வெள்ளி, 21 ஜனவரி, 2022

திருந்துங்கள்; திருத்துவது அப்புறம்!

ஒரு சாமிக்கு ரெண்டு மனைவிமார்கள். ரெண்டு பேரும் எப்பவும் அவர்கூடவே இருப்பாங்க.

அப்படி இருந்தும் அவர்களின் முன்னிலையிலேயே பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறதில் அதிக நேரம் செலவழிச்சாராம் அவர்.

ரெண்டு பேரும் கடும்  கோபத்துக்கு உள்ளானாங்க.

பொதுவா, மனித இனத்தில், பெண்டாட்டிமார்களுக்குக் கோபம் வந்தா என்ன செய்வாங்க?

கணவன்கிட்டே முகம் காட்டிப் பேசமாட்டாங்க. அவர் ரொம்பப் பிரியமா நெருங்கி நெருங்கிப் பேசினாலும், இவங்க பிகு பண்ணிட்டு விலகி விலகிப் போவாங்க. அந்தி சாய்ந்த அப்புறமும் அண்டவிடமாட்டாங்க. இதுக்குப் பேரு 'ஊடல்'னு இலக்கியங்கள் சொல்லுது.

மனுசப் பொம்மணாட்டிகள் மட்டுமில்ல, கல்யாணம் ஆன பெண் கடவுள்களும்கூடப் புருஷக் கடவுள்களோடு ஊடல் கொண்டு விலகி விலகிப் போறதுண்டு.

அந்த வகையில்தான், மேற்கண்ட ரெண்டு பெண் சாமிகளும் கணவனோடு ஊடி, அவரைவிட்டு விலகி விலகி விலகிப் போனாங்களாம்.

கணவன் சாமி, சமாதானம் பண்ணி ரெண்டு பேரையும் தனக்கான இருப்பிடத்துக்கு அழைச்சுட்டுப் போனாராம்.

இந்தச் சுவாரசியமான ஊடல் நிகழ்ச்சி எந்த யுகத்தில் நடந்ததுன்னு கேட்க நினைக்கிறீங்கதானே?

தப்பு. சிந்தனையை நெடு நெடுந் தொலைவுக்கு நீளவிட்டுட்டீங்க.

இது நடந்தது, ரெண்டு நாள் முன்பு நம்ம திருப்பதி ஏழுமலையான் கோயிலில்[நாளிதழ்ச் செய்தி].நீங்க கேட்பீங்களோ இல்லையோ, "எப்பவோ நடந்ததாகச் சொல்லப்படுற இந்தப் புராணக் கதை நிகழ்ச்சியை இப்போதும்[ஆண்டு தவறாமல்] விழாவாக[உற்சவம்] நடத்துறதில் என்ன பயன்?" என்று கேட்கத் தோன்றுகிறது அடியேனுக்கு. 

பயன்.....

"சாமிகளே ரெண்டு மூனுன்னு கல்யாணம் கட்டிக்குதுக. அற்ப மனுசப் பிறவிகளான நாமும் அப்படிக் கட்டிக்கிறதில் தப்பென்ன?"ன்னு ஒருத்தன் கேட்பான்.

"நான் நாலு கட்டிக்குவேன்"னு இன்னொருத்தன் அடம்பிடிப்பான். வசதியுள்ளவன் எத்தனையும் கட்டிக்கலாம்னு வேறொருத்தன் வாதம் பண்ணுவான்.

நாம் ஆச்சரியப்பட்டுக் கேட்க நினைப்பது.....

ஊடல் கதைகளையெல்லாம் உற்சவம் ஆக்குகிறவர்கள், விரும்பத்தகாத 'ஒரு மாதிரி'யான புராணக்  கதைகளுக்கும் உற்சவம் நடத்திப் புத்துயிர் ஊட்டுவார்களோ?

'நந்தனார் கதை'[சைவ சமயக் கதை] போல, பக்தியைப் போதித்து, ஓரளவுக்கேனும் பகுத்தறிவையும் வளர்க்கிற கதைகளே புராணங்களில் இல்லையா?

தேடிக் கண்டறிந்து, உரிய முறையில் வடிவமைத்து விழா எடுக்கலாமே?

இப்படிக் கேள்விக் கணைகளைத் தொடுத்தால், "நீ நாத்திகன். இது விசயத்தில் தலையிட உனக்கு யோக்கியதை இல்லை" என்று கடுமையாகச் சாடுவதோடு, "இஸ்லாம் மதத்தில் இம்மாதிரிக் கதைகள் இல்லையா? கிறித்தவ மதத்தில் இல்லையா? அவர்களிடம் கேள்வி கேட்கும் துணிச்சல் உனக்கு ஏன் இல்லை?" என்று எதிர்க்கணை தொடுப்பார்கள்.

