புதன், 10 ஆகஸ்ட், 2022

கேரளா 'கடவுளின் தேசம்' என்று பெயர் பெற்றது எப்படி?!

மனதைக் கொள்ளை கொள்ளும் அடர் மரங்கள் நிறைந்த மலை அடுக்குகள். இயற்கை அழகுகளின் சேமிப்புக் கிடங்குகளான கிடு கிடு  பள்ளத்தாக்குகள்,  எங்கெங்கு காணினும் பச்சைப் பசேல் என்று காட்சியளிக்கும் தேயிலை & காப்பித் தோட்டங்கள்,  காணும் இடமெல்லாம் குளு குளு நீரோடைகள், வெண்பட்டைப் பாரம்பரிய ஆடையாகக் கொண்ட அழகுப் பெண்கள்['சிந்து நதியின்மிசை நிலவினிலே, சேர நன்னாட்டு இளம் பெண்களுடனே...' -பாரதியார்] என்று மலையாள தேசத்தை ஒரு சொர்க்க பூமியாகக் கடவுள் படைத்தார் என்ற நம்பிக்கையில்தான் அது 'கடவுளின் தேசம்' என்று சிலாகிக்கப்படுவதாகப் பலரும் நம்பினார்கள், அடியேன் உட்பட.

ஆனால், இது தொடர்பாக 'Quora' தளத்தில் இடம்பெற்றதொரு 'பெயர்க் காரணம்' முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

                                        *   *   *   *   *

கேள்வி:

கேரளாவிற்குக் 'கடவுளின் சொந்த ஊர்' என்று பெயர் எப்படி வந்தது?[கேரளம் ஏன் God's own country எனப்படுகிறது?]

//இளந் தலைமுறைக்கு இது தெரிந்திருக்காது. மூத்தவர்களும்கூட மறந்திருக்கக் கூடும்.

ஆகஸ்ட் 15,1947இல் திருவாங்கூர் இந்தியாவில் இணைந்து இருக்கவில்லை. அது தனி நாடாக இருக்கும் என்று 1947 ஜூனில் அந்தச் சமஸ்தானத்தின் திவான் அறிவித்தார். அறிவிக்கச் செய்தவர், மகாராஜா சித்திரைத் திருநாள் பாலராம வர்மா.

திருவாங்கூர் சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைக்கப் பேச்சு வார்த்தைகள் நடந்தபோது அரசர் பலராம வர்மா சொன்னார்: “இது என்னுடைய ராஜ்யம் இல்லை. அனந்த பத்மநாபனுடையது. நான் வெறும் நிர்வாகி. அனந்தன் சொன்னால் உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன்.”

சொன்னதோடு, ஒரு முழ நீளமும், ஒரு அங்குல அகலமும் உள்ள ஒரு பழைய ஓலையைக் காட்டினார். அது.....

1750ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அப்போதைய மகராஜா அநிழோம் திருநாள் மார்த்தாண்ட வர்மா[பல போர்கள் நடத்தி வெற்றிகளையும் செல்வத்தையும் குவித்தவர்] ஆலயத்தில் உறைந்த அனந்த பத்மநாபனுக்கு எழுதிக் கொடுத்த ஓலை அது.

அதில்.....

'அரண்மனைச் சதிகளை முறியடித்து அரியணை ஏறியதுவரை நடந்த போர்களில் பல உயிர்கள் மாய்ந்துவிட நேர்ந்ததை எண்ணி வருந்தி, கன்னியாகுமரி முதல் பரவூர்வரை உள்ள என் அரசையும் அதன் செல்வத்தையும் உனக்கே ஒப்புவிக்கிறேன்' என்று எழுதியிருந்தது(அதனால்தான் கேரளம், 'கடவுளின் தேசம்'[God’s own country] ஆனது).

