புதன், 23 மார்ச், 2022

நிறையாத வயிறுகளும் நிறைவேறாத காதல்களும்!

 "மலர்....." -அழைத்தான் பக்கவாட்டு இருக்கையிலிருந்த இளங்குமரன்.

"சொல்லுங்க குமரன்" -கணினியை நோட்டமிட்டவாறே சொன்னாள் மலர்.

"டீ குடிச்சிட்டு வருவோம், வா" என்றான் அவன். 

"எனக்குத் தேனீர் குடிக்கிற பழக்கம் இல்லைன்னு உங்களுக்குத் தெரியும்தானே?"

"இன்னிக்கி ஒரு நாள் மட்டும்... எனக்காக."

"உங்களுக்காகவா?....." -சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்த மலர், பக்கவாட்டில் பார்த்தாள். புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தான் இளங்குமரன். 

அவள் எழுந்தாள்.

இருவரும் இணைந்து நடந்தார்கள்.

சிற்றுண்டிச்சாலையை அடைந்ததும் அருகருகே இருந்த இருக்கைகளில் அமர்ந்தார்கள். 

பணியாளரிடம் சொல்லி இரண்டு தேனீர் வரவழைத்தான் அவன்.

"என்கிட்டே ரகசியமா ஏதோ சொல்ல நினைக்கிறீங்க. அதைப் புரிஞ்சிட்டுத்தான் நீங்க கூப்பிட்டவுடன் கேள்வி கேட்காம கிளம்பி வந்தேன். சொல்லுங்க குமரன்." - மலரின் முகத்தில் மெலிதான புன்னகையும் சந்தேக ரேகைகளும் இழையோடின.

"வந்து மலர்... அது வந்து..."

"விசயத்துக்கு வாங்க."

"உன்னை நான் காதலிக்கிறேன்; கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்."

அவனின் இந்த விருப்பத்தை ஏற்கனவே அனுமானித்திருந்த மலரின் முகத்தில் சலனம் ஏதுமில்லை. உணர்ச்சியற்ற தொனியில் பேசத் தொடங்கினாள். "என் அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள். பரம்பரைக் கூலிகள்னும் சொல்லலாம்....."

குறுக்கிட்டான் இளங்குமரன், "அதெல்லாம் எனக்குப் பொருட்டல்ல மலர். ஆறு மாசப் பழக்கத்தில் உன்னை முழுசாப் புரிஞ்சிட்டிருக்கேன். நீ சம்மதிச்சா....."

'நான் சொல்லுறதை முழுசா கேட்டுக்குங்க" என்று இடைமறித்த மலர், தொடர்ந்து பேசினாள்: "எங்க பரம்பரையே விவசாயக் கூலிகள்னு சொன்னேன் இல்லையா? இன்னும் சொல்லுறேன். படிப்பறிவில்லாத என் அப்பாவும் அம்மாவும், ஊர் சுத்திப் பார்க்குறது,  சினிமா போறது, ஆசைப்பட்டபடி எல்லாம் உடை உடுத்துறதுன்னு சராசரி மனுசங்களுக்கான எந்தவொரு சந்தோசத்தையும் அனுபவிச்சதில்ல.  சரியாச் சாப்பிட்டும் சாப்பிடாமையும் வந்த வருமானத்தை மிச்சப்படுத்தி என்னைப் படிக்க வைச்சாங்க....."

குரலில் லேசான பதற்றம் தொற்றிக்கொள்ளவே, சற்று நேரம் பேசுவதை நிறுத்திய அவள், "நான் வேலைக்குச் சேர்ந்து ஆறு மாசம் ஆகுது. இந்த ஆறு மாசமாத்தான்  என்னைப் பெத்தவங்க வயிறு நிறையவும் வாய்க்கு ருசியாகவும் சாப்பிடுறாங்க. இனியும் அது தொடரணும். கவுரவமா உடை உடுத்தணும்; தினமும் தொலைக்காட்சி பார்க்கணும்; நல்ல சினிமாப் படம் வந்தா போய்ப் பார்க்கணும்; வருசத்தில் ஒரு தடவையாவது சுற்றுலாப் போகணும்" என்றாள்;  கோப்பையிலிருந்த தேனீரை உறிஞ்சிச் சுவைக்க ஆரம்பித்தாள்.

அவள் பருகி முடிக்கும்வரை காத்திருந்த இளங்குமரன் சொன்னான்: "இதுக்கெல்லாம் நம் திருமணம் ஒரு தடையாக இருக்காது மலர்."

"இருக்காதுன்னு இப்போ நீங்க சொல்லுறீங்க. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு கணவனாகவும் இப்படி உங்களால சொல்ல முடியுமா குமரன்? முடியுமோ முடியாதோ, சிக்கலில் மாட்டிக்க நான் விரும்பல. எனக்கு இப்போ இருபத்தி நாலு வயசு ஆகுது. இத்தனை வருசமும் என்னைப் பெத்தவங்க எனக்காகவே வாழ்ந்திருக்காங்க. இருபத்தி நாலு வருசம் இல்லேன்னாலும், ஒரு நாலு வருசமாவது அவங்களுக்காக மட்டுமே நான் வாழ விரும்புறேன். அதனால....."

