திங்கள், 24 ஜனவரி, 2022

காலஞ்சென்ற 'கடவுள்' புட்டப்பர்த்தி சத்திய சாயிபாபா!!!

சராசரி மனிதர்களைப் போலவே, உண்டு உறங்கி வாழும் சாதாரண மனிதர்கள் மகான்கள் ஆக்கப்பட்டுக் கடவுள் எனப்படுபவருக்கு இணையாகப் போற்றி வழிபடப்படும் அதிசயம் இந்த மண்ணில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது[தன்னலமற்ற பொதுப்பணிகளால் சிறந்த மனிதர்களாகப் போற்றப்படுவது வேறு].

இந்த அதிசயத்தை நிகழ்த்துபவர்கள், நம் மக்களில் பெரும்பான்மையினராக உள்ள பக்தர்கள்[இப்படியான ஒரு பக்தர் பரம்பரை உருவாகக் காரணமானவர்கள் யாரெல்லாம் என்பது குறித்த மிக நுணுக்கமானதும் விரிவானதும் ஆன  ஆய்வு மிகவும் தேவையான ஒன்று.]

இந்த நம் பக்தர்களைத் திருத்துவது, கடலில் பெருங்காயத்தைக் கரைத்துவிட்டு, அதன் வாசனையை நுகர முயற்சிப்பதற்கு ஒப்பானதாகும்.

உலக அளவில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்களால் கடவுளாகக் கொண்டாடப்பட்டவர் புட்டபர்த்தி சத்திய சாயிபாபா என்பவர். இவரின் சர்ச்சைக்குரிய வாழ்க்கையின் பொதுவான பல நிகழ்வுகளைப் பலரும் அறிந்திருக்கலாம். குறிப்பிடத்தக்க, கொஞ்சம் தகவல்கள் மட்டும் பக்தர்களின் சிந்தனைக்காகத் தொகுக்கப்பட்டுள்ளன.

                                           *   *   *   *   **

சத்ய சாய்பாபா மற்றும் இவரது ஆசிரமம் மீது பலமுறை எதிர்மறை விமர்சனங்களும், குற்றசாட்டுகளும் எழுந்துள்ளன. ஆசிரமத்தில் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டன என்ற புகார்களும் பதிவாகியுள்ளன.

*அக்டோபர் 20, 1940இல் தன் 14ஆவது வயதில், தன்னை ஷீர்டி சாய்பாபாவின் மறுபிறவி என அறிவித்துக் கொண்டார் சத்யநாராயண ராஜு என்னும் இயற்பெயர் கொண்ட புட்டப்பர்த்தி சாயிபாபா. அவ்வப்போது இதை நினைவுகூர்வது இவரின் வழக்கம்.

*மேஜிக் வேலைகள் செய்வதில் திறமை பெற்றவர் இவர். இதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

*இந்தியாவின் பழம்பெரும் மேஜிக் கலைஞரான பி.சி. சர்கார், "சத்யநாராயண ராஜுவும்[புட்டப்பர்த்தி சாயிபாபா]], நானும்  ஒன்றாகத்தான் மேஜிக் கற்றோம் என்றும் கூறியுள்ளார்.

*ஒரு புறம் சர்ச்சைகள் அதிகரித்தாலும், மறுபுறம் சமூக சேவைகளில் ஈடுபட ஆரம்பித்தார் சத்ய சாய்பாபா. முக்கியமாக, புட்டப்பர்த்திப் பொது மருத்தவமனையில் தொடங்கி, அதைச் சத்ய சாய் மருத்துவ ஆராய்ச்சி மையமாக வளர்த்து, ஒரு சிறந்த மருத்துவ உதவி செய்யும் மையமாக மாற்றினார் என்பது வியந்து பாராட்டத்தக்கது.

*84 வயதான சாயிபாபா உடல் நலக்குறைவு, மூச்சுத் திணறல் காரணமாக 'அருள்மிகு சத்தியசாயி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை'யில் 2011 மார்ச் 28ஆம் தேதி சேர்க்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். 

இவரது உயிர் பிழைப்பிற்காகப் பக்தர்கள் பிரார்த்தனைகள் செய்து வந்தனர். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையைக் கவனித்துவந்தனர். இந்நிலையில் 2011 ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை காலை இந்திய நேரம் 07:40 மணிக்கு இவரது உயிர் பிரிந்தது.

*இவர் இறந்த அன்று (ஏப்ரல் 24, 2011) பூட்டப்பட்ட இவரது தனியறையான 'யசுர் வேத மந்திரம்' சுமார் ஒன்றரை மாதங்கள் கழித்துச் சூன் 16, 2011 அன்று திறக்கப்பட்டது. அவ்வறையில் பெரும்பாலும் பணமும் நகையும் கணினிகளுமே இருந்தன. இவையனைத்தும் இவரது கல்வி அறக்கட்டளையில் பயிலும் மாணவர்களைக்கொண்டு தனியே கணக்கெடுத்துப் பிரிக்கப்பட்டுப் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டன.

உதவி:

Wikipedia, https://www.tamilvbc.com/?p=9115

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

இந்துமத அழிவிற்கு இனி எதிரிகள் தேவையில்லை!!!

