வியாழன், 31 மார்ச், 2022

மருட்டும் ஆன்மா! மதி மயங்கிச் சீரழியும் மனித இனம்!!

'ஆன்மா' என்று ஒன்று இருப்பது உண்மையானால், மனித இனம் தோன்றுவதற்கு முன்பு அவை எங்கே இருந்தன? 

எப்போது தோன்றின, அல்லது தோற்றுவிக்கப்பட்டன? 

அவை இருந்தது அல்லது, இருந்துகொண்டிருப்பது பூமியிலிருந்து எவ்வளவு தொலைவில்?

எவ்வாறு இயங்கின?... இயங்கிக்கொண்டிருக்கின்றன?

ஒட்டுமொத்த ஆன்மாக்களின் எண்ணிக்கை என்ன?

சென்றடைய வேண்டிய மனித உடம்புகளை ஆன்மாக்கள் தாமே தேர்வு செய்யுமா? 

 "ஆம்" எனில், தேர்வுக்குரிய வழிமுறைகள் யாவை?

ஆன்மாக்கள் தன்னிச்சையாய்ச் செயல்படுவது சாத்தியமா? 

'அல்ல' எனின், இவற்றைக் கண்காணித்து வழிநடத்துவது எது? எவை? யார்? யாரெல்லாம்?

ஆன்மாக்களுக்கு உருவம் இல்லை என்கிறார்கள். 'உருவமே இல்லாதது, நெருப்பில் அழியாதது; நீரில் கரையாதது' என்றெல்லாம் விவரிக்கப்படுவதுமான இவற்றின் இருப்பை எப்படிக் கண்டறிந்தார்கள்?

இவற்றிற்கு உருவம் இல்லையெனினும் ஆற்றலேனும் உண்டா?

அதை இவை எவ்வாறு பெறுகின்றன?

அணுக்களிலிருந்தா, நேரடியாகக் கடவுள் என்று சொல்லப்படுபவரிடமிருந்தா?

.....இவ்வாறாக, ஆன்மாக்கள் குறித்து முழுமையாக அறிந்திடத் தொடுக்கப்பட வேண்டிய கேள்விக் கணைகள் ஏராளமாக உள்ளன.

உண்மை நிலை இதுவாக இருக்க, மதவாதிகளும்,  மகான்கள் எனப்படுபவர்களும், 'அனைத்து மனித உடம்புகளுக்குள்ளும் ஆன்மாக்கள் உள்ளன. உடம்புகள் அழியும்போது அவை வெளியேறுகின்றன. மீண்டும் வேறு வேறு உடம்புக்குள் நுழைகின்றன' என்று  சொன்னார்கள்; சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

உரிய ஆதாரங்களை இவர்கள் ஒருபோதும் தந்ததில்லை.

இவர்களைத்தான் மனிதர்களில் பலரும் கடவுளுக்கு இணையாக வைத்துப் போற்றி வழிபடுகிறார்கள்.

இந்நாள்வரை, நம் மக்களில் சிலரேனும் மேற்கண்டவை போன்ற கேள்விகளை இவர்களிடம் கேட்டு உரிய விளக்கங்களைப் பெற்றதாகத் தெரியவில்லை. 

ஆனால்.....

மக்களில் பலரும் ஆன்மாக்களின் இருப்பை நம்புகிறார்கள் என்பதும், அதன் விளைவாகப் பல மூடநம்பிக்கைகளின் பிடியில் சிக்குண்டுச் சீரழிகிறார்கள் என்பதும் மனதை வருத்தும் மிகப் பெரிய அவலம் ஆகும்!

==========================================================================

***மிக முக்கியக் குறிப்பு:

இப்போதெல்லாம் என் பதிவுகள் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்படுவதில்லை. தவறுதலாக, அதன் இடுகைப் பட்டியலில் என் இடுகை இடம்பெற்றிருப்பின், அதைக் 'கிளிக்' செய்யாமல், நேரடியாக இந்த[https://kadavulinkadavul.blogspot.com] என் தளத்திற்கு வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

புதன், 30 மார்ச், 2022

கடவுளும் கந்தசாமியும் கடன்காரர்களும்[பாடம் புகட்டும் பகுத்தறிவுக் கதை]!!!

