செவ்வாய், 25 ஏப்ரல், 2023

எல்லாம் வல்ல ‘அவன்’ இருக்க ‘இது’ எதுக்கு?!

“ஆன்மா உண்டு உண்டு” என்று அடித்துச் சொல்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

கடவுளை ஏற்காத புத்த மதம் ஆன்மாவின் இருப்பை மறுக்கவில்லை. சைன மதம் நுண்ணுயிர்[பாக்டீரியா] முதலான அனைத்து உயிர்களுக்கும்[மனிதன் உட்பட] ஆன்மா உண்டு என்று நம்புகிறது.

இந்துமதம் பற்றிச் சொல்லவே வேண்டாம். இந்துமதச் சாமியார்கள் பலரும் பிழைப்பு நடத்துவதே ஆன்மாவை வைத்துத்தான்.

ஆன்மா தீயில் கருகாதது; நீரில் கரையாதது; கண்களுக்குப் புலனாகாதது; என்றென்றும் அழியாமலிருப்பது என்கிறார்களே தவிர, மதவாதிகள் எவரும் அதன் உண்மையான வடிவம் பற்றியோ, தோற்றம் நிகழ்ந்த காலம் பற்றியோ, இயக்கம் குறித்தோ தெளிவான விளக்கம் தந்ததில்லை.

‘மண்ணுலகம் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. உயிர்களின் தோற்றம் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது' என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆதிமனிதனும் அந்தக் காலக்கட்டத்திலேயே தோன்றிவிட்டதாகச் சொல்கிறார்கள்[மனிதர்களுக்குச் சிந்திக்கும் அறிவு வாய்த்தது எப்போது என்பது பற்றிய ஆய்வு இங்கு அவசியமற்றது]. https://ta.wikipedia.org/

ஆன்மாவைக் கடவுள் எனப்படுபவர் தோற்றுவித்தார் என்றால், உயிர்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில் அவர் ஆன்மாக்களையும் தோற்றுவித்திருத்தல் வேண்டும்[ஆன்மா தானாகத் தோன்றியது என்றால், அனைத்தையும் படைத்தவன் அவனே என்னும் கோட்பாடு அடிபட்டுப்போகிறது].

உயிர்கள் தோன்றுவதும் இருப்பதும் அழிவதுமான நிகழ்வுடன்[வெகு அற்பம்] ஒப்பிடும்போது அதற்கு முன்பே[கோடி கோடிக் கணக்கான ஆண்டுகள்; அவற்றை அளவிடுவது சாத்தியமில்லை] அண்டவெளியில் நட்சத்திரங்களும் கோள்களும் தோன்றுவதும் அழிவதுமாக இருந்ததும் இருப்பதும் வெகு பிரமாண்டம்; பிரமிக்க வைப்பவை.

ஆக, கடவுளின் படைப்பில்[அல்லது தற்செயலான இயற்கை நிகழ்வில்] தோன்றுதலும் இருத்தலும் அழிதலும் என்பது பொதுவானதொரு தொடர் நிகழ்வு.

இந்நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்கென்று எந்தவொரு ஏற்பாட்டையும் கடவுள் செய்ததாகத் தெரியவில்லை. மகான்களும் ஞானிகளும் அவதாரங்களும்கூட ஏதும் சொன்னதில்லை.

இது தேவை எனின், உயிர்களின் செயல்பாடுகளை[பாவம், புண்ணியம் என்பவையெல்லாம் ஆன்மிகவாதிகளின் கற்பனை] ஏதேனும் ஒரு வகையில் பதிவு செய்வது கடவுளுக்கான கடமை என்னும்போது, அவர் தனக்கு நிகராக அழிவே இல்லாத ஆன்மாக்களைப் படைப்பதற்கான அவசியம் ஏதுமில்லை.

தோன்றுவதும் இருப்பதும் அழிவதும் மட்டுமே நிரந்தரமாய் நிகழக்கூடியவை என்பது மீண்டும் நினைவுகூரத்தக்கது.

மனிதர்களுக்குப் பரிணாம வளர்ச்சியின் விளைவாக ஆறறிவு வாய்த்திருக்கிறது. அதைக்கொண்டு, தங்களின் செயல்பாடுகளில் நன்மை எது தீமை எது என்று பகுத்தறிந்து, சக மனிதர்களுக்கும் உயிர்களுக்கும் இயன்றவரை உதவிகள் செய்து வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்!

குறிப்பு:

ஆன்மா குறித்த மேற்கண்ட கருத்துகளை நீங்கள் ஏற்பீர்களா, புறக்கணிப்பீர்களா என்பது பற்றி ஏதும் அறியேன். ஆயினும், புதியதொரு கோணத்தில் அதை நான் ஆராய்ந்திருப்பதைப் பாராட்டுவீர்கள் என்பது என் நம்பிக்கை. ஹி...ஹி...ஹி!!! 

திங்கள், 24 ஏப்ரல், 2023

அதென்ன ‘செப்சிஸ்’[நடிகர் ‘சரத்பாபு’வைப் பாதித்துள்ள நோய்]?

உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்தி உருவாவதுண்டு. இந்த அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்தி, பல உறுப்புகளின் திசுக்களைத் தாக்கி அவற்றின் செயல்பாடுகளை முடக்கிவிடும். இதுவே ‘செப்சிஸ்’ நோய் எனப்படும்[Sepsis is the body's extreme response[எதிர்வினை> எதிர்ப்புச்சக்தி] to an infection. It is a life-threatening medical emergency. Sepsis happens when an infection you already have triggers a chain reaction throughout your body].

