சனி, 30 ஜூலை, 2022

நச்சுப் பாம்பை நாகதேவன் ஆக்கி வழிபடும் முழுமூடர்கள்!!!

'உலக அளவில், ஓர் ஆண்டில் பாம்புக் கடியால் இறப்பவர்கள் 1,50,000; இந்தியா 50,000; தமிழ்நாடு 10,000. உயிர் பிழைத்தாலும் பலருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்க இயலவில்லை.'

ஆக, உலகிலேயே பாம்புக் கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்குப் பல ஆயிரம்பேர் பாம்புக் கடிக்கு ஆளாகி 5,00,00க்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள் என்பதற்கும், அந்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கினர் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பதற்கும் பல ஆதாரங்கள் உள்ளன. 

இது விசயத்தில் தமிழர்கள் முன்னிலை வகிப்பதற்கான காரணம் என்ன?

இங்கு முட்டாள்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பதே.

இந்த நச்சுப் பாம்புக்கு இங்கே தரப்படும் மரியாத கொஞ்சநஞ்சமல்ல.

பாம்பு என்று சொன்னால் 'பாவம்' தொற்றிக்கொள்ளுமாம். அதனால், 'நாகனார்' என்கிறார்கள்[மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள 'பாமணி'யில் சுயம்புலிங்கமாகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்].

இவருக்கு, 'நாகேஸ்வரர்' என்று இன்னொரு பெயர் உண்டு. சென்னை குன்றத்தூரில் குடிகொண்டு பக்தர்களிடம் குறை கேட்கிறார்.

'ஆதிசேஷர்' என்றால் உலகில் அறியாதார் எவருமிலர்.

கோடகநல்லூரில், 'காளத்தீசுவரர்' என்னும் திருநாமம் பெற்று, நாடிவரும் பக்தர்களின் துயர் களைகிறார்.

'நாகராஜர்' என்பது இவருக்கான 'செல்லப் பெயர்'.

இந்தப் பாம்புக்கு, 'பாம்புரேஸ்வரர்' என்றொரு பெயரும் உண்டு. 'திருப்பாம்புரம்' என்னும் ஊரில் தங்கியிருந்து தரிசனம் வழங்குகிறார்.

இப்படிப் பலான பெயர்களில் குறிப்பிட்டு வழிபட்டு நிறைவு பெறாத பக்திமான்கள், விண்ணில் உலாவும் கோள்களையும் பாம்புகள் ஆக்கிவிட்டார்கள்[ராகு கேது-சர்ப்பக் கிரகங்கள்].

இவர்களின் இந்த மூடத்தனங்களை, அழியாமல் கட்டிக் காத்ததில்... காப்பதில் சிவபெருமான் தன் தலையிலும் கழுத்திலும் இவற்றை மாலையாக்கிக் கையில் கங்கணம் ஆக்கிக்கொண்டது, விஷ்ணுபகவான் பஞ்சணை ஆக்கியது போன்ற கட்டுக்கதைகளுக்கு மட்டுமல்ல, ஆன்மிகத்துக்கென்று இடம் ஒதுக்கி, ஆபாசப் புராணக் கதைகளை வாரி வழங்கும் ஊடகங்களுக்கும் முக்கியப் பங்குண்டு.

எது எப்படியோ, அண்டவெளியில் கடவுள் எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று அறிவியலாளர்கள் நாளும் தேடிக்கொண்டிருக்கிற இந்த அறிவியல் யுகத்தில், நச்சுப் பாம்பை நாகதேவனாக்கி வழிபடும் முட்டாள்கள் உள்ளவரை, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தப் புண்ணிய பாரதமும் அறிவியல் வளர்ச்சியில் பெரிதும் பின்தங்கியே இருக்கும் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை!

வெள்ளி, 29 ஜூலை, 2022

பிராணாயாமமும் அந்திமக் காலப் பயணமும்!

சற்று முன்னர், 'பி.எஸ் ஆச்சார்யா'வின் 'பிராணாயாமம்' என்னும் புத்தகத்தை வாசித்தபோது, 11 உயிரினங்களின் சுவாச அளவு[நிமிடத்திற்கு], அவற்றின் ஆயுள் ஆகியவை பற்றிய பட்டியல் என் கண்ணில் பட்டது.

மனிதர்களைக் காட்டிலும் பாம்புகளும்[120], ஆமைகளும்[155] அதிக ஆண்டுகள் வாழ்வதை அறிய முடிந்தது. யானைகளின் ஆயுள் மனிதர்களைப் போலவே 100 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'பிராணாயம்' என்னும் மூச்சுப் பயிற்சியை முறையாகப் பயின்று, அதைத் தொடர்ந்து செய்தால், ஒரு நிமிடத்தில் நாம் இழுத்துவிடும் மூச்சின் எண்ணிக்கை குறைவதோடு வாழ்நாளும் அதிகரிக்கும் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிராணாயாமப் பயிற்சி பற்றி புத்தகங்களில் படிக்க முடிகிறதே தவிர, பயிற்சி அளிப்பவர்கள் ஊரூருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

உங்கள் ஊரில் இருந்தால், பயிற்சியாளரை அணுகிப் பயன் பெறுங்கள்.

பயிற்சி பெறும் வசதி வாய்க்காதவர்களுக்கும், பிரணாயாமத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் ஆன பரிந்துரை:

சப்பணமிட்டு அமர்ந்து, நன்றாக மூச்சை இழுத்து, ஐந்தாறு நொடிகள் தேக்கிவைத்துச் சீராக வெளியேற்றும் பயிற்சியை 15 நிமிடங்களுக்குக் குறையாமல் தினமும் மேற்கொண்டாலே போதும்.

இதன் விளைவாகக் காலப்போக்கில் நாம் இழுத்துவிடும் மூச்சின் எண்ணிக்கை குறையும். 

குறைகிறதோ இல்லையோ, ஆயுள் கூடுவது சாத்தியமோ இல்லையோ, உயிர்க்காற்று[ஆக்ஸிஜன்] உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான ரத்தக் குழாய்களில் பரவுவதன் மூலம் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்துக் கொடிய நோய்களின் தாக்குதல் பெருமளவில் குறையும் என்பதும், அந்திமக்காலப் பயணம் அமைதி நிறைந்ததாக அமையும் என்பதும் உறுதி.

இது உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கான மிக மிக மிக அவசியத் தேவை ஆகும்!