதிக வழக்குச் செலவு ஆகியவைதான் நீதிமன்ற அமைப்பிலிருந்து சாதாரண மக்களை அந்நியப்படுத்துகின்றன. இந்நிலையை மாற்ற, நடைமுறை முட்டுக்கட்டைகளை நீக்கியும், உள்ளூர் மொழி அதிக அளவில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தும் நீதி வழங்குவதற்கான ஒட்டுமொத்த நடைமுறையையும் எளிதாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதை வரவேற்ற 'பாமக' நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,

'சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளாலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த  2006ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தல் காரணமாக, தமிழைச் சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  மு.கருணாநிதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றினார். ஆனால், 15 ஆண்டுகள் ஆகியும் அந்தத் தீர்மானம் அனுப்பப்பட்ட நிலையிலேயே முடங்கிக் கிடக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் தமிழைச் சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க இயலாது என்றும் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்தது. ஆனால், அதிகாரப்பூர்வமான வகையில் சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு மத்திய அரசுகளிடமிருந்து கடந்த 15 ஆண்டுகளாகப் பதில் இல்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி உயர் நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக ஹிந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர் நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக ஹிந்தி[நடுவணரசின் செல்லப்பிள்ளை] அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வழியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாகத் தமிழை அறிவிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. தமிழை நீதிமன்ற மொழியாக்க முட்டுக்கட்டை போட வேண்டும் என்று நினைத்த அப்போதைய மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டு தமிழுக்குத் தடை போட்டது' என்று கடந்த கால நிகழ்வுகளை நினைவுபடுத்திய மருத்துவர் ராமதாஸ் அவர்கள், 

'இப்போது தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை உயர் நீதிமன்றத்தில் அதிகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களே கூறியிருக்கிறார். அதனால், தமிழை, சென்னை உயர் நீதிமன்ற மொழியாக்குவதற்கு எந்தத் தடையுமில்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்ற தமிழகச் சட்டப்பேரவையின் தீர்மானத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி அவரின் பரிந்துரையைப் பெற்று, குடியரசுத் தலைவர் மூலம் அறிவிக்கை வெளியிடச் செய்யுமாறு மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தேவைப்பட்டால் பேரவையில் புதிய தீர்மானத்தை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.' 

                                                *  *  *

இந்த அறிவுறுத்தல் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் தமிழ்ப்பற்றைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. தமிழுக்குப் பெருமை சேர்ப்பதில் முதல் மனிதராகத் தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் இவருக்குத் தமிழுலகம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இவர்தம் பரிந்துரையை ஏற்று, தமிழை நீதிமன்ற மொழியாக்கும்  கடமையைத் தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று வேண்டுகிறோம்.

==========================================================================

நன்றி:

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chief-justice-supreme-court-gives-confidence-action-needed-declare-tamil     - 27/11/2021  

ஞாயிறு, 28 நவம்பர், 2021

என் சாதி! உன் சாதி!! நம் சாதி!!!

கீழே இடம்பெற்றுள்ள 'காணொலி'[2020இல் வெளியானது. இதற்கும் 'ஜெய் பீம்' திரைப்படப் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை] தமிழ்த் திரையுலகில் உள்ள வன்னிய ஜாதியினரைப் பட்டியலிடுகிறது. இதைப் போல, பிற ஜாதிப் பிரபலங்களைப் பட்டியலிடும் காணொலிகளும் இருத்தல்கூடும். என் கண்ணில் பட்டது இது மட்டுமே.

காணொலியைத் தயாரித்தவர், 'இதற்கான உள்நோக்கம் எதுவுமில்லை; தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்' என்ற வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறார்.

'உள்நோக்கம்' பற்றி அவர் குறிப்பிடவில்லையென்றாலும், காணொலிக் காட்சி மூலம் வன்னிய ஜாதி நடிக நடிகையரை ஒருங்கிணைப்பதும், தம் ஜாதி மக்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்துவதும்தான் அவரின் நோக்கம் என்பதை மிக எளிதாக அறிய முடிகிறது.

இதைக் காணும்போது, வன்னிய சங்கத்தவருக்கும் பிறிதொரு சாதிச் சங்கத்தவருக்கும் இடையே, ஏதேனும் பிரச்சினை மூண்டால், வன்னிய ஜாதியரிலுள்ள 'ரவுடி'களுக்கான[அனுமானம்தான்] ஒரு காணொலியையும் இவர் வெளியிடுவாரோ என்னும்  சந்தேகம் எழுவது தவிர்க்க இயலாததாக உள்ளது.

இவர்களுக்கும் பிறிதொரு சாதியாருக்கும் இடையே எந்தவொரு பிரச்சினையும் எழக்கூடாது என்பதே நம் மனப்பூர்வமான விருப்பமாகும்.

இந்தக் காணொலிக்காரருக்கு நாம் வைக்கும் கோரிக்கை ஒன்று உண்டு. அனைத்துச் சாதிச் சங்கத்தினருக்கும் இது பொருந்தும்.

உங்கள் இளைஞர்களுக்கு முன்னோடிகளாக இருக்கும் தகுதி, பட்டியலில் உள்ள நடிகர்களுக்கு இல்லை என்பதை உணருங்கள்.

உங்கள் சாதியிலுள்ள பிரபலமானவர்களின் பட்டியலை வெளியிடுவதில் பெரும் பித்துடையவர் நீங்கள் எனின், கீழ்க்காண்போர் குறித்த காணொலிகளை வெளியிட்டு மனநிறைவு பெறலாம்.

*சாதி வேறுபாடுகளைக் கடந்து சமுதாயப் பணி செய்யும் உங்களின் சாதிக்காரர்கள்.

*சாதி பற்றிய சிந்தனைக்கு இடம் தருதற்கு நேரமே இல்லாமல் பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் தீவிரம் காட்டும் உங்களின் சாதியைச் சார்ந்த விஞ்ஞானிகள் அல்லது, விஞ்ஞானி ஆவதற்குக் கடுமையாக உழைப்பவர்கள்.

*சாதியை மறந்து ஏதேனும் ஒரு துறையில் சாதனை நிகழ்த்தியவர்களை முன்மாதிரியாகக் கொண்டு சாதிக்கத் துடிக்கும் உங்கள் சாதி இளைஞர்கள்.

சிந்தித்தால், இவை தவிர வேறு துறைகளில் சிகரம் தொட்டவர்களின் பட்டியலடங்கிய காணொலிகளையும் உங்களால் தயாரித்திட முடியும்.

இம்மாதிரிக் காணொலிகள் உங்களின் சாதி இளைஞர்களை இலட்சியவாதிகளாக ஆக்கும் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்பது நம் நம்பிக்கை.

இதற்கான முயற்சியில் நீங்கள் உடனடியாக இறங்குவது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

நன்றி.


பின்வருவது, அனைத்து ஜாதியைச் சார்ந்த நடிகர் பட்டியல். 


'நடிகை'யருக்கான தனிப் பட்டியலையும், 'அதிக எண்ணிக்கையிலான 10 சாதி'க்காரர்களுக்கான பட்டியலையும் உள்ளடக்கிய காணொலிகளும்கூட 'யூடியூப்'இல் இடம்பெற்றுள்ளன.
==========================================================================