செவ்வாய், 25 அக்டோபர், 2022

வன்புணர்வு நிகழ்வுகளைக் காணொலியாக்கும் கயவர் கூட்டம்!!!

#உத்தரப்பிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டத்தில் ஞாயிற்றுகிழமை வீட்டைவிட்டுக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 13 வயதுச் சிறுமி ஒருவர், அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் தலை உட்பட உடலில் பல இடங்களில் படுகாயங்களுடன் விழுந்துகிடக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 25 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஒரு சிறுமி ரத்தக்காயங்களுடன் காணப்படுகிறாள்; கைகளை நீட்டித் தன்னைச் சுற்றி இருக்கும் கூட்டத்தை நோக்கி உதவி கேட்கிறாள். ஆனால் சிறுமியைச் சுற்றி நிற்கும் ஆண்கள் அவளுக்கு உதவுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் தங்களின் செல்போனில் சிறுமியைப் படம் எடுப்பதில் மட்டுமே குறியாய் இருக்கின்றனர்.

இடையில், போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதா என்றும், போலீஸ் உயர் அதிகாரியின் எண் என்ன என்றும் சிலர் விசாரிக்கின்றனர். ஆனாலும், அவர்களுக்குப் பதில் தராமல் தொடர்ந்து படம் பிடிப்பதிலேயே அக்கறை செலுத்துகின்றனர். அந்த இடத்திற்குப் போலீஸார் வந்துசேரும்வரையில் சிறுமிக்கு யாரும் உதவவில்லை. 

இந்தச்சம்பவம் குறித்து வெளியான இரண்டாவது வீடியோ ஒன்றில், போலீஸ்காரர் ஒருவர் சிறுமியைத் தனது கைகளில் தூக்கிக்கொண்டு ஆட்டோவை நோக்கி ஓடுகிறார்# https://www.hindutamil.in/news/india/887219-up-shock-injured-girl-seeks-help-people-busy-filming-her.html  -25 Oct, 2022 12:37 PM

வன்புணர்வோ வேறு வன்முறையோ, மனம் பதறச் செய்யும் அவல நிகழ்வு எதுவானும், அதைக் காணொலியாக்கி, சமூக வலைதளங்களில் பகிர்ந்து இன்புறும்[பணம் சம்பாதிப்பவர்களும் உண்டோ?] மனிதாபிமானம் இல்லாத குரூரப் புத்தி படைத்தோர் எண்ணிக்கை நாளும் பெருகிவருகிறது.

இவர்களும் ஒருவகையில் வன்புணர்வாளர்கள்தான்; வன்முறையாளர்களும்கூட. உதவும் முயற்சி சிறிதுமின்றி, படம் பிடித்துப் பகிர்வதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு கைபேசியும் கையுமாக அலையும் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

அரசு உரிய முறையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உடனடித் தேவை ஆகும்!

***'வன்புணர்வு குறித்த செய்தி வராத நாளே இல்லை' என்று பழைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன். "வன்புணர்வு குறித்த செய்திகளே இப்போதெல்லாம் வருவதில்லை" என்று சொல்லி மகிழும் நாள் எப்போது வரும்?! 

மனிதர்கள் தாமாகத் திருந்துவார்களா, இல்லை, இவர்கள் நம்பும் கடவுளே நேரில் வந்து சொன்னால்தான் திருந்துவார்களா?




திங்கள், 24 அக்டோபர், 2022

ஆண் கொசுக்களுக்கு 'மரபணு' மாற்றம்! பெண் கொசுக்களுக்கு?!

கொசுக்களில் 3000க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன என்றாலும், நோய்க் கிருமிகளைச் சுமந்து திரியும் சில குறிப்பிட்ட இனக் கொசுக்களே மனிதர்களுக்கு நோய்களைப் பரப்புகின்றன. இதனால், ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள்.

ஆண் கொசுக்களின் மரபணுவை மாற்றி அமைப்பதன் மூலம் இதைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து ஈடுபட்டார்கள். ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள். 

2020 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் நிறுவனமான 'Oxitec', 2021ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு ஆண்டுகளில் புளோரிடாவிலும், கலிபோர்னியாவிலும் 750 மில்லியன் மரபணு மாற்றப்பட்ட[ஆய்வகங்களில்] கொசுக்களை வெளியிட உள்ளது உரிய வகையிலான ஒப்புதல் கிடைத்ததால்.

மாற்றியமைக்கப்பட்ட இனங்களின் குறியீட்டுப் பெயர் OX5034 என்பதாகும்.

ஏடிஸ் ஈஜிப்டி கொசுக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் கொசுக்களுக்கு இந்த மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மாற்றம் செய்யப்பட்டதால், இவ்வகை ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் இணைந்து உற்பத்தி செய்யும் லார்வாக்கள்[குஞ்சுக் கொசுக்கள்] வயதுக்கு வருவதற்கு முன்பே இறந்துவிடுமாம்.  

அது மட்டுமல்லாமல், மாற்றப்பட்ட புதிய மரபணுவானது, லார்வாக்கள் உருவாவவதற்குத் தேவையான அத்தியாவசியப் புரதங்களின் உற்பத்தியைச் சீர்குலைத்துவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால் லார்வாக்கள் உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது.

பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடித்து நோய்களைப் பரப்புபவை. மரபணு மாற்றப்பட்டவை உட்பட ஆண் கொசுக்களால் மனிதர்களுக்குத் தீங்கு விளைவதில்லை; சுற்றுச்சூழலுக்கும் மாசு உண்டாவதில்லை.

கொசுக்களைப் போலவே, நோய் பரப்பும் மற்றப் பூச்சி இனங்களுக்கும் மரபணு மாற்றம் செய்வது குறித்து அறிவியல் அறிஞர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.


இவை எல்லாம் நல்ல செய்திகளே.

நற்செயல் புரியும் அறிவியல் அறிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

ஆண் கொசுக்களுக்குச் செய்தது போலவே, பெண் கொசுக்களுக்கும் மரபணு மாற்றம் செய்து, கோடி கோடி கோடியாய் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குங்கள். அந்தக் கொசுக்கள்.....

கட்டிய பெண்டாட்டி போதாதுன்னு, கள்ளக்காதல், வன்புணர்வுன்னு[வன்புணர்வுச் செய்தி வெளியாகாத நாளே இல்லை] அலைகிற ஆண்களின் காம வெறி கலந்த குருதியை மட்டுமே விரும்பிச் சுவைக்கணும். அந்தக் கொசுக்கள் கடிச்ச உடனே அவங்க புத்தி பேதலிக்கணும், அல்லது மண்டையைப் போடணும். இப்படியான மரபணு மாற்றப் பெண் கொசுக்களை நீங்கள் உற்பத்தி செய்தால் உங்களுக்கு ரொம்பவே புண்ணியம் சேரும்.

செய்வீர்களா விஞ்ஞானிகளே?

https://bgr.com/science/2-billion-genetically-modified-mosquitos-are-about-to-be-released-in-the-us/

-மார்ச் 10, 2022 பிற்பகல் 3:52