புதன், 20 ஜூலை, 2022

கழுதையும் கடவுளும் ஜக்கி வாசுதேவும்!!!

கேட்போருக்கும் புரியாமல், வாசிப்போருக்கும் புரியாமல், எதைப் பற்றிப் பேசுகிறார் என்பது அவருக்கும் புரியாமல் பேசிப் பேசிப் பேசியே மக்கள் மனங்களில் தானொரு மாபெரும் 'ஞானி' என்னும் மாய பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பவர், ஜகதீஸ் என்கிற ஜக்கி வாசுதேவ் என்பதைப் பலமுறை என் பதிவுகள் மூலம் வலியுறுத்தியிருக்கிறேன். 

அதை மேலும் உறுதிப்படுத்தவே இந்தப் பதிவு.

பேச்சோ எழுத்தோ எதுவானாலும், ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து அதை ஒட்டியே கருத்தைப் பதிவு செய்தல் வேண்டும் என்பது எழுத்துலக மரபு.

சத்குரு என்றுதனக்குத்தானே சூட்டிக்கொண்ட  பட்டத்தைப் பல்வேறு விமர்சனங்களுக்கிடையேயும் கைவிடாத 'விடாக்கண்டன்' ஜக்கி வாசுதேவ், 'பிரார்த்தனை' பற்றியதொரு கேள்விக்கு அளித்த பதில்[அடைப்பில் மஞ்சள் வண்ணத்தில் உள்ள விமர்சனங்கள் அடியேனுடையவை]:

#எதற்காகப் பிரார்த்தனை செய்கிறீர்கள்? கடவுளை அறிந்துகொள்வதற்காகவா? அதல்ல உங்கள் நோக்கம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் முட்டாள் இயந்திரமாக கடவுளை நினைத்திருக்கிறீர்கள்[கடவுளை ஒரு இயந்திரம், அதுவும் முட்டாள் இயந்திரம் என்று எவரும் சொன்னதில்லை. இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்து மக்களை இவர் முட்டாள்கள் ஆக்கும் குயுக்தியைக் கருத்தில் கொள்ளுங்கள்].

உங்கள் பிரார்த்தனைகள் வெறும் சடங்குகளாக இருக்கும்வரை, ஒரு கோடிமுறை செய்தாலும், அதனால் பலனில்லை. பிரார்த்தனை என்பது வெறும் சடங்காக நின்றுவிடாமல், உணர்வில் மலர வேண்டும்[என்று சொல்கிற இவர் ஆதியோகி என்னும் பெயரில் பெரிய சிலை எழுப்பி அதற்கும், அங்குள்ள லிங்கத்திற்கு தீபாராதனை காட்டிச் சடங்குகள் செய்வது யாரையெல்லாம் முட்டாள்களாக்க?!]. 

கடவுளை வழிபடு, கேட்டதைக் கொடுப்பார் என்று உங்களுக்கு மறுபடி மறுபடி சொல்லப்பட்டிருப்பதால், அவரிடம் கோரிக்கைகளை வைப்பதையே பிரார்த்தனை என்று நினைத்துவிட்டீர்கள். அச்சத்தினாலோ, ஆசையினாலோ வழிபடுவது, பிரார்த்தனை அல்ல[அச்சத்தினாலும் ஆசையினாலும் செய்வதுதான் பிரார்த்தனை. இதெலென்ன தவறு?]. அது வெறும் சடங்குதான். கடவுளுக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட கழுதையைக் காட்டி அதை வழிபட்டால்தான் உங்கள் துன்பங்கள் தீரும் என்றால், அதையும் சந்தோஷமாகச் செய்வீர்கள், அப்படித்தானே?[எதையெல்லாமோ தின்று ஜீரணித்து மலம் கழித்து வாழும் ஜக்கி 'சத்குரு'-கடவுள்களின் குரு- ஆகலாமென்றால் கழுதை கடவுள் ஆவதில் தவறேதும் இல்லை].

துக்கத்தில் இருப்பவர்களால் கடவுளைத் தரிசிக்க முடியாது. ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று உணர்ந்து கொள்ளுங்கள். அதன்பின் கடவுளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்![ஆனந்தமாக வாழ்பவனுக்குப் பிரார்த்தனையே தேவையில்லை. 'தலைப்பு, பிரார்த்தனை; கடவுளைப் புரிந்துகொள்வது பற்றியல்ல' -இவை உலகமகா ஞானிக்குப் புரியாமல் போனது ஏன்?!].

மேலும் பாவம், புண்ணியம், மூளை, மனம் பற்றியெல்லாம் உளறிக்கொட்டியிருக்கிறார் இந்தச் 'சத்து'க்குரு. விருப்பம் உள்ளவர்கள் முகவரியைச் சொடுக்கலாம். 

