சனி, 8 அக்டோபர், 2022

ஆன்மா படும் பாடு!!![வாழ்வியல் நீதிக் கதை]

'மகாபாரதம்' கதை... போர்க்களம்.

எதிரில், எதிரிகளாகப் போர்க்கோலம் பூண்டு நிற்கும் பாட்டன்களையும் பங்காளிகளையும் போரிட்டுக் கொல்லவிடாமல் அர்ச்சுனனைத் தடுத்தது அவர்கள் மீது அவன் கொண்டிருந்த பாசம்.

காண்டீபத்தைக் கையில் எடுக்கத் தயங்கினான் அவன்.

அவனின் தயக்கத்திற்கான காரணத்தைப் புரிந்துகொண்ட தேரோட்டி கண்ணன், "ஏன் தயங்குகிறாய் அர்ச்சுனா? வில்லை எடு; நாணை ஏற்று; அம்பைத் தொடு; அவர்களைக் குறி வைத்து விடு" என்றான்.

மேலும், "அவர்களைக் கொல்வதாக நினைத்து மனம் மயங்காதே. நீ கொல்லப்போவது அவர்களின் உடல்களைத்தான்; அவர்களை அல்ல, அதாவது, அவர்களின் ஆன்மாவை அல்ல. ஆன்மாக்களுக்கு அழிவில்லை. எனவே, அவர்களுக்கும் அழிவில்லை" என்று உபதேசித்தான்[கீதை].

கண்ணனின் உபதேசத்தை அர்ச்சுனன் ஏற்றுப் போர் செய்தான்.

பாரதப் போர் முடிந்தது.

ஒரு வழக்கறிஞர் இதை உதாரணமாகக் காட்டி, கொலைகாரனான தன் கட்சிக்காரனை விடுவிக்க வாதாடியதாக ஒரு நிகழ்வு[கற்பனைதான்].

"நீதிபதி அவர்களே, தாங்கள் பகவத்கீதை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். போரில் கொல்லப்பட்ட அர்ச்சுனனின் உறவினர்களின் உடல்கள்தான் அழிகின்றன. அவர்களின் ஆன்மாக்களுக்கு அழிவில்லை என்பதால் அவர்களில் எவரும் அழிவதில்லை என்பதாகக் கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்கிறான் அல்லவா?.....

அது போலவே, என் கட்சிக்காரரால் கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுபவரின் உடல்தான் அழிக்கப்பட்டதே தவிர, அவரின் ஆன்மாவுக்கு அழிவில்லை என்பதால் அவர் பிறிதொரு உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதே உண்மை. எனவே, என் கட்சிக்காரரை விடுதலை செய்திட வேண்டுகிறேன்" என்று வாதாடினார் வழக்கறிஞர்.

வழக்கறிஞரைவிடவும் வழக்கை விசாரித்த நீதிபதி புத்திசாலி போலும். அவர் அளித்த தீர்ப்பு:

"உங்களின் கட்சிக்காரரைத் தூக்கில் போடுவதால், அவரின் உடல்தான் அழியுமே தவிர, அவர் ஆன்மா அழியாததால் அப்புறமும் அவர் உயிர் வாழ்வார் என்பதே உண்மை. எனவே உங்கள் கட்சிக்காரரின் உடலுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கிறேன்."

இந்த நிகழ்வின் மூலம் யாவரும் அறியத்தக்க நீதி.....

'ஆன்மா' என்று ஒன்று இருப்பதாக நம்பி, தப்புதண்டா செய்து,  வம்புதும்பில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதே!

===========================================================================

மூல நூல்: 'சிந்தனைச் சிற்பி சி.பி.சிற்றரசு'வின் 'உலகைத் திருத்திய உத்தமர்கள்'; பூம்புகார் பதிப்பகம், சென்னை.

வெள்ளி, 7 அக்டோபர், 2022

இஸ்லாமியரை விரட்டிவிட்டால் இந்தியா 'இந்து சாம்ராஜ்ஜியம்' ஆகிவிடுமா?!

தசரா பண்டிகையின்போது[கர்னாடகாவில்], 'ஜெய் ஸ்ரீராம்' போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், புராதனச் சின்னமான மஹ்முத் கவான் மதரஸாவிற்குள் நேற்று அத்துமீறி நுழைந்து பூஜை செய்ததாக ஒன்பது பேர் மீது பிடார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முஸ்லிம் சமூகத்தினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். நிலைமை கட்டுக்குள் உள்ளதாகக் கூடுதல் எஸ்பி மகேஷ் மேகன்னாவர் கூறியுள்ளார்[டைம்ஸ் நவ் டிஜிட்டல் - சில மணிநேரத்திற்கு முன்பு].

