சனி, 22 ஏப்ரல், 2023

அவன் ‘அது’ விசயத்தில் சராசரிக்கும் கீழே!!!['சுரீர்’ சிறுகதை]

“நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயசு. நான் ரெண்டு பிள்ளைகளுக்குத் தகப்பன். நீ ஏண்டா இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கே?” என்று தங்கராசுவிடம் நான் கேட்டபோது அவன் சொன்ன பதில் என்னைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அவனின் பதிலை நீங்களும் தெரிந்துகொள்வதற்கு முன் எங்களைப் பற்றிய சிறு குறிப்பு:

இருவரும் பிறந்து வளர்ந்து, உருண்டு புரண்டு விளையாடிப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தது சேலம் அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில்[பெயர் வேண்டாமே].

அப்புறம் இருவரும் பயணித்தது வேறு வேறு பாதைகளில்.

நான் படிப்பில் கொஞ்சம் மந்தம் என்பதால், தனியார் கல்லூரிக்கு நன்கொடை அழுது, பட்டப்படிப்பு, மேற்படிப்பெல்லாம் முடித்துப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து, கல்யாணம் கட்டி இரு பிள்ளைகளின் தந்தை ஆனது இன்றுவரையிலான என் கதை.

தங்கராசு படிப்பில் படு சுட்டி. ஒரே ‘தம்’மில் பி.டெக்., எம்.டெக்., எல்லாம் முடித்து இன்று பெங்களூருவில் பெட்டி பெட்டியாய்ச் சம்பளம் வாங்குகிறான்.

ஆண்டுக்கு ஓரிரு முறை சந்திக்கும்போதெல்லாம், “கல்யாணம் எப்போதுடா?” என்று கேட்டால், பெண் பார்த்துக்கொண்டிருப்பதாகப் பொய் சொல்லுவான்.

நேற்றைய சந்திப்பின்போது, “உண்மையைச் சொல்லு. கல்யாணம் பண்ணிக்கப்போறியா, இல்லையா?” என்று கேட்டபோதுதான் “இல்லை” என்று சொன்னதோடு காரணத்தையும் சொன்னான்.

“ஒரு பொண்ணுக்குப் புருசனாக இருப்பதற்கான முழுத் தகுதி எனக்கு இல்ல. அது விசயத்தில் மனசைக் கட்டுப்படுத்தி, நிதானமா செயல்படுறது எனக்குச் சாத்தியமாகல.”

குறுக்கிட்டேன். “எப்படித் தெரிஞ்சுகிட்டே?”

“பலான இடங்களுக்குப் போய்த் தெரிஞ்சிகிட்டேன். தப்பா நினக்காதே அந்தப் பழக்கத்தை எப்போதோ கைவிட்டுட்டேன்.” -முகத்தில் அசடு வழியச் சொன்னான் தங்கராசு.

“இந்த ‘இயலாமை’க் குறையைச் சரிக்கட்ட மருந்து மாத்திரைகள் இருப்பதாகச் சொல்லுறாங்களே?” -நான்.

“தெரியும். இந்தக் காலத்துப் பொண்ணுக அந்தரங்க உறவு பத்தி நிறையவே தெரிஞ்சி வைச்சிருக்காங்க. அது விசயத்தில் கட்டுபடி ஆகாம கட்டின புருசனைக் கைவிட்டு ஒருத்தனோடு ஓடிப்போறது, தைரியமாத் தீர்த்துக்கட்டுறதெல்லாம் செய்யுறாங்க. அவங்கள்ல ஒருத்தியைக் கல்யாணம் கட்டிகிட்டு, அவளைத் திருப்திப்படுத்துறதுக்காக, மருந்து மாத்திரைகளைத் தேடி  நாயாய்ப் பேயாய் அலையுறது எனக்குப் பிடிக்கல. அதனாலதான், கல்யாணமே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.”