நம் பதில்.....

"நீங்கள் செய்யும் தவறுகளால் பாதிக்கப்படுபவர்கள், இப்போதும் இந்துக்களாக இருக்கிற எம்போன்றவர்களின் வாரிசுகளும் சொந்தபந்தங்களும்தான். எனவே, நீங்கள் முதலில் திருந்துங்கள். அவர்கள் தவறு செய்தால் திருத்துவதற்கு அவர்களுக்குள்ளேயே ஆட்கள் தோன்றுவார்கள்" என்பதுதான்.

வியாழன், 20 ஜனவரி, 2022

இவர்கள் 'அண்ட'ப் புளுகர்கள்!!!

அண்டம் என்றால் வானம் அல்லது, ஆகாயம் என்று பொருள்.

'நல்ல நேரம்', கெட்ட நேரம்' போன்றவற்றோடு நம் மக்களின் எதிர்காலம் பற்றியும் ஜோதிடர்கள் துல்லியமாகக் கணித்துச் சொல்கிறார்கள் என்று காலங்காலமாய் நம்பப்படுகிறது.

இந்த ஜோதிடர்கள், அண்டத்தில் உலவும் கோள்களின் நிலைப்பாட்டை வைத்துத்தான் பலன்களைக் கணிப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்கிற 09 கோள்களில் 'சூரியன்' ஒரு கோள் அல்ல; நட்சத்திரம்தான் என்று அறிவியல் படித்தவர்கள் சுட்டிக்காட்டியதை இவர்கள் அலட்சியம் செய்தார்கள். 

சூரியன் ஒரு நட்சத்திரமோ கிரகமோ, அதையும் கணக்கில் கொண்டுதான் முன்னோர்கள் பலன்களைக் கணித்தார்கள் என்று சமாளித்தார்கள். ஜோதிடப் பித்தர்களும் கண்டுகொள்ளவில்லை.

இவர்களின் பட்டியலில் ராகு, கேது என்னும் பெயர்களில் இரண்டு பாம்புக் கிரகங்களையும் சேர்த்துள்ளார்கள்.

அப்படியான இரண்டு கோள்கள் அண்டத்திலேயே இல்லை என்று அறிந்தவர்கள் சொன்னபோது, அவை நிழல் கிரகங்கள் என்று மழுப்பினார்கள்.

இவர்கள் சொல்வது போல் நிழல் கிரகங்கள் அண்டத்தில் உலவுகின்றனவா என்னும் கேள்விக்கு, அழுத்தம் திருத்தமாக அறிவியலாளர் சொல்லும் பதில்.....

//அமாவாசை தினத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில், ஒரு நேர்க்கோட்டில் சந்திரன் சஞ்சரிப்பதால் சூரியன் மறைக்கப்படுகிறது. வேறு எந்தவொரு கோளும் அங்கே நிலைபெறவும் இல்லை; இயங்கிக்கொண்டிருக்கவும் இல்லை.

இதே போல, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்தால், பௌர்ணமி தினத்தன்று சந்திரன் மறைக்கப்படும். அவ்வளவுதான். 

மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளிலும், பாம்பு விழுங்குகிறது, துப்புகிறது[கிரகணம்] என்று கதையளப்பதற்கோ, நிழல் வடிவில் ஏதோ இரண்டு கோள்கள் சுற்றுகின்றன என்று புளுகுவதற்கோ வாய்ப்பே இல்லை//[கலைப்பித்தனின் 'அறிவியல் உண்மைகளும் அரிய செய்திகளும்', மணிவண்ணன் பதிப்பகம், சென்னை].

அறிவியல் ஆதாரங்களுக்கிணங்க, 09 கோள்கள் இருப்பதாகச் சொல்லி, 06 கோள்களை[சூரியன், ராகு, கேது ஆகியவை நீங்கலாக] மட்டும் கணக்கில் கொண்டு பலன்களைக் கணிப்பதாகச் சொல்வது ஏமாற்று வேலை ஆகும்.

படிப்பறிவு உள்ளவர்களாயினும் இல்லாதவர்களாயினும் ஜோதிடப் பொய்யர்களை நம்பிப் பணத்தை இழப்பதோடு, அறிவையும் முடமாக்குபவர்கள் இங்கு நிறையவே இருக்கிறார்கள். இவர்கள் திருந்துவது எப்போது?

இவர்களைத் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எப்போதேனும் மேற்கொள்ளுமா?

எளிதில் விடை காண இயலாத கேள்விகள் இவை.