வியாழன், 26 ஜனவரி, 2023

கோயம்புத்தூருக்கு இஸ்லாமியர் இனயத்துல்லா! நம்ம ஊர்களுக்கு?

திரு. எம்.ஏ. இனயத்துல்லா  கோவை, உக்கடம், கோட்டைமேடு பகுதியில் வசிப்பவர்.

கடந்த 20 ஆண்டுகளாக அனைத்துச் சமய மக்களிடமும் நட்புடன் பழகி வருவதுடன், மத ஒற்றுமை, கல்வியறிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருபவர்; கோயம்புத்தூர் பகுதியில் உருவான பதட்டமான சூழ்நிலைகளின்போதெல்லாம், காவல்துறையினருடன் இணைந்து அமைதியை நிலைநாட்டப் பாடுபட்டவர்.


கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மத வேறுபாடின்றிக் கல்வி நிதி உதவி வழங்கிவருகிற இவர், மனிதநேயம், மத ஒற்றுமை மற்றும் கல்வி மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். 


கோயம்புத்தூர் கோட்டைமேடு பகுதியில் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லீம் இளைஞர்களால் நடத்தப்படும் மத நல்லிணக்க விழாக்களில் கலந்துகொண்டு, இந்து, கிறித்துவ மதக் குருக்களோடு இணைந்து மத நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்கும் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்.


மேலும், கடந்த 23.10.2022 அன்று கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார்க்குண்டு வெடித்த சம்பவத்தின் தொடர்ச்சியாகக் கடந்த 03.11.2022 அன்று, திரு.எம்.ஏ.இனயத்துல்லா அவர்கள் அனைத்து சுன்னத் ஜமாத் அமைப்பு நிர்வாகிகளுடன் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்று கோவில் நிர்வாகிகள் & அலுவலர்களைச் சந்தித்து, அச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், கோயம்புத்தூர் நகரில் இந்து & முஸ்லீம் சமூகத்தினரிடையேயான சகோதரத்துவம் தொடர்ந்து பராமரிக்கப்படுவதற்கு ஒத்துழைப்பு நல்குவதாகத் தெரிவித்தார்.


மற்ற மதத்தவர்கள் செய்யத் துணியாத அல்லது, செய்யத் தயங்குகிற அரியதோர் நற்செயல் இதுவாகும்.


மனிதநேயம் போற்றி, எந்தவொரு சூழலிலும் மதக்கலவரங்கள் மூளாமல் தடுப்பதற்கு அனைத்து ஊர்களுக்கும் இனயதுல்லாக்கள் தேவை.


அவர்கள் எம்மதம் சார்ந்தவராயினும் அவர்களே உண்மையான மனிதர்கள் ஆவார்கள்.

=================================================================================

உதவி: https://tamil.oneindia.com/news/chennai/fort-amir-religious-harmony-medal-who-is-this-inayatullah-what-has-he-done-495992.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom


புதன், 25 ஜனவரி, 2023

“இங்கெல்லாம் பெரிய மனுஷங்களே இல்லையா பன்னீரு?!?!”

இடைத் தேர்தல்[ஈரோடு கிழக்கு] வந்ததோ இல்லையோ, இங்குள்ள இரண்டு அடிமைகள், கூட்டணி சேரக் கட்சி கிடைக்காமலும், தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லாமலும் படும் அல்லல் சொல்லும் தரமானதாக இல்லை.

அம்மா அமரர் லோகம் சென்ற அன்றே தற்காலிக முதல்வராக இருந்த பன்னீரு, மோடியின் இரு கரம் பற்றி, “உங்கள் தயவு எனக்கு எப்போதும் தேவை” என்பது போல மேன்மைமிகு மோடியின் இடுப்பு மட்டத்துக்கு வளைந்து குனிந்து[தனிமையில் சந்தித்திருந்தால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்திருப்பார்] சரணாகதி அடைந்தார்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சின்ன[அம்மா]த் தலைவி சசிகலாவின் கால்களில் விழுந்து  ‘திடீர்’ முதல்வரான எ.ப.சாமி, சமயோசிதமாகத் தலைமையை மாற்றி, மோடி அவர்களின் சேவகர் ஆனார். பதவி விலகும்வரையும் விலகிய பின்னரும் அவருக்கு விசுவாசமாக நடந்துகொண்டார்... கொள்கிறார். அதன் பயனாக, இந்த இடைத் தேர்தலில் ‘பாஜக’ ஆதரவு தனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறார்.

இந்தவொரு சூழ்நிலையை மிகச் சரியாகக் கணித்த பன்னீரு,  எடப்பாடிஜி கனவு நனவாகிவிடுமோ என்று பயந்து, தான்தான் மேதகு மோடியின் ‘நம்பர் 1’ அடிமை’ என்பதை மெய்ப்பிப்பது போல், “மோடி இரண்டு அணியும் இணைந்து செயல்பட வேண்டும் என்கிறார். ஒரு பெரிய மனுஷன்[மோடி] நல்லது சொல்கிறார். அதைக் கேட்க வேண்டும்” என்று அறிக்கை விட்டிருக்கிறார்[தினகரன், 25.01.2023].

இச்செய்தி, தமிழ்நாட்டில் பெரியமனுஷங்களே இல்லையா என்று பன்னீரிடம் கேட்கத் தூண்டுகிறது.

‘இல்லை’ என்று பன்னீர் கருதினால், “இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பரட்சித் தலைவர் என் கனவில் காட்சியளித்துச் சொன்னார். சில நிமிடங்களுக்குப் பிறகு புரட்சித் தலைவி, தெய்வத்தின் தெய்வம் ஜெயலலிதா அம்மையாரும் சொன்னார்[கனவில்]” என்று சொல்லியிருக்கலாம்.

அப்படிச் சொல்லியிருந்தால் பன்னீரு நம் பாராட்டுக்கு உரியவராக இருந்திருப்பார்; இப்போது நம் பழிப்புக்கு ஆளாகியிருக்கிறார்.

இவரைப் போன்றவர்களுக்கு வாக்களித்து மக்கள் வெற்றி பெற்றிடச் செய்தால், தாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழர்களையே பிற இனத்தாருக்குச் சேவகம் செய்யும் அடிமைகளாக மாற்ற முயற்சி செய்வார்கள் என்பது உறுதி!