'திருப்படி தானம்' என்னும் அந்த ஓலையைத் தன் குடும்பத்தினர், அமைச்சர்கள், அதிகாரிகள், ஆலயத்தில் பூஜை செய்வோர், பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் இறைவனை வழிபட்டு ஓலையை ஒப்படைத்தாராம் அரசர்.

அத்துடன் சாமியின் சந்நிதியின் முன்னுள்ள ஒத்தக்கல் மண்டபத்தின் படிக்கட்டில் தன்னுடைய மகுடம், குடை, விசிறிகள், அரச இலச்சினை, தன் வாள் ஆகியவற்றையும் அனந்தபத்மநாப சாமியிடம் சமர்ப்பித்தாராம்.

தன் பெயரிலுள்ள 'அரசர்' என்பதற்குப் பதிலாக, 'பத்மநாபதாசன்' என்ற பட்டத்தையும் சூடிக்கொண்டாராம். தனக்குப் பின் வரும் அரசர்களும் பத்மநாபனின் அடிமைகளாகத் தொடர்வார்கள் என்று உறுதியளிக்கவும் செய்தாராம். இன்றும் அரசகுல வாரிசுகள் தினமும் காலையில் பத்மநாபசாமி கோவிலுக்குச் சென்று இறைவன் சந்நிதியில் தனியாக நின்று ஆணை பெற்று வருகிற ‘ஏகாந்த தரிசனம்’ என்ற சடங்கு நடக்கிறது./

* * * * *

கதை போல இருந்தாலும், மேற்கண்டது உண்மை நிகழ்வு என்றே நம்பத் தோன்றுகிறது.

வாழ்க கடவுளின் தேசம்! வளர்க அதன் அழகும் செழுமையும்!!

[ஆதாரக் கட்டுரையின் தொடர் அமைப்பில் சிறு சிறு மாற்றங்கள் செய்து, சற்றே சுருக்கிப் பதிவு செய்யப்பட்டுள்ளது].

நன்றி: 'வாட்ஸ்அப்'[Krishnaswamy Ramachandran] 

ஆதாரம்: Quora 

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

பிரதமர் மோடிஜியின் சீரிய சிந்தனைக்கு.....

கீழ்க்காணவிருக்கும் அவல நிகழ்வு ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தின் சிகார் நகரக் கோயிலில் நிகழ்ந்துள்ளது.

'கியாரஸ்' என்னும் புனித தினத்தை ஒட்டி, சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தார்கள் பக்தர்கள்.

அதிகாலை 04.30 மணியளவில் நடை திறக்கப்பட்டது.

ஒட்டுமொத்தப் பக்தர் கூட்டமும் சாமியைத் தரிசித்து ஜென்ம சாபல்யம் பெறுவதற்காக முண்டியடித்துக்கொண்டு பாய்ந்தபோது. வயதானதொரு மூதாட்டி தரையில் தள்ளப்பட்டார். அவரின் பின்னால் நின்ற இரண்டு பெண்களும் விழுந்தார்கள். பக்தகோடிகளின் கால்களில் மிதிபட்டு மூன்று பேரும் உயிரிழந்தார்கள். பலருக்குக் காயம்.

இப்படிப் பக்தர்கள் பக்தர்களாலேயே மிதித்துக் கொல்லப்படுவது கோயில்களில் அடிக்கடி இடம்பெறும் நிகழ்வாக உள்ளது.

பக்தர்களிடையே ஏன் இந்த அவசரம்?

காத்திருந்த அத்தனை பேருக்கும் தரிசனம் தராமல் சாமி ஓடி ஒளிந்துகொள்ளுமா?

அந்தக் கோயிலில் இருக்கும் சாமி உலகில் வேறு எங்கும் இருக்கும்தானே. சாவகாசமாக அங்கு சென்று தரிசித்துக் கோரிக்கை வைக்கலாம். இது ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை?

சக பக்தர்களைத் தங்களின் கால்களால் மிதித்துக் கொல்லும் கொலை பாதகச் செயலைச் செய்துவிட்டுச் சாமி தரிசனம் செய்து புண்ணியம் தேட நினைக்கிறார்களே, கிடைப்பது புண்ணியமா, பாவமா?

