ஞாயிறு, 23 ஜனவரி, 2022

இந்துமத அழிவிற்கு இனி எதிரிகள் தேவையில்லை!!!

#இந்துக் கோவில்கள் பலவற்றிலும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்திருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே[எனக்குத் தெரியாதய்யா!]. அப்படி நீங்கள் கொஞ்சமும் யோசித்துப் பார்க்காத மர்மம் நிறைந்த கோவிலான கேதரேஸ்வரர் குகைக் கோவில் பற்றித்தான் இங்குப் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு சிவன் கோவிலுக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலே இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் ஹரிஷ் சந்திரேஸ்வரர் சிவன் கோவில். இந்த கோவிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நிறைந்திருக்கின்றன.

இந்த மர்மங்கள் நிறைந்த குகைக் கோயில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது; ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி என்னும் மன்னனால் கட்டப்பட்டது. இந்தக் கோவில் மட்டுமல்ல, இதற்கு மிக அருகிலேயே கேதாரேஸ்வரர் என்னும் அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த குகை ஒன்று இருக்கிறது.

இந்தக் குகை மற்றக் குகைகளைப் போல அல்ல; தண்ணீர் நிறைய இருக்கும். அந்த நீருக்கு நடுவே ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒரு சிவலிங்கம் வீற்றிருக்கிறது. இந்த லிங்கத்தைச் சுற்றியிருக்கிற தண்ணீர் ஐஸ் கட்டியைப் போல மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இந்தத் தண்ணீரின் குளிரைத் தாண்டி சிவலிங்கத்தின் அருகில் சென்று வணங்குவது கொஞ்சம் கடினமான விஷயம்தான். குறிப்பாக, மழைக்காலங்களில் எல்லாம் இந்த குகைக் கோவிலுக்குள் செல்வது பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

இந்தக் குகைக்குள் இருக்கிற சிவலிங்கத்தைச் சுற்றி நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களைக் குறிக்கிறதாம்.

சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்னும் நான்கின் அடையாளமாகத்தான் இந்த நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு யுகம் முடிவடையும்போதும், ஒவ்வொரு தூணாகக் கீழே விழும் என்பதுதான் நியதியாகும். அதன்படி ஏற்கனவே மூன்று தூண்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் விழுந்துவிட்டனவாம். இன்னும் ஒரே ஒரு தூண் மட்டுமே மிச்சமிருக்கிறது. இந்த நான்காம் தூண்தான் கலியுகத்தைக் குறிக்கும் தூணாம். இந்தத் தூண்தான் இந்தப் பிரபஞ்சத்தையே தாங்கிக் கொண்டிருக்கிறதாம். இந்தத் தூண் விழும் நாள்தான் கலியுகத்தின் கடைசி நாளாக இருக்குமாம். அதாவது உலகம் அழியும் நாள்[https://tamil.samayam.com/religion/temples/kaliyuga-suspense-the-mysterious-kedareshwar-cave-temple-in-tamil/articleshow/72477236.cms?story=2]#

                                      *   *   *   *   *

ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மண்டபத்தின் தூண்கள் காலப்போக்கில் சிதைந்து அழிந்துவிடுவது என்பது இயற்கையான நிகழ்வு. இந்த நியதியின்படிதான் மூன்று தூண்கள் உடைந்து சிதறியிருக்கின்றன.

நான்காவது தூணின் நிலைப்பாட்டைப் பழம்பொருட்கள் குறித்த அறிவியல் ஆய்வாளர்களால் மிக எளிதில் கணித்துவிட முடியும். கலியுகம் முடியும்போது உடையும் என்பது அப்பட்டமான பொய்.

இந்தச் சிதைந்த தூண்களைப் படம் பிடித்துப் பதிவு செய்து ஊடகச் செய்தியாக்கியதோடு, நான்காவது தூண்தான் பிரபஞ்சத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறது என்று 'புருடா' விடுவது பொறுத்துக்கொள்ளவே இயலாத பொல்லாங்குத்தனம்.

இந்துமதத்தை அழித்தொழிப்பதற்கு எதிரிகள் வேண்டாம். அதைச் செய்வதற்குத்தான், வரிந்துகட்டிக்கொண்டு இம்மாதிரியான பல கும்பல்கள்  களமிறங்கியிருக்கின்றன.

கலியுக முடிவில் எஞ்சியிருக்கும் இந்த ஒற்றைத் தூண் தானாக உடைவது இருக்கட்டும், தற்செயலாக இடிமின்னல் தாக்கியோ, நிலநடுக்கம் காரணமாகவோ இந்தத் தூண் உடைந்து நொறுங்கி விழுந்தாலும் இந்த உலகம் அழியுமா?

ஏற்கனவே, சொன்னதைத்தான் மீண்டும் சொல்கிறோம், உடம்புக்கு ஊறு விளைவிப்பவர்கள் மட்டுமல்ல,  மனதுக்கு ஊறு விளைவிப்பவர்களும் தண்டிக்கப்படுதற்குரிய குற்றவாளிகளே.

இம்மாதிரிப் பொய்க் கதைகளை இட்டுக்கட்டுபவர்கள் மீதும், பகிர்பவர்கள் மீதும், பரப்புபவர்கள் மீதும் நாட்டை ஆளுகிறவர்கள் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?

மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்!

==========================================================================


சனி, 22 ஜனவரி, 2022

கை மேல் பலன்![பக்திக் கதை]

கொரோனா இரண்டாம் அலையின் தொடக்கத்தில் குமரேசனுக்குக் கொரோனா தொற்றியது. கோவை மருத்துவமனை ஒன்றில் பத்து நாட்கள் சிகிச்சை பெற்றுத் திரும்பினான்.

நாடெங்கும் தொற்றின் வேகம் குறைந்த நிலையில், அவன் மனைவி அன்புமலர், "நீங்க சீக்கிரம் குணமாகித் திரும்பணும்னு நம் குலதெய்வத்தை நேர்ந்துகிட்டேன். நாளை கோயிலுக்குப் போய், நேர்ந்துகிட்டபடி உண்டியலில் ஆயிரம் ரூபாய் போட்டுட்டு வந்துடலாம். இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லேன்னாலும் எனக்காக வரணும்" என்றாள்.

"வர்றேன். அதுக்கு முன்னாடி உங்கிட்டே கொஞ்சம் பேசணும்."

"நேர்த்திக்கடன் விசயமாத்தானே? பேசுங்க." -சிக்கனமாய்க் கொஞ்சம் சிரிப்பை உதிர்த்துவிட்டுக் கணவனின் முகம் பார்த்துக் காத்திருந்தாள் அன்புமலர்.

"நாம் உண்டியலில் காணிக்கை செலுத்தும் விவரம் சாமிக்குப் போய்ச் சேரும்னு நினைக்கிறியா?"

"எல்லாம் நம்பிக்கைதான். எந்த அடிப்படையில் நீ நம்புறேன்னு கேட்டா எனக்குப் பதில் சொல்லத் தெரியாது."

"சாமிக்காக உண்டியலில் போடுற ரூபாயை மனுசங்கதான் எண்ணி எடுத்துட்டுப் போய் வங்கியில் போடுறாங்க. சில பணக்காரச் சாமி கோயில்களில், பக்தர்களுக்கு உணவு கொடுக்கிறது, மருத்துவமனை கட்டியோ கல்வி நிறுவனங்களை உருவாக்கியோ மக்களுக்கு உதவி செய்யுறதுன்னு நல்ல காரியங்களும் செய்யுறாங்க. இதைச் செய்யுறவங்க, அவ்வளவு உண்டியல் பணத்தையும் நல்ல வழியில்தான் செலவு பண்ணுறாங்கன்னு எப்படி நம்புறது? தப்பான வழிகளில் செலவு பண்ணுற சுயநலவாதிகளும் இருக்கலாம் இல்லையா?" -கேட்டான் குமரேசன்.

"இருக்கலாம். நல்லதே நடக்கும்கிற நம்பிக்கையில்தான் உண்டியலில் பணம் போடுறோம்" என்றாள் அன்புமலர்.

"இந்த நம்பிக்கைதான் பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரியங்களையும் செய்யத் தூண்டுது. அதிருக்கட்டும். ஏழைபாழைகளுக்குத் தர்மம் பண்ணினா புண்ணியம் கிடைக்கும்கிறதும் இப்படியான ஒரு நம்பிக்கைதான். நீ நம்புறியா?"

"நம்புறேங்க."

"சாமியைக் கும்பிடுறதால கிடைக்கிற புண்ணியம், பார்வையிழப்பு, கைகால் முடக்கம், நிராதரவான நிலை, முதுமை போன்ற காரணங்களால் பிச்சை எடுக்கிறவங்களுக்கு உதவுறதாலயும் கிடைக்கும்னு சொல்லலாமா?"

"தாராளமா."

"நல்லது. நாம் நினக்கிற மாதிரியான பிச்சைக்காரங்களைத் தேடிக் கண்டுபிடிச்சி, இந்த ஆயிரம் ரூபாயைப் பகிர்ந்து கொடுத்தா 'மவராசர் நீங்க நல்லா இருக்கணும்'னோ, 'தீர்க்காயுசா இருங்கோ'ன்னோ, 'உங்க தலைமுறை தழைக்கட்டும்'னோ மனசார வாழ்த்துவாங்க. இம்மாதிரியான வாழ்த்தை நாம் காதாரக் கேட்போம்; வாழ்த்துறவங்களைக் கண்ணாரப் பார்ப்போம்.....

.....இப்படிக் கேட்டும் பார்த்தும் அடையுற சந்தோசம் உண்டியலில் பணம் போடுறதில் கிடைக்காது. நேர்ந்துகொண்டபடி உண்டியலில் பணம் போடலைன்னு சாமி கோபித்துக்கொள்ளாது. அதனால....."

குறுக்கிட்ட அன்புமலர், "நல்ல யோசனை. நாளைக்கே நடத்தி முடிச்சுடுவோம்" என்றாள். அவள் மனப்பூர்வமாகத்தான் இப்படிச் சொன்னாள் என்பதை அவளின் முகத்தில் பரவியிருந்த மலர்ச்சி உறுதிப்படுத்தியது.

==========================================================================