#இந்துக் கோவில்கள் பலவற்றிலும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்திருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே[எனக்குத் தெரியாதய்யா!]. அப்படி நீங்கள் கொஞ்சமும் யோசித்துப் பார்க்காத மர்மம் நிறைந்த கோவிலான கேதரேஸ்வரர் குகைக் கோவில் பற்றித்தான் இங்குப் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு சிவன் கோவிலுக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலே இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் ஹரிஷ் சந்திரேஸ்வரர் சிவன் கோவில். இந்த கோவிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நிறைந்திருக்கின்றன.

இந்த மர்மங்கள் நிறைந்த குகைக் கோயில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது; ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி என்னும் மன்னனால் கட்டப்பட்டது. இந்தக் கோவில் மட்டுமல்ல, இதற்கு மிக அருகிலேயே கேதாரேஸ்வரர் என்னும் அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த குகை ஒன்று இருக்கிறது.

இந்தக் குகை மற்றக் குகைகளைப் போல அல்ல; தண்ணீர் நிறைய இருக்கும். அந்த நீருக்கு நடுவே ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒரு சிவலிங்கம் வீற்றிருக்கிறது. இந்த லிங்கத்தைச் சுற்றியிருக்கிற தண்ணீர் ஐஸ் கட்டியைப் போல மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இந்தத் தண்ணீரின் குளிரைத் தாண்டி சிவலிங்கத்தின் அருகில் சென்று வணங்குவது கொஞ்சம் கடினமான விஷயம்தான். குறிப்பாக, மழைக்காலங்களில் எல்லாம் இந்த குகைக் கோவிலுக்குள் செல்வது பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

இந்தக் குகைக்குள் இருக்கிற சிவலிங்கத்தைச் சுற்றி நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களைக் குறிக்கிறதாம்.

சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்னும் நான்கின் அடையாளமாகத்தான் இந்த நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு யுகம் முடிவடையும்போதும், ஒவ்வொரு தூணாகக் கீழே விழும் என்பதுதான் நியதியாகும். அதன்படி ஏற்கனவே மூன்று தூண்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் விழுந்துவிட்டனவாம். இன்னும் ஒரே ஒரு தூண் மட்டுமே மிச்சமிருக்கிறது. இந்த நான்காம் தூண்தான் கலியுகத்தைக் குறிக்கும் தூணாம். இந்தத் தூண்தான் இந்தப் பிரபஞ்சத்தையே தாங்கிக் கொண்டிருக்கிறதாம். இந்தத் தூண் விழும் நாள்தான் கலியுகத்தின் கடைசி நாளாக இருக்குமாம். அதாவது உலகம் அழியும் நாள்[https://tamil.samayam.com/religion/temples/kaliyuga-suspense-the-mysterious-kedareshwar-cave-temple-in-tamil/articleshow/72477236.cms?story=2]#

                                      *   *   *   *   *

ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மண்டபத்தின் தூண்கள் காலப்போக்கில் சிதைந்து அழிந்துவிடுவது என்பது இயற்கையான நிகழ்வு. இந்த நியதியின்படிதான் மூன்று தூண்கள் உடைந்து சிதறியிருக்கின்றன.

நான்காவது தூணின் நிலைப்பாட்டைப் பழம்பொருட்கள் குறித்த அறிவியல் ஆய்வாளர்களால் மிக எளிதில் கணித்துவிட முடியும். கலியுகம் முடியும்போது உடையும் என்பது அப்பட்டமான பொய்.

இந்தச் சிதைந்த தூண்களைப் படம் பிடித்துப் பதிவு செய்து ஊடகச் செய்தியாக்கியதோடு, நான்காவது தூண்தான் பிரபஞ்சத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறது என்று 'புருடா' விடுவது பொறுத்துக்கொள்ளவே இயலாத பொல்லாங்குத்தனம்.

இந்துமதத்தை அழித்தொழிப்பதற்கு எதிரிகள் வேண்டாம். அதைச் செய்வதற்குத்தான், வரிந்துகட்டிக்கொண்டு இம்மாதிரியான பல கும்பல்கள்  களமிறங்கியிருக்கின்றன.

கலியுக முடிவில் எஞ்சியிருக்கும் இந்த ஒற்றைத் தூண் தானாக உடைவது இருக்கட்டும், தற்செயலாக இடிமின்னல் தாக்கியோ, நிலநடுக்கம் காரணமாகவோ இந்தத் தூண் உடைந்து நொறுங்கி விழுந்தாலும் இந்த உலகம் அழியுமா?

ஏற்கனவே, சொன்னதைத்தான் மீண்டும் சொல்கிறோம், உடம்புக்கு ஊறு விளைவிப்பவர்கள் மட்டுமல்ல,  மனதுக்கு ஊறு விளைவிப்பவர்களும் தண்டிக்கப்படுதற்குரிய குற்றவாளிகளே.

இம்மாதிரிப் பொய்க் கதைகளை இட்டுக்கட்டுபவர்கள் மீதும், பகிர்பவர்கள் மீதும், பரப்புபவர்கள் மீதும் நாட்டை ஆளுகிறவர்கள் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?

மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்!

==========================================================================