செவ்வாய், 15 மார்ச், 2022

பெண்மணிகளும் 'பொன் அணி'களும் ஒன்றல்ல!

மனிதன் விலங்காக வாழ்ந்தவன். விலங்குகள் இன்றளவும் அம்மணமாகத் திரிவதுபோல், இவனும் அன்று அம்மணமாகத் திரிந்தவன்தான்.

ஆடைன்றித் திரிந்த காலங்களில், ஆண், இயற்கைச் சூழலுக்கு ஏற்பக் காம உணர்ச்சிக்கு ஆளான நேரங்களில் மட்டுமே  பெண்ணுடன் புணர்ச்சி செய்தான்; கண்ட கண்ட நேரங்களில் எல்லாம் உடலுறவில் ஈடுபடவில்லை.

மனிதன் ஆறறிவாளனாக ஆகும்வரை இந்நிலையே நீடித்தது. 

முழுமையான விலங்கு நிலையிலிருந்து விடுபட்டு, சற்றே சிந்தித்து வாழும் நிலை உருவானபோது, இரவு பகல் என்றில்லாமல், எப்போது வேண்டுமானாலும் உணர்ச்சி தூண்டப்படுவதைத் தவிர்க்க, அந்தரங்க உறுப்புகளை மறைக்க ஆரம்பித்தான். அப்போதைக்கு இலைதழைகளும், விலங்குகளின் தோல்களும்  அதற்குப் பயன்பட்டன. 

பின்னர், இவன் பருத்தி முதலான பொருள்களைக் கொண்டு ஆடை தயாரித்து உடுத்தலானான். இதற்கான முக்கியக் காரணம் மாறிக்கொண்டே இருந்த தட்பவெப்பம்தான். 

உடம்பைப் பாதுகாக்க ஆடை உடுத்துவதான இந்தப் பழக்கம் பின்னர் ஒரு நாகரிகமாகவும் ஆகிப்போனது.

இந்த நாகரிகம்.....

அரைகுறை ஆடையுடன் பெண்ணைப் படம்பிடித்து வலைத்தளங்களில் பரப்புதல், ஆபாசமாக உடை உடுத்தச் செய்து திரைப்படத்தில் நடிக்கச் செய்தல் என்றெல்லாம் கொச்சைப்படுத்தப்பட்டது. இதனால், பாதுகாப்பற்ற சூழலில் உள்ள பெண்களைக் கடத்தி வன்புணர்வு செய்தல் அடிக்கடி நிகழ்ந்தது.

இந்த அநாகரிகமானதும், ஆபத்தானதுமான சமூகச் சூழலில், பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்ல நேரிடும்போது, முழு உடம்பையும் மறைக்கும் வகையில் ஆடை ஆணிதல் வேண்டும் என்று வழிப்படுத்தப்பட்டார்கள். இது பாராட்டத்தக்க வழிமுறை அல்ல என்றே தோன்றுகிறது.

ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால், இந்த அறிவியல் யுகத்தில் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது.

தற்காப்புக்கென்று பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெண்கள் காவல்துறையில் சிறப்பாகப் பணி செய்து தாங்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ராணுவத்தில் சேர்ந்து எதிரிகளுடன் போரிடும் அளவுக்கு நெஞ்சுரம் கொண்டவர்களாக விளங்குகிறார்கள். எனவே.....

கவர்ச்சிக்காக அல்லாமல், மரியாதைக்குரிய வகையில் ஆடை உடுத்தும் முறையையும், தற்காப்புப் கலையையும் கற்றுத் தருவதோடு, அவர்கள் கைவசம் சிறு கத்தியுடன்[காந்தியடிகள் சொன்னது] வெளியே செல்வதை வழக்கப்படுத்தலாம்.

மறைத்து வைத்துப் பாதுகாப்பதற்குப் பெண்கள் பொன்னால் ஆன நகைகளைப் போன்றவர்கள் அல்ல; ஆண்களுக்குச் சமமாக வாழ்வதற்கான முழு உரிமையைப் பெற்றவர்கள் என்பதை எவரும் மறத்தல் கூடாது..... கூடவே கூடாது.

திங்கள், 14 மார்ச், 2022

சில ஆதிக்க வெறியர்களின் அந்திமக்காலங்கள்!!!

?!?!?! Zee News 13 hours ago: 'Russian President Vladimir Putin may be suffering from a brain disorder caused by dementia, Parkinson`s disease, or `roid rage` resulting from steroid treatment for cancer, a media report said citing intelligence sources.'[14.03.2022 நண்பகல் 13.00 மணிக்கு இணைக்கப்பட்ட செய்தி இது].
*   *   *   *   *
முன்னறிவிப்பு:

ரஷ்ய அதிபர் புடினுக்கும் இந்தப் பதிவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.

பதிவில் உள்ள தகவல்கள் பலரும் அறிந்தவையே. நினைவுகூர்தல் நிமித்தம் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

                                          *   *   *   *   *

*ஆங்கிலேயர்கள் ஆர்செனிக் நச்சு தந்து நெப்போலியனைக்(1787-1799) கொன்றிருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், அவன் இறந்தது இரைப்பைப் புற்று நோயால்(stomach cancer) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவன் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால்தான் எனவும் நம்பப்படுகிறது.

*இத்தாலிய அரசைப் பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை நடத்தியவர் முசோலினி. ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின்போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றார். ஏப்ரல் 1945இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிக்கப்பட்டு, பின் அவரும் அவர் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவரின் உடல் மிலானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

*ஹிட்லரும்(ஆட்சிக்காலம்:1933-45] அவரது மனைவியும் தற்கொலை செய்துகொண்டனர். ஹிட்லரின் கொள்கைகள் மற்றும் ஆணைகள் 40 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்தியது என்பது நியைவுகூரத்தக்கது.

*ஆறடி நாலங்குல உயரமும், 135 கிலோ எடையும் கொண்ட இடி அமீன்[1924 2003]உலகின் அதிபயங்கரக் கொடுங்கோலர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.

எட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்த அவர், அவர் ஆட்சியைக் கைப்பற்றிய அதே பாணியிலேயே அதிகாரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். முதலில் லிபியாவிலும் பின்னர் செளதி அரேபியாவிலும் அடைக்கலம் புகுந்தார். சரித்திரமே காணாத அளவுக்குக் கொடூரங்களை நிகழ்த்திய இடி அமீன் 2003ஆம் ஆண்டு தனது 78ஆம் வயதில் செளதி அரேபியாவில் இறந்தார்.

*சிலி நாட்டின் சர்வாதிகாரியும் கொடுங்கோல் ஆட்சியாளருமான அகஸ்டோ பினொசெட் 2006இல் இறந்தார். அவரை இயக்கியதாகக் கூறப்படும் அவரின் மனைவி 2021இல் காலமானபோது சிலி மக்கள் தெருக்களில் குவிந்து அவரின் மரணத்தைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

==========================================================================

***தகவல்கள், வேறு வேறு இணையத் தளங்களிலிருந்து திரட்டப்பட்டவை.

***முகப்புப் படம்: புடின் தன் பெற்றோருடன். நன்றி: விகடன்