'மஹ்மூத் கவான் மஸ்ஜித் மற்றும் மதரஸா 1460களில் கட்டப்பட்டது மற்றும் இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) கீழ் வருகிறது.'

சமீபத்திய மாதங்களில், ஹலால் இறைச்சி விற்பனையைத் தடை செய்தல் வேண்டும், மாநிலம் முழுவதும் உள்ள கோயில் கண்காட்சிகளில் இஸ்லாமிய வியாபாரிகளை அனுமதித்தல் கூடாது போன்ற இவர்களின் கோரிக்கைகளால் வகுப்புவாதப் பதட்டங்கள் கர்னாடகாவில் அதிகரித்து வருகின்றன என்பது பலராலும் அறியப்பட்டதே.

இப்படியொரு விரும்பத்தகாத சூழ்நிலையில்தான், ஆதிவாசிக் கும்பல் ஒன்று மதரஸாவுக்குள் அத்துமீறி நுழைந்து பூஜை செய்திருக்கிறது.

இவர்கள் அங்கே எதற்குப் பூஜை செய்தார்கள்?

மதரஸாவைத் தங்களுக்குச் சொந்தமானதாக ஆக்கவா, அல்லது, இஸ்லாமியரால் வழிபடப்படும் 'அல்லாவை'யே இந்துக் கடவுளாக மதம் மாறச் செய்யவா?

இப்படித் தொடர்ந்து அவர்களுக்குச் சொந்தமானவற்றை இவர்கள் ஆக்கிரமிப்புச் செய்தால், ஒரு கட்டத்தில் அவர்கள் இந்த நாட்டைவிட்டே ஓடிவிடுவார்கள்; இந்த இந்தியா என்னும் நாடு முழுமையான 'இந்து சாம்ராஜ்ஜியம்' ஆகிவிடும் என்று நம்புகிறார்களா?

அப்படி நம்பினால், அதைப் போன்றதொரு முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.

இஸ்லாமியர்கள், வெறும் மதம் சார்ந்தவர்கள் மட்டுமல்ல; பல்வேறு இனங்களை உள்ளடக்கிய இந்த நாட்டில் தமக்கென ஏதேனும் ஒரு மொழிச் சார்பும் இனச்சார்பும் கொண்டவர்கள்; இந்தியக் குடிமக்களும்கூட.

இந்தச் சிறுபான்மை மதத்தவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறிவிட்டால் இது இந்து நாடு ஆகிவிடாது.

கர்னாடகாவில் வாழ்பவர்கள் கன்னடர்கள் மட்டுமல்ல; அவர்கள் இந்தியர்கள். அங்கு வாழும் அத்தனை பேரும் இந்துக்கள் அல்ல.

தமிழ்நாட்டில் வாழ்கிற அத்தனை பேரு தமிழர்களே, இஸ்லாம் மதச் சார்புள்ளவர்கள் உட்பட. இந்துமதச் சார்புள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதால் இது இந்து மாநிலம் ஆகிவிடாது.

ஏனைய மாநிலங்களுக்கும் இந்நிலை பொருந்தும்.

ஆகவே வெறியர்களே,

பல மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியா இனியும் இந்தியாவாகவே இருக்குமே தவிர, நீங்கள் கனவு காண்பது போல 'இந்து சாம்ராஜ்ஜியம்' ஆகிவிடாது.

எனவே, இம்மாதிரியான அநாகரிகச் செயலில் இனியும் ஈடுபட வேண்டாம். அது உங்களின் மதத்திற்கு ஆக்கம் தருவதற்குப் பதிலாக அழிவை உண்டுபண்ணும் என்பதை மனதில் அழுத்தமாகப் பதிவு செய்யுங்கள்!

===================================================================

https://www.msn.com/en-in/sports/other/bjp-promoting-such-activity-to-demean-muslims-owaisi-after-mob-offers-puja-at-mahmud-gawan-madrasa-in-bidar/ar-AA12GBlZ?ocid=msedgdhp&pc=U531&cvid=53d06564e3b34538bc3f73362d956cab