-சொல்லி நிறுத்தி, இளங்குமரனின் முகத்தை உற்றுநோக்கியவாறு சொன்னாள் மலர்: "நாலு வருசம் போகட்டும். அப்போ உங்களுக்குக் கல்யாணம் ஆகாம இருந்தா, 'நான் உன்னைக் காதல் கல்யாணம் செய்துக்க விரும்புறேன். உனக்குச் சம்மதமா'ன்னு கேளுங்க, பதில் சொல்லுறேன்."

சட்டென அவள் மீதான தன் பார்வையைத் திசை திருப்பினான் இளங்குமரன்; தேனீருக்குக்கான பணத்தைக் கொடுக்கக் கல்லாவை நோக்கி நடந்தான்.

அவனுக்காகக் காத்திராமல் விரைந்து நடந்து தன் இருக்கையை அடைந்தாள் மலர்!

திங்கள், 21 மார்ச், 2022

சிற்றின்ப நுகர்வுக்கா சிறுமியர்கள்!? மரித்ததா 'மனிதப் பாசம்'!?!?

காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டு கூத்தடிக்கும் கும்பல்கள்; கடவுளே கதி என்று விழாக்கள், விசேடப் பூஜைகள் என்று காலம் கழிக்கும் பக்தக் கோடிகள்; பக்தர்களின் பக்கப்பலத்தோடு கற்பனைக் கடவுள்களைக் காப்பாற்றக் கதைப்பதையே தொழிலாகக் கொண்ட மதவாதிகள்; இன்னும், அரசியலில் ஆதிக்கம் செலுத்துவோர், ஆன்மிகம் பரப்புவோர், அறிவியல் வளர்ப்போர் என்று வகை வகையான மனிதத் தொகுப்புகளின் வாழ்விடமாக உள்ளது இந்த மண்ணுலகம். 

இங்கு வாழ்வோர் அத்தனைப் பேரும் மனிதர்கள்தான். இவர்களில் 'மனிதப் பாசம்' உள்ளவர்கள் எத்தனைப் பேர்?

இவர்கள் பெரும்பாலானவர்களாக இருந்து, பிள்ளைப்பாசம் உள்ளவர்களாகவும் இருந்திருந்தால்  சிறார் விபச்சாரம் முளைவிட்டிருக்குமா? நாளும் பொழுதுமாக வளர்ந்துகொண்டிருக்குமா? கற்பனை செய்ய இயலாத அளவுக்குப் பால்மணம் மாறாத சிறுமிகள்  சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் அக்கிரமம் தொடர்ந்துகொண்டிருக்குமா?

கேள்வி கேட்கத் தெரிகிறது நமக்கு. பதில் தெரிவதில்லை. நம்மால் முடிந்தது சில சொட்டுக் கண்ணீரை அவர்களுக்குக் காணிக்கையாக்கிச் சில நிமிடத் துக்கம் அனுசரிப்பது மட்டுமே.

வாசிப்பைத் தொடருங்கள்.

'சிறார் விபச்சாரம்':

*தாய்லாந்தில் 12 வயதிற்குட்பட்டோரின் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களின் எண்ணிக்கை 6 லட்சம். 18 வயதிற்குட்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடி என்று வைத்தாலும் விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்போர் அதில் 10 விழுக்காடு[%]. குழந்தை விபச்சாரத்தின் சொர்க்கமான தாய்லாந்தில் 3 லட்சம் குழந்தைகளுக்கு எயிட்ஸ்! 

*ஆர்மைன் என்ற தாய்லாந்து சிறுமி விபச்சாரத்தில் தள்ளப்படும்போது அவளுக்கு வயது 12; பருவத்திற்குக்கூட வரவில்லை. கடற்கரையோர உணவு விடுதியில் நல்ல வேலை வாங்கித் தருகிறோம் என்று பொய் சொல்லி அவளது ஏழைப் பெற்றோரை ஏமாற்றி விபச்சாரத்திற்குப் பெயர் போன புக்கேட் நகரில் கொண்டுவந்து விற்றுவிட்டார்கள் விபச்சாரத் தரகர்கள். “ஒரு இரவிற்குக் குறைந்தது 3 பேர். எல்லோரும் அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள், ஐரோப்பியர்கள் தான்"என்கிறாள் ஆர்மைன். இரண்டு ஆண்டுகள் இந்த நகரத்தில் உழன்ற பின் அவளை மீட்டெடுத்தது காவல் துறை. ஆனால் அதற்குள் ஆர்மைன் எயிட்ஸ் நோயாளியாக ஆகிவிட்டாள்.

*புண்ணிய பூமியாம் இந்தியாவில் 4 லட்சம் சிறுவர் சிறுமிகள், பிலிபைன்ஸ் 60,000 பேர், பிரேசிலில் 2.5 லட்சம் பேர் என்று லட்சக்கணக்கில் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

*அநேகமாக எல்லா ஏழை நாடுகளும், முன்னால் சோசலிச நாடுகளும் ஐரோப்பிய அமெரிக்க காம வெறியர்களுக்கு விருந்துபடைக்கும் மையங்களாகவே உள்ளன.

*வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பி ஏமாந்து விபச்சாரத்தில் தள்ளபட்ட டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணின் போட்டியை பீஇபீ.சி தொலைக்காட்சி ஒளிபரப்பியது. "அவர்கள் என்னை அடித்தார்கள்; சூடுவைத்தார்கள்; பட்டினி போட்டார்கள். 5 நாட்களுக்கு மேல் என்னால் தாக்குபிடிக்க முடியவில்லை. கடைசியில் என் தன்மானத்தையும் கன்னித் தன்மையையும் வெறும் 25 டாலருக்கு இழந்தேன் என்று கண்களில் நீர் வழியக் கூறினாள் அந்தப் பெண்.

*நேபாளத்திலிருந்து சிறுமிகளும், பெண்களுமாக ஆண்டுக்கு 7,000 பேர் பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதிக்கு இறக்குமதியாகிறார்களே, எப்படி? 

நேபாளத்திலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ஒரு 14 வயதுச் சிறுமியை பம்பாய் விபச்சார விடுதி ஒன்றில் வைத்து 3 வாரம் சித்திரவதை செய்தார்கள். அவள் எதிர்த்து நின்றாள். பிறகு ஓர் இருட்டறையில் அவளை ஓரு நல்ல பாம்புடன் சேர்த்து அடைத்தார்கள். அச்சத்தில் உறைந்து போனாள். இரண்டு நாட்கள் கழிந்தன. முன்றாம் நாள் இணங்கினாள்.

*"ருமேனியாவுக்குப் போனேன். கேட்பாரில்லாத பெண்கள் யாரென்று தேடினேன். அவர்களை விலை பேசி வாங்கினேன். பிறகு அவர்களை அழைத்து வந்து பெல்ஜியத்தில் விற்றுவிட்டேன். பிறகு அவர்கள் பல கைமாறினார்கள். எனினும், கேட்பதற்கு ஒரு நாதியும் கிடையாது. தொழில் ரொம்பச் சுலபம், ஒரு கிலோ ரொட்டியை விற்பது போலத்தான்” என்று தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தான் ஒரு கங்கேரிய விபச்சாரத் தரகன். 

*பாலுறவு என்றால் என்னவென்றே தெரியாத, அதற்குரிய பருவமும் வராத சிறுவர்களும், சிறுமிகளும் விபச்சாரத்திற்கு உட்படுத்துவதன் சமூக விளைவுகள் என்ன? 

சில ஆண்டுகள் இத்தகைய பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டபின் ஒருவேளை அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும்? வாழ்க்கை மதிப்பீடுகள் என்னவாக இருக்கும்? 

“திரும்பவும் எங்கள் நாட்டுக்குப் போய் என்ன செய்வது? குடும்பத்தோடு பட்டினி கிடப்பதா? ஆணாயிருந்தால் எவனையாவது கொலை செய்துவிட்டுப் பணம் திருடியிருப்பேன். பெண் என்பதால் விபச்சாரி ஆகிவிட்டேன்” என்றாள் பம்பாய் விடுதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட ஒரு நேபாளப்பெண்.

*மாஸ்கோ, பம்பாய் விபச்சார விடுதிகளிலிருந்து தமிழ் நாட்டுக்கு மீட்டுக் கொண்டவரப்பட்ட பெண்களில் சிலர் திரும்பவும் அங்கேயே சென்று விட விரும்பினர். காரணம் .....

“இந்த நகரத்திற்கு அந்த நரகமே மேல்" என்பது தான் அவர்களது பதில்.

*கடத்தப்படும் சிறுவர்கள் சிலர் ஓரினச் சேர்க்கைத் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள். சிறுமிகள், ரூ.75 ஆயிரத்துக்கு பாலியல் தொழில் நடத்துவோருக்கு 4 மாத ஒப்பந்தத்தில் விற்கப்படுகிறார்கள். பாலியல் தொழில் நடத்துவோர் சிறுமிகள் மூலம் ரூ.4 லட்சம்வரை சம்பாதிக்கிறார்கள்.

*ஆந்திரத்தில் இருந்து ஒராண்டுக்கு முன் புனேவுக்கு கடத்தப்பட்ட 11 வயது சிறுமி பல்வேறு பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார். அவர் கடைசியில் எய்ட்ஸ் நோயால் அண்மையில் இறந்துவிட்டார்” என்றார் ஆந்திரத்தின் ஆள் கடத்தல் தடுப்பு மைய அதிகாரி ஒருவர்.

*கர்நாடகத்தில் 2007ஆம் ஆண்டில் மட்டும் 2 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலுக்காக வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. இவர்களில் 25 சதவிகிதம் பேர் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆண்கள்.

நன்றி:

https://devapriyaji.wordpress.com/2009/11/27/881/