இவர்களெல்லாம் பக்தர்களா, படு பாதகர்களா?

கிஞ்சித்தும் சிந்திக்கும் அறிவே இல்லையா?

இவ்வாறான கேள்விகளைப் பக்தர்களிடம் இந்தச் சிறியேனைப் போன்ற சாமானியர்கள் கேட்பதால் எந்தவொரு பயனும் விளையப்போவதில்லை என்பதால் இந்தியப் பிரதமர் அவர்களுக்கு இப்பதிவைக் காணிக்கை ஆக்குகிறோம்.

பிரதமர் அவர்களே,

சிகார் நகரக் கோயிலில், நெரிசலில் மிதிபட்டு இறந்தவர்களுக்காக அனுதாபம் தெரிவித்திருக்கிறீர்கள். அது தங்களின் மனிதாபிமானத்தைக் காட்டுகிறது.

இது தேவைதான் எனினும், இம்மாதிரி அனுதாபம் தெரிவித்தல் இனியும் இத்தகைய அவலங்கள் நிகழாமல் தடுக்குமா?

நிச்சயமாக இல்லை.

இது தங்களுக்கும் தெரியும்.

அனுதாபம் தெரிவிப்பதோடு, பிரதமர் என்ற வகையில், சாமி தரிசனத்துக்காக நாள் கணக்கில் காத்திருந்து வாழ்நாளை வீணடிக்கும் பக்தர்களிடம் மேற்கண்ட கேள்விகளை நீங்கள் கேட்பீர்களேயானால்[ஊடகங்கள் அதைப் பரப்புரை செய்யும்] பலன் கிட்டும் என்பது நிச்சயம்.

இப்படிக் கேள்விகள் கேட்டுப் பக்தர்களைத் திருத்துவதோடு, கோயில் நிகழ்வுகளையும் மாற்றி அமைப்பதும் மிக அவசியம் ஆகும்.

விடியற்காலையில்தான் நடை திறக்கிறார்கள். அதுவரை அதைச் சாத்தி வைப்பது ஏன்?

நாளெல்லாம் பக்தர்கள் தங்களின் குறை சொல்லிப் புலம்புவதைக் கேட்டுக் கேட்டுக் கேட்டுச் சோர்ந்துபோன சாமிக்கு ஓய்வு அளிப்பதற்காகவா? 

நிச்சயமாக இல்லை.

அனைத்தையும் படைத்த கடவுள்தான் அனைத்துக் கோயில்களிலும் வேறு வேறு உருவில் குடிகொண்டிருக்கிறார் என்கிறார்கள். அவரைப் பொருத்தவரை 'இது நல்ல நாள்', 'இது கெட்ட நாள்', 'இது நல்ல நேரம்', 'இது கெட்ட நேரம்' என்ற வேறுபாடுகள் கிடையாது. 

ஆகவே, நடை சாத்தும் வழக்கத்தைக் கைவிட்டு, எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் சந்நிதியைத் திறந்து வைத்தல் வேண்டும். அதன் மூலம், இடர்ப்பாடு இல்லாமல் பக்தர்களால் சாமியைத் தரிசிக்க முடியும்.

இது நடைமுறை ஆக்கப்பட்டு எல்லா நேரமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது சாத்தியப்படுமானால்.....

சாமி தரிசனத்துக்காக வரிசையில் கால்கடுக்க நின்று நின்று நின்று நேரத்தை வீணடிப்பதும், பக்தர்களைப் பக்தர்களே உயிர்ப்பலி கொடுக்கும் கொடூரமும் தவிர்க்கப்படும் என்பதைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதில் பக்தன் என்றில்லாமல், ஒரு மனிதாபிமானி என்ற வகையில் என் கடமையைச் செய்தவன் ஆகிறேன்.

நன்றி பிரதமர் அவர்களே!