நண்பனின் இந்தப் பேச்சு என்னைக் கோபப்படத் தூண்டியது. கட்டுப்படுத்திக்கொண்டு, “தனியாகவே வாழ்ந்திட முடியுமா? பாலுறவுக்குப் பலானதுகளைத் தேடிப் போறது உடம்புக்குக் கெடுதல். ஒரு பெண் துணை அவசியமில்லையா?” என்றேன்.

“தேவைதான். அந்தத் தேவையை நிறைவேத்துறதுக்காகத்தான் சேர்ந்து வாழுறதில் விருப்பமுள்ள ஒருத்தியோடு சேர்ந்து வாழுறதுன்னு முடிவு பண்ணினேன். இம்மாதிரியான வாழ்க்கையில், இருவரில் ஒருத்தருக்கு விருப்பம் இல்லேன்னாலும் பிரிஞ்சுடலாம். யாரோ ஒருத்தனோடு ஓடிப்போறது, தீர்த்துக்கட்டுறதுக்கெல்லாம் இங்க இடமில்ல. குழந்தை பெத்துக்கக் கூடாதுங்கிற நிபந்தனையோடு, என்கூட வேலை பார்க்குற, ஏற்கனவே விவாகரத்துச் செய்துகிட்ட ஒருத்தியைச் சேர்த்துகிட்டுக் குடித்தனம் நடத்தினேன். ரெண்டு வருசம்தான், பிரிஞ்சுட்டோம். ஒரு வருசம்போலத் தனியா இருந்தேன். இப்போ இன்னொருத்தியைச் சேர்த்துகிட்டிருக்கேன்.....” -உணர்ச்சியற்ற தொனியில் பேசிக்கொண்டிருந்தான் தங்கராசு. 

குறுக்கீடு செய்யாமல் அவன் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“இவளோட உறவு எவ்வளவு நாள் நீடிக்கும்னு தெரியாது. அப்புறமும், புருசனால் கைவிடப்பட்டவளோ விவாகரத்துச் செய்தவளோ கிடைச்சா சேர்த்துக்கலாம்தான். ஆனா, வயசாயிட்டா இதைத் தொடர முடியாது. தனியாவே காலத்தைக் கழிச்சிட வேண்டியதுதான்.”

“வாரிசுகளே இல்லாம போனா, வயசான காலத்தில் யார் கவனிப்பாங்க?”

“இப்போ எல்லாம் ஊரூருக்கு முதியோர் இல்லங்கள் வந்திடிச்சி. பணத்தை விட்டெறிஞ்சா ரொம்ப நல்லா கவனிச்சிக்குற விடுதிகளெல்லாம் இருக்கு.”

“தீராத நோய் காரணமாகவோ, தள்ளாத வயசு காரணமாகவோ நடமாட முடியாத நிலைக்கு ஆளாகும்போது.....”

குறுக்கிட்டான் தங்கராசு, “வாரிசுகள் இருந்தா மட்டும் கட்டிலோடு ஒன்னுக்கு ரெண்டுக்குப் போயிட்டிருந்தா பணிவிடை செய்யுறாங்களா என்ன? பதினைஞ்சாயிரம் இருபதாயிரம் சம்பளத்தில் ஆள் ஏற்பாடு பண்ணிடுறாங்க. பண வசதி இல்லாதவங்க ஏதோ ஒரு வழியைக் கையாண்டு மூச்சை நிறுத்திடுறாங்க.”

“அதைச் செய்யவாவது வாரிகள் இருக்கணும் இல்லையா?’

“தேவையில்லை. இனி நடமாடவே முடியாதுங்குற நிலைக்கு ஆளாகும்போது, வாங்கி வைத்திருக்கிற தூக்க மாத்திரையில் ஒரு கைப்பிடி அளவு விழுங்கிட்டு, ‘நான் செத்திட்டிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் மூச்சு நின்னுடும். வந்து எடுத்துட்டுப் போயி அனாதைப் பிணம்னு அடக்கம் பண்ணிடுங்க’ என்று நகராட்சிக்கு ஒரு போன் செய்தி அனுப்பிட்டா எல்லாம் சுமுகமாக முடிஞ்சிடும்” என்று சிரித்தான் தங்கராசு; சிரித்துக்கொண்டே இருந்தான் என்னிடமிருந்து விடை பெறும்வரை. அது விரக்தி கலந்த சிரிப்பு.