செவ்வாய், 19 ஜூலை, 2022

மரண பயத்தை வெல்வதற்கான மிக எளிய வழிகள்!!!

மரணம் குறித்த அச்சத்திலிருந்து விடுபடுவது அத்தனை எளிதல்ல.

அவரவர் போற்றி வழிபடும் கடவுளைச் சரணடைந்தால் அது சாத்தியமாகும் என்பதாக மகான்கள் எனப்படுபவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்று.

ஆனால், அப்படிக் கிஞ்சித்தும் அச்சத்திற்கு இடம்தராமல் மரணத்தை எதிர்கொண்ட மகான்களுக்கும், அவர்கள் சொல்லும் வழியைப் பின்பற்றி அதை வென்று வாழ்ந்தவர்களுக்குமான பட்டியல் எதுவும் வெளியானதாகத் தெரியவில்லை; அறிவியல் ரீதியான போதிய ஆதாரங்களும் இல்லை.

அவர்களின் நிலை எதுவாகவோ இருந்துவிட்டுப்போகட்டும், சராசரி மனிதர்களால் மரண பயத்துக்கு ஓரளவேனும் இடம் தராமல் வாழ்தல் சாத்தியமா என்பதே நம் கேள்வி.

ஆற்றில் நீந்தி விளையாடும் சிறார்களுடன் தன் பிள்ளையும் நீச்சலடிப்பதைக் கரையிலிருந்து வேடிக்கை பார்க்கும் ஒரு தாய், அது சுழலில் சிக்கி உயிர் பிழைக்கப் போராட நேர்ந்தால், கண்ணிமைப் பொழுதில் ஆற்றில் பாய்ந்து அதை மீட்க முயலுகிறாள்.

பிள்ளை அவளால் மீட்கப்படலாம். மாறாக, அதனுடன் சேர்ந்து அவளும் உயிரிழக்கலாம்.

தான் மூச்சுத் திணறி உயிரிழந்துகொண்டிருக்கும் அந்தக் கணங்களில் தன் பிள்ளையைப் பற்றிய கவலைதான் அவள் நெஞ்சில் நிறைந்திருக்குமே தவிர, தான் உயிரிழப்பது பற்றிய பயத்துக்கு அவள் ஆளாவதில்லை[பெற்ற குழந்தைகளைத் தவிக்கவிட்டுக் கள்ளக் காதலனுடன் ஓடிப்போகும் 'காமப் பிசாசுகள்' விதிவிலக்கு].

இது ஓர் உதாரணம்.

இந்தத் தாயைப் போலவே, தான் உயிருக்குராய் நேசிக்கிற உறவுகள் ஏதேனும் ஒரு காரணத்தால் உயிர் பிழைக்கப் போராடும்போது, தனக்குரிய உடலுறுப்புகள் மட்டுமல்லாது, உயிரையே தரத் தயங்காதவர்களும் இருக்கிறார்கள்.

எவ்வகையான தொடர்போ ஒட்டுறவோ இல்லாத ஒரு குழந்தை சாலையின் குறுக்கே சென்று விபத்துக்கு உள்ளாக நேரும்போது, இமைப் பொழுதும் தன் சாவைப் பற்றி நினையாமல் அதைக் காப்பாற்றுகிற கருணை உள்ளம் கொண்டவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இப்படி உற்றார் உறவினர் என்றில்லாமல், தம் இனத்துக்காகவும்,  நாட்டுக்காகவும் மரண பயத்தை அலட்சியப்படுத்தித் தம் உயிரைத் தியாகம் செய்தவர்கள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

ஆக, ஒவ்வொரு மனிதனும் குறைந்தபட்சம் உற்றார் உறவினர் மீதும், அண்டை அயலார் மீதும் மிக்க அன்பு செலுத்தி வாழ்வதும், மேலே குறிப்பிடப்பட்டவர்களைப் போன்ற, தியாக மனம் படைத்தவர்களை அவ்வப்போது நினைவுகூர்வதும் மரண பயத்தை வெல்வதற்கான ஆகச் சிறந்த வழிகள் எனலாம்[மரணம் இயற்கையானது என்பதை ஏற்கும் பக்குவம் இருந்தால், மரணத்தைத் தழுவும்போது பாசத்திற்கு உரியவர்களின் பிரிவை நினைந்து வருந்துவதும் குறையும்]. 

மரண பயத்தை முற்றிலுமாய் வெல்வது சாத்தியப்படாமல் போயினும், இறுதி நாள்வரை ஓரளவுக்கேனும் அதை மறந்து வாழ்வது இயலும் என்று நம்பலாம்!