பொதுவாக, தோல், நுரையீரல், சிறுநீர்ப் பாதை ஆகியவற்றில் ஏற்படும் தொற்றுகள் இந்த நோய்க்குக் காரணமாக இருக்கலாம். சரியான நேரத்தில் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தானதாக மாறும். 

நோயின் மிக முக்கிய அறிகுறிகள்:

*அதிகக் காய்ச்சலும் விரைவான சுவாசமும். 

*காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை 101 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் உயரும், அல்லது, 96.8 டிகிரி பாரன்ஹீட்டைவிடக் குறைந்து உடல் குளிர்ச்சியடையும்.


*வேகமாக மூச்சுவாங்கும். 1 நிமிடத்திற்கு 20 தடவைக்கு மேல் சுவாசிக்க நேரும்.


*இதயத் துடிப்பு 90ஐத் தாண்டும்; தாறுமாறாகவும் துடிக்கும். இரத்த அழுத்தம் குறையும்.


*மனநிலை இயல்பானதாக இல்லாமலிருக்கும்.


*ஒட்டுமொத்த உடம்பும் பலவீனமடையும்.


*உடம்பு குளிர்வது போன்ற உணர்வு உண்டாகும்.


*மூட்டுகளிலும் விரல்களிலும் ரத்தம் உறைதல் நிகழும்.


*பல உறுப்புகளின் இயல்பான இயக்கம் தடைப்படும். குறிப்பாக, இதயம், நுரையீரல், எலும்புகள், செரிமான மண்டலம், சிறுநீரகங்கள், தோல், மூளை ஆகியவை.


இவற்றில் இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட பாதிப்புகள் இருந்தால் அது ‘செப்சிஸ் நோயின் தொடக்க நிலை எனலாம். ஏதேனும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு குணமாகிவரும் நிலையில் இந்த நோய்த் தொற்று ஏற்படுவதும் உண்டு.


இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாகிறவர்கள்:


*65 வயதைக் கடந்த முதியவர்கள்.


*நீரிழிவு, சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள்.


*கடுமையான ரத்தக் காயங்களிலிருந்து மீண்டவர்கள்.


*கர்ப்பிணிகள்.


*மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகள்.


*சிறுநீர் வடிகுழாய், சுவாசக்குழாய் போன்றவற்றைப் பயன்படுத்துபவர்கள்.


சிகிச்சை:


செப்சிஸிற்கான காரணம் மற்றும் தீவிரத்தின் அடிப்படை நிலையைப் பொருத்து மருத்துவர் வெவ்வேறு சிகிச்சை வழிகாட்டுதல்களை & நடைமுறைகளைப் பின்பற்றுவார்கள்.


செப்சிஸிற்கான சிகிச்சையானது அதன் அடிப்படைக் காரணத்தைக் கவனத்தில் கொண்டு செய்யப்படுவது. 


*உயிர்க்காற்று[ஆக்சிஜன்] செலுத்துதல், நரம்பு வழியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை வழங்குதல் மேற்கொள்ளப்படும்.


*Vasopressor மருந்துகளைப் பயன்படுத்தல்.


*கார்டிகோஸ்டீராய்டுகளைக் குறைந்த அளவுகளில் மருத்துவர்கள் பரிந்துரைக்கக்கூடும். அவர்கள் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் மற்றும் தற்காலிக நிவாரணத்திற்காகச் சில வலி நிவாரணிகளை வழங்குவார்கள்.


*தேவைப்பட்டால் டயாலிசிஸ் செய்யப்படும்.


*குடலிறக்கம் இருந்தால் அதற்குச் சிகிச்சை அளிக்கப்படும்.


தடுப்பு நடவடிக்கைகள்:


*நாள் தவறாமல் குளித்தல். அவ்வப்போது சோப்பு நீரால் கைகளைக் கழுவுதல்.


*நிமோனியா, காய்ச்சல், சின்னம்மை, மற்றும் பிற நோய்களைத் தடுக்கத் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுதல்.


*உடம்பில் ஏற்படும் காயங்களுக்கு உடனடியாகச் சிகிச்சை செய்தல்.


*ஏதேனும் சிறிய காயம் ஏற்பட்டாலும் காயத்தைச் சுத்தம் செய்வதற்கும், சரிசெய்வதற்கும் முறையான கிருமி நாசினிகளைப் பயன்படுத்துதல்.


*மருத்துவரிடம் ஆலோசிக்காமல் எந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் எடுத்துக்கொள்ளுதல் கூடாது. ஏனெனில், இது ஆண்டிபயாடிக் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். இதனால் கடுமையான தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பது கடினம்.

எச்சரிக்கை:

நோய் குணமாகும்வரை 24 மணி நேரம் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பது மிக அவசியம்.


மீண்டும் தொற்றுகள்[மேலே குறிப்பிடப்பட்டவை] ஏற்பட்டால், அது செப்சிஸாக மாறும் வாய்ப்பு உள்ளது.

இந்த நோய் பெரியவர்களைவிடவும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.


குறிப்பு: இணையங்களில் வெளியாகும் மருத்துவக் கட்டுரைகளில் பலவும் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்படுவை என்பதால், அவற்றில் மொழிப் பிழையும், குழப்பமான நடையும் இடம்பெறுதலைக் காணலாம்.
இயன்றவரை அவற்றைச் சரிசெய்து வெளியிடுகிறேன். எனவே, பிழைகள் தென்பட்டால் திருத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.