திங்கள், 8 ஆகஸ்ட், 2022

ஊடக மூடத்தனங்கள்

மக்கள் மனங்களில் புதிய புதிய மூடநம்பிக்கைகளைத் திணிப்பதிலும், மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுவிடாமல் அவர்களைத் தடுப்பதிலும் முக்கியப் பங்காற்றுபவை நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், காணொலிகள், வானொலிகள் போன்ற ஊடகங்கள்.

இது விசயத்தில் முன்னிலை வகிப்பவை நாளிதழ்கள்.

'பெரும்பாலும் வீட்டின் பூஜை அறையில் கிழக்குத் திசை பார்த்தபடி வைத்துத்தான் தெய்வங்களை வழிபாடு செய்வார்கள். எந்தெந்தத் தெய்வத்தை எந்தெந்தத் திசையில் வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திர நியதி உள்ளது...'

இன்றைய நாளிதழ் ஒன்றின் ஜோதிடப் பக்கத்தில் வெளியாகியிருக்கும் இது ஒரு புதிய மூடநம்பிக்கைத் திணிப்பாகும்.

'கடவுள் ஒருவரே. அவர் அண்டவெளியெங்கும் நிறைந்திருக்கிறார்; நல்ல மனங்களிலும் குடிகொண்டிருக்கிறார்' என்று சொல்லப்படும் நிலையில், அவரைப் பல்வேறு பெயர்களில், சிலைகளாக அறைகளில் அடைத்து வைத்து வழிபடுவதே அறியாமையின் உச்சம்.

இந்த நிலையில் அந்தச் சிலைகளைக் குறிப்பிட்ட திசை பார்த்து வைத்து வழிபட வேண்டும் என்று சொல்வது மக்களை மடையர்கள் ஆக்கும் அடாவடித்தனமான செயல் ஆகும். 

சாஸ்திர நியதி வேறாம். எந்தச் சாஸ்திரம் சொல்கிறது? அது நம்பத் தகுந்ததா?

மக்கள் நலனில் அக்கறை இருந்தால் புதிய புதிய பயனுள்ள அறிவியல் செய்திகளுக்கும், பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கும் பக்கங்கள் ஒதுக்கலாம்.

செய்வதில்லை. மாறாக.....

பொய்யும் புளுகும் கலந்த ஆன்மிகச் செய்திகளுக்கு வாரம் தவறாமல் முழுப் பக்கங்களை ஒதுக்கும் இந்த நாளிதழாளர்கள், அறிவியல் அறிஞர்களால் ஆதாரமற்றது என்று நிரூபிக்கப்பட்ட ஜோதிடத்திற்கு அதைவிடவும் அதிகப் பக்கங்களை ஒதுக்குகிறார்கள். இணைப்புப் புத்தகங்கள் வேறு.

எந்த நம்பிக்கையில் இதை இவர்கள் செய்கிறார்கள்?

ஆன்மிகச் செய்திகளையும், ஜோதிடப் புளுகுகளையும் சில மாதங்கள் வெளியிடாமல் நிறுத்திவிட்டு, அறிவியல் & பகுத்தறிவு தொடர்பான செய்திகளுக்குச் சில பக்கங்கள் ஒதுக்க வேண்டும். 

பத்திரிகை விற்பனை கூடுவதையோ குறைவதையோ வைத்து மக்கள் எதை அதிகம் விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறியலாம்.

ஊடக வணிகர்கள் இதைச் செய்வார்களா?!

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

அணுக்களின் சேர்க்கையும் ஆறறிவின் தோற்றமும்!!

நம் முன்னே நான்கு பொருள்கள் இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். நான்கும் தலா ஒரு கிலோ எடை உடையவை; அதாவது, நான்கின் எடையும் சம அளவிலானது.

இந்த நான்கினையும் ஒன்றுசேர்த்து நிறுத்தால் அவற்றின் மொத்த எடை 4 கிலோ. அதாவது.....

1+1+1+1=4.

இது மிக எளிய ஒரு கணக்கு. இம்மாதிரியான கணக்கில் தவறு நேர வாய்ப்பே இல்லை.

ஆனால், அணுக்கள் விசயத்தில் இந்தக் கணக்கு ஏற்புடையதாக இல்லை.

அங்கே 1+1+1+1 என்பதன் கூட்டுத் தொகை 4 என்று இல்லாமல் 1+1+1+1=3.97ஆகக்கூட இருக்கலாமாம்.

அது ஏன்?

இங்கு நான்கு அணுக்களின் எடை '4' ஆக இல்லாமல் 3.97ஆக[வேறு எதுவாகவும் இருக்கலாம்] இருக்கக் காரணம், 'தனித்தனியே பிரிந்திருந்தபோது இருந்த எடை, அணுக்கள் ஒன்றாகச் சேரும்போது குறைந்துபோவதுதான். குறைந்துபோன அவற்றின் எடை[இங்கு 0.03] ஆற்றலாக[சக்தி] மாறுகிறது' என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

சூரியன், நட்சத்திரங்கள் என்று பிரபஞ்ச வெளியிலுள்ள அனைத்துமே அணுக்களின் சேர்க்கையால் உருவானவைதான். அவற்றின் சேர்க்கையின்போது குறைகிற எடையே அவற்றிற்கான சக்தியாகவும் மாறியிருக்கிறது[அவை ஒளிரவும் செய்கின்றன; எரிவதில்லை] என்பது அறியத்தக்கது[ஆதார நூல்: 'அணு அதிசயம்... அற்புதம்... அபாயம்'; ஆசிரியர்: என்.ராமதுரை; 'கிழக்கு' பதிப்பகம், சென்னை].

எடை குறைதல் காரணமாக, அணுக்களின் சேர்க்கையால் சக்தி பிறப்பது சாத்தியம் என்றால், அதே அணுக்களின் சேர்க்கையால், உயிர்கள் ஒன்று முதலான ஐந்தறிவைப் பெற்றதும், மனிதர்கள் கூடுதலாக ஆறாவது அறிவைப் பெற்றதும் சாத்தியமாயின என்றும் சொல்லலாம். அறிவியல் ரீதியாக அது உறுதிப்படுத்தப்படும் நாளும் வரும்.