மிக முக்கியக் குறிப்பு:

தமிழ்ச்சரம் என் இடுகைகளை இணைத்துக்கொள்வதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. என்னுடைய விருப்பமும் இதுவே. ஏற்கனவே, பல மாதங்களுக்கு முன்பு, 'என் இடுகைகளை இணைக்க வேண்டாம்' என்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தும் அது கண்டுகொள்ளவில்லை[இணைப்பைத் துண்டிப்பதற்கான வழிமுறையும் எனக்குப் பிடிபடவில்லை]. எனவே.....

என் இடுகை, தவறுதலாகத் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்பட்டாலும், அதைச் சொடுக்கி, என் பதிவுகளை வாசிக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டாம் என்றும், என் தளத்திற்கே நேரடியாக வருகைபுரியுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி.

"கந்தசாமி, ஒரு தடவை அம்மன்  கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டுட்டு வாப்பா." - கந்தசாமியின் அம்மா பழனியம்மா சொன்னார்.

"வாழ்க்கையில் மனுசங்க  அனுபவிக்கிற சந்தோசங்களைக் காட்டிலும் படுகிற கஷ்டங்கள்தான் அதிகம். காலங்காலமா இதுதான் நடந்திட்டிருக்கு. கடவுளைக் கும்பிடுறதால இதுல எந்தவித மாறுதலும் உண்டாகல. இதை உங்ககிட்ட பல தடவை சொல்லியிருக்கேன்.  எனக்குச் சுத்தமா கடவுள் நம்பிக்கை கிடையாதுங்கிறதும் உங்களுக்குத் தெரியும். அப்புறம் எதுக்குக் கோயிலுக்குப் போ போன்னு கட்டாயப்படுத்துறீங்க?" -கொஞ்சமாய், செல்லக் கோபம் காட்டினான் கந்தசாமி.

"தொழிலில் நட்டம். வாங்கின கடனைத் திருப்பித் தர முடியல. உன் அப்பா தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டார். அவர் உயிர் வாழணும்; தொழிலும் நல்லா நடக்கணும். கோயிலுக்குப் போயி நீட்டிப் படுத்து அம்மனைக் கும்பிட்டா நல்லது நடக்கும்னு நான் நம்புறேன்பா. எனக்கு உடம்பு சரியில்லாததாலதான் உன்னைப் போகச் சொல்லுறேன்....."

சற்றே நிறுத்தி, கலங்கிய கண்களுடன் மகனை உற்று நோக்கிய பழனியம்மா, "பிடிவாதத்தைக் கைவிட்டுட்டுக் கிளம்புப்பா. உனக்காக வேண்டாம்; எனக்காகவும் அப்பாவுக்காகவும் இதைச் செய் கந்தசாமி" என்றார்.

மவுனமாக வெளியேறினான் கந்தசாமி.

அவன் வீடு திரும்பியதும், “கோயிலுக்குப் போனாயா?”  என்று வினவுவது போல் பார்த்தார் பழனியம்மா.

“கோயிலுக்குப் போகல. கடன் கொடுத்த எல்லாரையும் தேடிப் போனேன். ஒவ்வொருத்தர் காலிலும் விழுந்து கும்பிட்டேன். நமக்குக் கடன் கொடுத்தவங்க ரொம்ப நல்லவங்க. 'உன் அப்பாவைப் பத்தியும் உன்னைப் பத்தியும் எங்களுக்கு நல்லாவே தெரியும். வட்டியைத் தள்ளுபடி பண்ணிட்டு, அசலை மெதுவா சம்பாதிச்சுக் குடுங்க'ன்னு சொல்லிட்டாங்க” என்றான் கந்தசாமி.

அம்மா மவுனமாக நடந்து உள்ளறையிலிருந்த முருகன் படத்தின் முன்னே நின்று கைகூப்பினார்; தழுதழுத்த குரலில் ஏதோ சொல்லத் தொடங்கினார்.

விழிகளில் பாசம் பொங்கி வழிந்திட, பெற்ற தாயை உற்று நோக்கினான் கந்தசாமி; 'பாவம் அப்பாவி அம்மா' என்று மனதுக்குள் முணுமுணுத்தான்.