என்னால் சிரிக்க இயலவில்லை. அவன் தேர்வு செய்திருந்த வாழ்க்கை முறை பற்றிச் சிந்திக்கும் நிலையிலும் நான் இல்லை.

“தங்கராசுகளின் எண்ணிக்கை இனி வெகுவாக அதிகரிக்குமோ?” என்று மட்டும் எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அப்புறமும் எப்போதாவது இப்படிக் கேட்டுக்கொள்வது தொடர்ந்தது. 



வெள்ளி, 21 ஏப்ரல், 2023

அகில உலக ரம்ஜான் பண்டிகையும் ஆட்டுக்கறி விருந்தும்!!!

இஸ்லாம் மதம்[‘மார்க்கம்’ என்கிறார்கள்] பல நல்ல அம்சங்களை உள்ளடக்கியது என்றால் அது மிகையில்லை.

*கடவுள் அல்லா[ஹ்] ஒருவரே என்னும் கோட்பாடு.

*தாங்கள் செய்யும் எந்தவொரு நற்செயலுக்கும் இறைவனே காரணம்[”எல்லாப் புகழும் இறைவனுக்கே”] என்று சொல்லித் தன்னடக்கத்துடன் வாழ்வது.

*எந்தவொரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன்னரும், “அல்லா விரும்பினால்” என்று அவன் மீதான தங்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துதல்.

*ஒரு நாளில் 5 முறை[?]  கடவுளைத் தொழுவது கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது!

*வழிபாட்டிடத்தில்[மசூதி] சாதி வித்தியாசம், சமூக ஏற்றத்தாழ்வு என்று எந்தவொரு பாகுபாட்டிற்கும் இடம் தராமல் கூட்டமாகத் தொழுகை மேற்கொள்ளல்.

*பண்டிகை நாட்களில் ஏழைபாழைகளுக்கு உதவும் உயர் குணம்.

*விழாக்காலங்களில் பல நாட்கள் விரதம் இருந்து, கஞ்சி குடித்து வாழ்ந்து மனதைத் தூய்மைப்படுத்தும் மிக நல்ல பழக்கம்.

இப்படிப் பாராட்டுதலுக்குரிய வகையில் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்ட  இஸ்லாமியர்கள், பண்டிகைக் காலங்களுக்குரிய கடமைகளைச் செய்துமுடித்த பிறகு, ‘கறி விருந்து’ உண்டு மகிழ்ந்து பண்டிகையைக் கொண்டாடி முடிப்பது நம் நெஞ்சை உறுத்துகிறது[ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4 மணி நேரத்தில் ரூ2 கோடிக்கு ஆடுகள் விற்பனை[இன்னொரு சந்தையில் ரூ6 கோடிக்கும் மேல்] என்பது ஊடகச் செய்தி https://tamil.timesxp.com/samayam/tamilnadu/vilupuram/rs-4-crore-goats-were-sold-on-the-occasion-of-ramzan/videoshow/99661700.cms].

பண்டிகையின் தொடர்ச்சியாக, இந்தக் கறி விருந்தை நடத்துவது தேவைதானா?[இடைவெளி கொடுத்துப் பிறிதொரு நாளில் நடத்தலாம்?].

இதைக் கருணக் கடவுளான அல்லா[ஹ்] அனுமதித்திருப்பதாக வேறு சொல்கிறார்கள். சில ஆதாரங்கள் கீழே:

//கத்தியை நன்றாகத் தீட்டி, இறைவன் பெயரைச் சொல்லி அதன்[விலங்கு] கழுத்தில் அறுக்க வேண்டும்// https://m.facebook.com/JaffnaMuslim/photos/a.302926556462800/1422599547828823/

//மனிதன் தனது உணவுக்காகச் சில உயிரினங்களைக் கொல்லலாம் என்று இஸ்லாம் கூறுவது உண்மைதான்// https://eagathuvam.com.[தரப்பட்டுள்ள முகவரிகளில், உயிரினங்களைக் கொன்று உண்பது தவறல்ல என்பதற்கு மிக விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளமை அறியத்தக்கது.

கொல்லும்போது உயிர்களுக்கு வலி தெரியாமலிருக்க இஸ்லாம் கூறும் முறையை[பிஸ்மில்லாஹ் சொல்லுதல்]ப் பின்பற்றுதல் வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இங்கே நாம் குறிப்பிட விரும்புவது.....

“நன்கு தீட்டிய கத்தியால், சில வினாடி நேரம் கழுத்தை அறுத்தாலே விலங்கு வலியை உணராமல் இறந்துவிடும்’ என்பது மனிதர்களாகிய உங்களின் கண்டுபிடிப்பு.

உண்மை இதுவாக இருக்க, இச்செயலுக்குக் குரானையும் அல்லாவையும் ஏன் துணைக்கு அழைக்கிறீர்கள்?” என்பதுதான்.

ஆடோ மாடோ வேறு எந்தவொரு விலங்கோ, தவிர்க்க இயலாத காரணங்கள் இருப்பதாகச் சொல்லி, கொன்று கூறுபோட்டு, தலைக்கறி, குடல்கறி, வறுகறி, ஈரல், ரத்தப் பொறியல், பிரியாணி என்று விதம் விதமாய்ச் சமைத்து வயிறாரவும் ருசியாகவும் உண்டு மகிழலாம். தடுப்பாரில்லை.

நாம் திரும்பத் திரும்ப எழுப்ப விரும்புவது மேற்கண்ட அதே கேள்வியைத்தான்.

“உங்களின் கொலைத் தொழிலுக்குக் குரானையும் அல்லாவையும் ஏன் துணைக்கு அழைக்கிறீர்கள்?”

வலி தெரியாத வகையில் ஓர் உயிரைக் கொல்வது குற்றமல்ல என்பதை அல்லா ஏற்பதாகச் சொல்வது சரி என்றால், நமக்கு விரோதியாக உள்ள ஒருவனை வலி தெரியாத வகையில் கொல்வதும்[சில வினாடிகளில் கழுத்தை அறுத்து] தவறில்லை என்றாகிறது.

இப்படியான சமாதானைத்தை முன்வைத்து, ஒருவனை இன்னொருவன் கொல்வது குற்றமில்லை என்பதை அல்லா என்னும் நீதிபதி ஏற்கக்கூடுமாயினும், நடைமுறை வாழ்வில், நம் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் ஏற்கமாட்டார்கள். ஹி... ஹி... ஹி!!!

இது விசயத்தில் இந்துமதத்தவர்கள் புத்திசாலிகள். கருணாமூர்த்திகள் எனப்படும் பெத்தப் பெரிய கடவுள்களை வம்புக்கு இழுக்காமல், கருப்பனார், முனியப்பன், மாகாளியம்மா, மாரியம்மா என்று கறிவிருந்து உண்டு களிப்பதற்கென்றே கொஞ்சம் கடவுள்களைக் கைவசம் வைத்திருக்கிறார்கள்.

கிறித்தவர்களைப் பொருத்தவரை, ‘கொல்விருந்து’க் கோட்பாட்டை வெகு சுருக்கமாக முடித்துக்கொண்டார்கள்![புதிய ஏற்பாட்டின்படி, கிறிஸ்தவர்களுக்குக் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே அசைவ உணவுக் கட்டுப்பாடு, ‘சிலைகளுக்குப் பலியிடப்பட்ட உணவு, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சி ஆகியவற்றைத் தவிர்ப்பது மட்டுமே[en.wikipedia.org].

* * * * *

https://eagathuvam.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE/